August 22, 2026

மாவட்டம்

‘நொய்யலை காப்போம்!’ – திருப்பூரில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

நொய்யல் ஆற்றை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, திருப்பூர் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். “இயற்கையின் இதயம் காப்போம்” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் உதயம் பவுண்டேஷன் சார்பில் ‘வனத்துக்குள் நொய்யல்’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் இருந்து நொய்யல் ஆற்றுப்படுகையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.5 கோடி செலவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியை சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என். சுகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் திருப்பூர் தொழில்துறையினர் என பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக பங்கேற்றனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நொய்யல் ஆற்றங்கரையோரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நொய்யல் ஆற்றை தூய்மையாகவும், பசுமையாகவும் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு

13 மா.செக்களுக்கு ‘கெட் அவுட்’, குறுநில மன்னர் முறைக்கு முடிவுரை! – அதிரடிக்குத் தயாராகும் ஸ்டாலின்!

தி.மு.க-வில் நீண்டகாலமாக ‘குறுநில மன்னர்கள்’ போல அதிகாரம் செலுத்தி வரும் மூத்த நிர்வாகிகளுக்கு ‘செக்’ வைக்கும் வகையில், கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இன்று பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் இந்த அமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்கின்றனர். 13 மா.செ-க்களுக்கு ‘கெட் அவுட்’! புதிய விதியின்படி, மாவட்டச் செயலாளர் பதவியில் இருப்பவரின் வயது 70-ஐ தாண்டக் கூடாது. மேலும், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஆகிய 70 வயதைக் கடந்துள்ள 13 சிட்டிங் மாவட்டச் செயலாளர்களுக்கு பதவியில் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் எ.வ.வேலு, முத்துசாமி உள்ளிட்ட 7 முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளும் பறிபோக இருப்பது தான், தி.மு.க, வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. 77-ல் இருந்து 110 மாவட்டங்கள்! தற்போது உள்ள 77 கழக மாவட்டங்களை 110 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் மாவட்டச் செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பழைய முகங்களின் ஆதிக்கம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், புதிய அமைப்பில் ‘மாநகரச் செயலாளர்’ என்ற பதவி நீக்கப்பட உள்ளது. கிளைச் செயலாளருக்கு (45 வயது), வட்டச் செயலாளருக்கு (50 வயது), ஒன்றியச் செயலாளருக்கு (60 வயது) என கீழ்மட்ட நிர்வாகப் பதவிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஒரு பதவியை வகிக்க முடியாது. மேலும், புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழகங்களின் புதிய நிர்வாக அமைப்புகளை 15 நாட்களுக்குள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘குறுநில மன்னர்களுக்கு’ முடிவா? திமுக தலைமை மேற்கொள்ளவிருக்கும் இந்த மாற்றங்கள் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “நீண்ட காலத்துக்குப் பிறகு திமுகவில் நடைபெறும் மிகப்பெரிய அமைப்பு ரீதியான மாற்றம் இது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை சரிசெய்வதற்கான முதல் அடியை தலைமை எடுத்துள்ளது. இதன்மூலம், கட்சியில் பல ஆண்டுகளாக ‘குறுநில மன்னர்கள்’ போல ஆதிக்கம் செலுத்தி வந்த அதிகார மையங்களின் ஆதிக்கம் குறைந்து, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், 13 பேரில் பலர் முன்னாள் அமைச்சர்கள். இவர்களது மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகும் நிலையில், புதிதாக வருபவர்களுக்கு அவர்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள்? உள்ளூர் அரசியலில் கோஷ்டிப் பூசல் இல்லாமல் கட்சிக்காக பணியாற்றுவார்களா? என்பதுதான் அடுத்த கேள்வி” என்றனர். மாவட்டங்களை அதிகரித்து, வயது வரம்பை கொண்டு வந்து, பதவிக்காலத்துக்கும் ‘செக்’ வைத்துள்ள திமுக தலைமை, அடுத்ததாக எந்தெந்த மாவட்டங்களில் யாரை களமிறக்கப் போகிறது என்பதே இப்போது கட்சிக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாடு

