நொய்யல் ஆற்றை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, திருப்பூர் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
“இயற்கையின் இதயம் காப்போம்” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் உதயம் பவுண்டேஷன் சார்பில் ‘வனத்துக்குள் நொய்யல்’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் இருந்து நொய்யல் ஆற்றுப்படுகையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.5 கோடி செலவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியை சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என். சுகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் திருப்பூர் தொழில்துறையினர் என பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக பங்கேற்றனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நொய்யல் ஆற்றங்கரையோரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
நொய்யல் ஆற்றை தூய்மையாகவும், பசுமையாகவும் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.