“வசை பாட விரும்பவில்லை… மனநிறைவோடு விலகுகிறேன்!” – எடப்பாடிக்கு ‘நாகரிக’ குட்பை சொன்ன முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ!

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தபடியே, கட்சியிலிருந்து விலகுவதாக ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு தலைமுறைகளாக தங்கள் குடும்பம் அ.தி.மு.க-வில் பயணித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ராஜாஜிருஷ்ணன், தனது தந்தை எம்.ஜி.ஆர். காலத்திலேயே அ.தி.மு.க., ஒன்றியக் கழகச் செயலாளராக பணியாற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், 1998-ல் கட்சிப் பொறுப்பில் தொடங்கி, 2000-ல் ஒன்றியக் கழகச் செயலாளராகவும், 2001-ல் யூனியன் சேர்மனாகவும், 2006-ல் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் உள்ளாட்சியில் வெற்றி பெற்றதாகவும் தனது அரசியல் பயணத்தை பட்டியலிட்டுள்ளார். குறிப்பாக, 2016-ல் ஜெயலலிதாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து, அவரது ஆதரவுடன் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

விலகல் கடிதம் என்றாலே வழக்கமாக குற்றச்சாட்டு, விமர்சனம், அதிருப்தி என அரசியல் ‘வெடி’கள் கிளம்பும். ஆனால், ராஜாகிருஷ்ணனின் கடிதம் அதற்கு மாறாக இருக்கிறது. தன்னை அரசியலில் அறிமுகப்படுத்திய ஜெயலலிதாவுக்கும், தனது தொகுதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பண்ணன் உள்ளிட்டோருக்கும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி கூறியுள்ளார்.

அதே நேரத்தில், “நட்புடன் பழகிய நான் நாகரிகமாகவும், நற்பெயரோடும் விலக விரும்புகிறேன். இருக்கும் போது துதி பாடிவிட்டு, வெளியில் செல்லும்போது வசை பாட எனக்கு உடன்பாடு இல்லை” என வார்த்தைகளில் பொடி வைத்து சூசகமாக தன்னுடைய அதிருப்தியை கோடிட்டுக் காட்டியிருக்கிறார். 

“விலகுகிறேன்… ஆனால் காரணத்தை இப்போது சொல்லவில்லை!” எனக் கூறியிருக்கும் ராஜாகிருஷ்ணன், ‘விலகலுக்கான காரணத்தை எடப்பாடியாருக்கு கடிதம் வாயிலாக விரிவாக தெரிவிப்பேன்!’ என்று ராஜாஜிருஷ்ணன் கூறியிருப்பது பல்வேறு அரசியல் யூகங்களை கிளப்பியுள்ளது. அவரது விலகலுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? அவரது அடுத்த அரசியல் நகர்வு எந்தத் திசையில் இருக்கும்? என்பதே தற்போது ஈரோடு மாவட்ட அரசியலில் முக்கியமாக கவனிக்கப்படும் கேள்வியாக உள்ளது. 

பிற செய்திகள்

Scroll to Top