கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சிவம்பட்டியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரதாப் (வயது 41). தனது கல்குவாரியை விரிவாக்கம் செய்ய அனுமதி கேட்டு, ஓசூரில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமனை சந்தித்துள்ளார். ஆவணங்களைப் பார்த்த அதிகாரி, “15 லட்சம் ரூபாய் கொடுங்க… சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றிதழ் உடனே கைக்கு வரும்!” எனத் தடாலடியாக லஞ்சம் கேட்டிருக்கிறார்.
‘15 லட்சமா?’ என பிரதாப் அதிர்ந்துபோக, மனமிறங்கி லஞ்சத் தொகையை 10 லட்சமாக குறைத்துக் கொண்ட அதிகாரி புருஷோத்தமன், “முதல் தவணையாக 3 லட்ச ரூபாயை சேலத்துல இருக்குற என் ஏஜென்ட் சிவக்குமார்கிட்ட கொடுத்திடுங்க” எனக் கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், நேராக லஞ்ச ஒழிப்புத் துறையின் கதவுகளைத் தட்டினார். சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான அதிரடிப் படை, ரசாயனம் தடவிய 3 லட்ச ரூபாயை தொழிலதிபர் பிரதாப்பிடம் கொடுத்து அனுப்பியது.
திட்டமிட்டபடி சேலம் ஐந்து சாலை சந்திப்பில் வைத்து, இடைத்தரகர் சிவக்குமார் அனுப்பிய உதவியாளரான முருகன் அந்தப் பணத்தை வாங்கிய நொடியில், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவரைப் பொறிவைத்து மடக்கிப் பிடித்தனர். முருகன் கொடுத்த தகவலின் பேரில் சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் இடைத்தரகர் சிவக்குமார் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, சேலம் தாசநாயக்கன்பட்டியில் உள்ள இடைத்தரகர் சிவக்குமாரின் வீட்டிற்குச் சோதனையிடச் சென்ற லஞ்ச ஒழிப்புப் படையினருக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வெறும் இடைத்தரகரான சிவக்குமார், சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் அரண்மனை போல் கட்டியிருந்த பிரமாண்ட பங்களாவைக் கண்டு அதிகாரிகள் வாயடைத்துப் போயினர். அந்த வீட்டில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், 7 கிலோ தங்கம், 27 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் அவர் ஆஸ்திரேலியாவில் பல கோடிகளை முதலீடு செய்ததற்கான அதிர்ச்சி தரும் ஆவணங்கள் சிக்கின.
ஒரு சாதாரண இடைத்தரகரான சிவக்குமார், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் பலருடன் தொடர்பில் இருந்துவந்ததும், அவர்களோடு கூட்டுசேர்ந்து பல நூறு கோடிகளைச் சுருட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவக்குமார் ஜாமீனில் வெளியே வந்து வெளிநாடு தப்பி ஓடாமல் இருக்க, அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தயாராகி வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள், அதிகாரிகளை மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறப்படும் போலி சமூக ஆர்வலர்கள் மற்றும் போலி பத்திரிகையாளர்கள் குறித்த தகவல்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திரட்டி வருகின்றனர். அவர்களின் தொடர்புகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.