காரில் விழுந்த ‘அந்த ஒரு பொருள்’… நொடியில் லாக் ஆன பிரேக்! – திருப்பூரில் 3 வாகனங்கள் நொறுங்கி பகீர் விபத்து

திருப்பூர் மன்னரை பகுதியில் இருந்து செங்கப்பள்ளி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே கார் பயணித்துக் கொண்டிருந்தபோது, காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில் திடீரென ஓட்டுநரின் கால் பகுதியில் கீழே விழுந்து, பிரேக் பெடலுக்கு அடியில் லாவகமாகப் போய் மாட்டிக்கொண்டது.

காரை நிறுத்த ஓட்டுநர் பிரேக்கை மிதித்தபோது, பாட்டில் அடைத்துக் கொண்டதால் பிரேக் பிடிக்க முடியவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகமாக மோதியது. அந்த வேகத்திலும் நிற்காமல் பாய்ந்து சென்று, எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீதும் பலமாக மோதி நின்றது.

இந்தத் தொடர் விபத்தில், ஆட்டோ அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர், விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் மற்றொரு காரில் பயணம் செய்தவர்கள் என 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக இதில் உயிர்ப்பலி எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் படுகாயமடைந்த மொத்தம் 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே எக்காரணம் கொண்டும் தண்ணீர் பாட்டில்கள், பொம்மைகள் போன்ற பொருட்களை வைக்காதீர்கள்! பிரேக் பெடலுக்கு அடியில் அது உருண்டு சென்றால் பிரேக் இயங்காமல் போகும். ஒரு சிறிய அலட்சியம், உயிரையே பறிக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என்பதற்கு இந்த விபத்தே சாட்சி!

பிற செய்திகள்

Scroll to Top