ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் விவசாயப் பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருபவர் கந்தன் (வயது 59). பணியில் சேர்ந்தது முதல் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும், பள்ளி வளாகத்தின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக தனது கற்பித்தல் பணியின் மூலம் விவசாயப் பிரிவு மாணவர்கள் 100 சதவிகித தேர்ச்சி பெறுவதை உறுதி செய்து வருகிறார். தனது மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு நின்றுவிடாமல், அவர்களின் எதிர்காலத்திற்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறார். அவரது வழிகாட்டுதலில் பயின்ற பல மாணவர்கள் கால்நடை மருத்துவர்களாகவும், விவசாயத்துறை அதிகாரிகளாகவும் உருவாகியுள்ளனர்.
கல்விப் பணியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தனி கவனம் செலுத்திய ஆசிரியர் கந்தன், மரக்கன்றுகள் நடுதல், பள்ளி வளாகத்தை பசுமையாக பராமரித்தல் உள்ளிட்ட பணிகளின் மூலம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளார். பள்ளியை பசுமைப் பூங்காவாக மாற்றியதற்காக அவரது பணியைப் பாராட்டி, கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசின் ‘பசுமை முதன்மையாளர் விருது’ வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக 2025ஆம் ஆண்டு தமிழக அரசின் ‘மஞ்சப்பை விருது’ அவருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என இரு தளங்களிலும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியர் கந்தனின் சேவையைப் பாராட்டும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘நல்லாசிரியர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.
நல்லாசிரியர் விருது பெற்றுள்ள ஆசிரியர் கந்தனுக்கு சக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கந்தனைப் பாராட்டும் வகையில், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது.