தி.மு.க-வில் நீண்டகாலமாக ‘குறுநில மன்னர்கள்’ போல அதிகாரம் செலுத்தி வரும் மூத்த நிர்வாகிகளுக்கு ‘செக்’ வைக்கும் வகையில், கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இன்று பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் இந்த அமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்கின்றனர்.
13 மா.செ-க்களுக்கு ‘கெட் அவுட்’!
புதிய விதியின்படி, மாவட்டச் செயலாளர் பதவியில் இருப்பவரின் வயது 70-ஐ தாண்டக் கூடாது. மேலும், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில்,
- காஞ்சிபுரம் தெற்கு – க.சுந்தர்
- ராணிப்பேட்டை – ஆர்.காந்தி
- திருவண்ணாமலை தெற்கு – எ.வ.வேலு
- விழுப்புரம் வடக்கு – செஞ்சி மஸ்தான்
- சேலம் கிழக்கு – எஸ்.ஆர்.சிவலிங்கம்
- ஈரோடு தெற்கு – சு.முத்துசாமி
- தஞ்சாவூர் வடக்கு – சாக்கோட்டை க.அன்பழகன்
- புதுக்கோட்டை தெற்கு – ரகுபதி
- மதுரை மாநகர் – கோ.தளபதி
- தேனி தெற்கு – நா.ராமகிருஷ்ணன்
- விருதுநகர் – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
- தூத்துக்குடி தெற்கு – அனிதா ராதாகிருஷ்ணன்
- திருநெல்வேலி மேற்கு – இரா.ஆவுடையப்பன்
ஆகிய 70 வயதைக் கடந்துள்ள 13 சிட்டிங் மாவட்டச் செயலாளர்களுக்கு பதவியில் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் எ.வ.வேலு, முத்துசாமி உள்ளிட்ட 7 முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளும் பறிபோக இருப்பது தான், தி.மு.க, வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
77-ல் இருந்து 110 மாவட்டங்கள்!
தற்போது உள்ள 77 கழக மாவட்டங்களை 110 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் மாவட்டச் செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பழைய முகங்களின் ஆதிக்கம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், புதிய அமைப்பில் ‘மாநகரச் செயலாளர்’ என்ற பதவி நீக்கப்பட உள்ளது.
கிளைச் செயலாளருக்கு (45 வயது), வட்டச் செயலாளருக்கு (50 வயது), ஒன்றியச் செயலாளருக்கு (60 வயது) என கீழ்மட்ட நிர்வாகப் பதவிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஒரு பதவியை வகிக்க முடியாது. மேலும், புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழகங்களின் புதிய நிர்வாக அமைப்புகளை 15 நாட்களுக்குள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘குறுநில மன்னர்களுக்கு’ முடிவா?
திமுக தலைமை மேற்கொள்ளவிருக்கும் இந்த மாற்றங்கள் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “நீண்ட காலத்துக்குப் பிறகு திமுகவில் நடைபெறும் மிகப்பெரிய அமைப்பு ரீதியான மாற்றம் இது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை சரிசெய்வதற்கான முதல் அடியை தலைமை எடுத்துள்ளது. இதன்மூலம், கட்சியில் பல ஆண்டுகளாக ‘குறுநில மன்னர்கள்’ போல ஆதிக்கம் செலுத்தி வந்த அதிகார மையங்களின் ஆதிக்கம் குறைந்து, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆனால், 13 பேரில் பலர் முன்னாள் அமைச்சர்கள். இவர்களது மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகும் நிலையில், புதிதாக வருபவர்களுக்கு அவர்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள்? உள்ளூர் அரசியலில் கோஷ்டிப் பூசல் இல்லாமல் கட்சிக்காக பணியாற்றுவார்களா? என்பதுதான் அடுத்த கேள்வி” என்றனர்.
மாவட்டங்களை அதிகரித்து, வயது வரம்பை கொண்டு வந்து, பதவிக்காலத்துக்கும் ‘செக்’ வைத்துள்ள திமுக தலைமை, அடுத்ததாக எந்தெந்த மாவட்டங்களில் யாரை களமிறக்கப் போகிறது என்பதே இப்போது கட்சிக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.