செய்கூலி, சேதாரம் ‘ஒரு பைசா’ மட்டுமே! – சர்ச்சையைக் கிளப்பும் ரூ.755 கோடி தங்க மோதிரம் திட்டம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், இதற்கான டெண்டர் விவகாரம் தற்போது அரசியல் மற்றும் பொதுவெளியில் கவனம் பெற்றுள்ளது.  ஆண்டுக்கு 4.41 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்துக்காக ரூ.755.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட செலவுக்கு ஒரு மோதிரத்துக்கு வெறும் 1 பைசா என ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் விலைப்புள்ளி தாக்கல் செய்திருப்பதுதான் சர்ச்சையின் மையமாகியுள்ளது.  தங்கத்தின் விலையை தனியாக வழங்கும் நிலையில், செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், பேக்கிங், காப்பீடு, போக்குவரத்து என அனைத்து செலவுகளையும் சேர்த்து ஒரு மோதிரத்திற்கான விலைக்கு டெண்டர் கோரியிருந்தது தமிழக அரசு. இந்த டெண்டரில் 11 முன்னணி நகை நிறுவனங்கள் பங்கேற்றதாகவும், அவற்றில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு மோதிரத்திற்கு செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்காக ரூ.0.01 என மிகக் குறைந்த விலையை குறிப்பிட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பின்னர் பங்கேற்ற நிறுவனங்களிடம் இதே விலையை ஏற்க முடியுமா என கேட்கப்பட்டதில், கல்யாண் ஜூவல்லர்ஸ் மட்டுமே ஒப்புக்கொண்டதாக அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து ஜோய் ஆலுக்காஸுக்கு 70 சதவீதமும், கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு 30 சதவீதமும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு 1 பைசா என்ற விலை எவ்வாறு சாத்தியமானது? 1 பைசா என்பது நிறுவனங்களுக்கு உண்மையான செலவுகளை ஈடுகட்டக்கூடிய தொகையா? அல்லது மிகப்பெரிய அளவில் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படுவதால் வேறு வணிகக் கணக்கு ஏதேனும் இதில் உள்ளதா? என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. விஜய் 2010ஆம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகள் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்து வந்ததோடு, அவர்களின் விளம்பரப் படங்களிலும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், புதுச்சேரி மற்றும் கோவையில் அமைக்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் கடைகளையும், விஜய் நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனமும், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை தான். சமீபத்தில் கூட, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ஜான் ஆலுக்காஸ், முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின. இந்த சந்திப்பு நடந்த சில நாட்களிலேயே விஜய்யுடன் விளம்பரத் தொடர்பில் இருந்துவந்த, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு ரூ.755 கோடி மதிப்பிலான தமிழக அரசுத் திட்டத்தின் டெண்டர் கொடுக்கப்பட்டிருப்பதும், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மிகக்குறைந்த விலைக்கு டெண்டர் கோரியதும், திட்டமிட்டு நடந்ததா? என்கிற சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கிறது.

சினிமா

சொதப்பிய ‘ஜெயிலர் 2’ பாடல்? – சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான ‘Ala Bolelo’ நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ‘ஜெயிலர்’ படத்தின் ‘Kaavaalaa’, ‘Hukum’ போன்ற பாடல்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே, முதல் தடவை கேட்கையிலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் அனிருத்தின் வழக்கமான மேஜிக் ஹூக் இதில் இல்லை என்றும், “below average”, “Boring” என்றும், ஆக இருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர்.  அதேபோல், பாடலில் இடம்பெற்றுள்ள மலையாள வரிகளின் உச்சரிப்பு சரியாக இல்லை என கேரள ரசிகர்களிடமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், “தலைவரின் மாஸ் பாட்டிற்கு நடனமாட எத்தனையோ முன்னணி நடிகைகள் காத்துக்கிடக்கும் போது, மார்க்கெட் இழந்த இனியாவை ஆடவைத்து ஏனய்யா இம்சை செய்கிறீர்கள்?” என காஸ்டிங் தேர்வை நோக்கியும் ரசிகர்கள் தங்களின் கடும் அதிருப்தியைக் கொட்டி வருகின்றனர்.  மொத்தத்தில், மாபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான ‘Ala Bolelo’ பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியதால், இணையத்தில் இதைப் பற்றிய மீம்களும் விமர்சனப் பதிவுகளுமே தற்போது வைரலாகி வருகின்றன. 

மாவட்டம்

ஈரோடு மாவட்டத்திற்கு 2 புதிய நீதிமன்றங்கள். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு!

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நேற்று, சட்டதுறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பதிலளித்து பேசிய மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஈரோடு மாவட்டதில், இரண்டு புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஈரோட்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989-இன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கான ஒரு சிறப்பு நீதிமன்றம் ரூ.1.93 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், பெருந்துறையில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், பெருந்துறையில், ரூ.2.29 கோடி செலவில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனை, பெருந்துறை வழக்கறிஞர் சங்கத்தினர், இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Scroll to Top