தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், இதற்கான டெண்டர் விவகாரம் தற்போது அரசியல் மற்றும் பொதுவெளியில் கவனம் பெற்றுள்ளது.
ஆண்டுக்கு 4.41 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்துக்காக ரூ.755.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட செலவுக்கு ஒரு மோதிரத்துக்கு வெறும் 1 பைசா என ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் விலைப்புள்ளி தாக்கல் செய்திருப்பதுதான் சர்ச்சையின் மையமாகியுள்ளது.

தங்கத்தின் விலையை தனியாக வழங்கும் நிலையில், செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், பேக்கிங், காப்பீடு, போக்குவரத்து என அனைத்து செலவுகளையும் சேர்த்து ஒரு மோதிரத்திற்கான விலைக்கு டெண்டர் கோரியிருந்தது தமிழக அரசு. இந்த டெண்டரில் 11 முன்னணி நகை நிறுவனங்கள் பங்கேற்றதாகவும், அவற்றில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு மோதிரத்திற்கு செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்காக ரூ.0.01 என மிகக் குறைந்த விலையை குறிப்பிட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பின்னர் பங்கேற்ற நிறுவனங்களிடம் இதே விலையை ஏற்க முடியுமா என கேட்கப்பட்டதில், கல்யாண் ஜூவல்லர்ஸ் மட்டுமே ஒப்புக்கொண்டதாக அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து ஜோய் ஆலுக்காஸுக்கு 70 சதவீதமும், கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு 30 சதவீதமும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு 1 பைசா என்ற விலை எவ்வாறு சாத்தியமானது? 1 பைசா என்பது நிறுவனங்களுக்கு உண்மையான செலவுகளை ஈடுகட்டக்கூடிய தொகையா? அல்லது மிகப்பெரிய அளவில் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படுவதால் வேறு வணிகக் கணக்கு ஏதேனும் இதில் உள்ளதா? என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

விஜய் 2010ஆம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகள் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்து வந்ததோடு, அவர்களின் விளம்பரப் படங்களிலும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், புதுச்சேரி மற்றும் கோவையில் அமைக்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் கடைகளையும், விஜய் நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனமும், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை தான். சமீபத்தில் கூட, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ஜான் ஆலுக்காஸ், முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின. இந்த சந்திப்பு நடந்த சில நாட்களிலேயே விஜய்யுடன் விளம்பரத் தொடர்பில் இருந்துவந்த, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு ரூ.755 கோடி மதிப்பிலான தமிழக அரசுத் திட்டத்தின் டெண்டர் கொடுக்கப்பட்டிருப்பதும், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மிகக்குறைந்த விலைக்கு டெண்டர் கோரியதும், திட்டமிட்டு நடந்ததா? என்கிற சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கிறது.