ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே ஈங்கூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளை மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாக விவகாரம், கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
பள்ளி நிர்வாகப் பிரச்சினையை பேசித் தீர்ப்பதாகக் கூறி, ரூ.1 கோடி ரொக்கப் பணத்தையும், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களையும் பெற்றுக்கொண்டு ‘கட்டப் பஞ்சாயத்து’ செய்வதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலு மீது ஈரோடு எஸ்.பியிடம் அறக்கட்டளைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி பரபரப்பு புகார் அளித்திருந்தார்.
அறக்கட்டளை தலைவரான மாமனார் ஈஸ்வரமூர்த்திக்கும், பள்ளியின் தாளாளரும் அவரது சொந்த மருமகனுமான பிரவீனுக்கும் இடையே எழுந்த குடும்ப மற்றும் நிர்வாக மோதலில், அரசியல் பிரமுகர்கள் தலையிட்டு மிரட்டுவதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து ‘தி வெஸ்ட்’ ஊடகத்திற்கு கொ.ம.தே.க மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலு மற்றும் அவரது வழக்கறிஞர் பிரத்யேக விளக்கமளித்துள்ளனர்.
“எந்த மோசடியும் செய்யவில்லை; தேடி வந்தது அவர்தான்!”
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த கே.கே.சி.பாலு, “நான் எந்த மோசடியும் செய்யலைங்க. அப்படி ஏதாவது தப்பு செஞ்சிருந்தாத்தானே பயப்படணும்? அவங்களேதான் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தாங்க. இரண்டு தரப்பும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாங்க. அந்த ஒப்பந்தத்துல என்ன சொல்லப்பட்டிருக்கோ, அதன்படிதான் நான் நடந்துகிட்டேன். மற்றபடி எந்தப் பணத்தையும், நில ஆவணத்தையும் நான் என்னோட வச்சுக்கலை.
எனக்குன்னு ஒரு மனசாட்சி இருக்குங்க! அந்த மனசாட்சிக்கு விரோதமில்லாம, எந்த பைசாவும், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம, சொந்த உறவுங்கிற முறையில் ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி வைக்கத்தான் நான் முயற்சி செஞ்சேன். ஆனா அவங்க அதைச் சரியா பயன்படுத்திக்கலை. அவங்களுக்குள்ள எந்த புரிதலும் இல்லாம போயிடுச்சு.”
இந்த விவகாரத்துல நான் தானா போய் தலையிடவே இல்லை. ஈஸ்வரமூர்த்தி ஆளுங்கதான் என் வாசலைத் தேடி வந்தாங்க. ஒரு தடவை இல்லைங்க… நாலு தடவை வந்தாங்க! அதுமட்டுமில்லாம, ஒரு மிகப்பெரிய விஐபியோட ரெகமெண்டேஷன்ல ‘இதை முடிச்சுக்கொடுங்க’னு சொல்லி வந்தாங்க.
ஒரு நல்ல எண்ணத்துலதான் நான் இதைச் செய்ய வந்தேன். ஆனா, கடைசியில என்னையவே கேவலமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்குப் பிறகுதான் இந்த விவகாரத்துல இருந்து நான் ஒதுங்கிட்டேன்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தையும், ஆவணத்தையும் பிரவீன்கிட்டேயே கொடுத்துட்டோம். இனி ஈஸ்வரமூர்த்தி பிரவீன்கிட்ட போயி கேட்டுக்க வேண்டியதுதான்!” எனத் தெரிவித்தார்.
“சட்டப்பூர்வ சமரசமே… கட்டப்பஞ்சாயத்து அல்ல!”
கே.கே.சி.பாலுவின் வழக்கறிஞர் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசுகையில், “இரு தரப்பினரும் தாங்களாகவே முன்வந்துதான் இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்தார்கள். அதற்காக 90 நாட்கள் கால அவகாசம் கொடுத்து ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் ஈஸ்வரமூர்த்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. ஒப்பந்தத்தை மீறியதாலேயே, விதிமுறைகளின்படி பணமும் ஆவணங்களும் பிரவீனிடம் ஒப்படைக்கப்பட்டன.
சட்டத்தில் Alternate Dispute Resolution – ADR முறைக்கு இடமிருக்கிறது. அதாவது இருதரப்பு சம்மதத்தின் அடிப்படையில் ஒரு பொதுவான நபரை நாடலாம். அதனடிப்படையிலேயே இரு தரப்பும் ஒப்புக்கொண்ட பொதுவான நபராக கே.கே.சி.பாலு பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் ஒன்றும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர் அல்ல; அது ஊருக்கே தெரியும். அவர் இதை ஒரு சேவையாகத் தான் செய்து வருகிறார். அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒப்பந்தத்தை ஈஸ்வரமூர்த்தி மீறியதுமே, நீதிமன்றத்தை அணுகிக் கொள்ளுமாறு கூறிவிட்டு கே.கே.சி.பாலு அவர்கள் இதிலிருந்து விலகிவிட்டார். பள்ளியை விற்கச் சொல்லி மிரட்டியதாகக் ஈஸ்வரமூர்த்தி வைத்துள்ள குற்றச்சாட்டில் துளிகூட உண்மையில்லை” என முடித்துக் கொண்டார்.
ஈஸ்வரமூர்த்தி கொடுத்திருக்கும் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் கே.கே.சி.பாலு தரப்பு விளக்கம் தொடர்பாக காவல்துறை மேற்கொள்ளும் விசாரணை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளே இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த உண்மைகளை வெளிக்கொண்டு வரும்.
மாமனாருக்கும் மருமகனுக்குமான குடும்பப் பிரச்னையில், பள்ளியில் பயின்றுவரும் சுமார் 750 குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அவர்களின் பெற்றோர் பதற்றத்துடன் உள்ளனர். எனவே, பள்ளிக் குழந்தைகளின் நலன்கருதியாவது இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு எட்டப்பட்ட வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.
– தி வெஸ்ட் செய்திப் பிரிவு
*****
📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்!
👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17