Author name: admin

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ரூ.1 கோடி பணம்… ரூ.50 கோடி நில ஆவணங்கள்! ‘கட்டப் பஞ்சாயத்து’ பெயரில் மோசடி? – கொ.ம.தே.க பொருளாளர் கே.கே.சி.பாலு மீது பரபரப்பு புகார் 

பள்ளி நிர்வாகப் பிரச்சினையை பேசி தீர்த்து வைப்பதாகக் கூறி ரூ.1 கோடி பணத்தையும், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களின் அசல் பத்திரங்களையும் பெற்றுக்கொண்டு, அவற்றை திருப்பித் தராமல் மிரட்டுவதாக கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி அளித்துள்ள இந்தப் புகாரில், பள்ளி நிர்வாகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி பணம் மற்றும் நில ஆவணங்கள் பெற்றதாகவும், அரசியல் முக்கியப் புள்ளிகள் சிலர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் அதிரடி கிளப்பியிருக்கிறார் பள்ளி நிர்வாகத்தில் பிரச்சினை… ‘பஞ்சாயத்து’க்கு சென்ற விவகாரம்!  ஈஸ்வரமூர்த்தி அளித்துள்ள புகாரில், “ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூர் கிராமத்தில், ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளையின் கீழ், 2014-ம் ஆண்டு முதல் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியை நான் நடத்தி வருகிறேன். பள்ளியின் தாளாளராக இருந்த பிரவீன், பள்ளி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளைச் செய்தார். எனவே, அவரை பள்ளி நிர்வாகத்தில் இருந்து நீக்கிவிட்டோம். அதனையடுத்து, சென்னிமலை தி.மு.க., ஒன்றியச் செயலாளர் பிரபு மற்றும் சென்னிமலை தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் (எ) சுப்பிரமணி ஆகியோருடன் பிரவீன் சேர்ந்துகொண்டு, பள்ளி சொத்துகளை அபகரிக்க முயன்றார். இப்படியான சூழலில், இந்தப் பிரச்சினையைப் பேசி தீர்த்து வைப்பதாகக் கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளரான கே.கே.சி. பாலு, அ.தி.மு.க., முன்னாள் பெருந்துறை தொகுதி செயலாளர் திங்களூர் கந்தசாமி, கொ.ம.தே.க ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பவானியைச் சேர்ந்த கொங்கு ராஜா ஆகியோர் முன்வந்தனர். ‘முன்பணமாக ரூ.1 கோடி… அசல் பத்திரங்களையும் கொடுங்கள்!’ 2025 செப்டம்பர் 1-ம் தேதி பெருந்துறை பேருந்து நிலையம் அருகே உள்ள கே.கே.சி.பாலுவின் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வரச் சொன்னவர்கள், ‘பள்ளி நிர்வாகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு முன்பணமாக ரூ.1 கோடியும், பள்ளியின் பெயரில் உள்ள நிலங்களின் அசல் பத்திரங்களையும் வழங்க வேண்டும்’ எனக் கூறினர். இதனை நம்பி அறக்கட்டளை உறுப்பினர்கள் 15 பேரும் கடன் பெற்று, 2025 செப்டம்பர் 9-ம் தேதி ரூ.1 கோடி பணத்தையும், மூன்று நிலங்களின் அசல் பத்திரங்களையும் ஒப்படைத்தேன். ‘பள்ளியை விற்றுவிடு’… மிரட்டல் விடுத்தாரா கே.கே.சி.பாலு? பணம் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னரும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஒருகட்டத்தில், ‘பள்ளியை விற்றுவிட்டால் பிரச்னை முடிந்துவிடும்’ எனக்கூறிய கே.கே.சி.பாலு, ‘நான் சொல்லும் ரேட்டுக்கு, நான் சொல்லும் நபருக்கு பள்ளியை எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், என்னிடம் உள்ள ரூ.1 கோடி பணத்தையும், மூன்று அசல் ஆவணங்களையும் திருப்பித் தர முடியாது. ஆவணங்களை வைத்து நான் பள்ளியை விற்றுவிடுவேன்’ என மிரட்டினார். ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள்! ரூ.1 கோடி பணமும், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களின் மூன்று அசல் பத்திரங்களும் வழங்கப்பட்டு 11 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், இன்னும் அவற்றை திருப்பித் தராமல் நம்பிக்கை மோசடி செய்து, கட்டப்பஞ்சாயத்து செய்து, சொத்துகளை எழுதிக் கொடுக்க மிரட்டிவருகின்றனர். எனவே, கே.கே.சி. பாலு மற்றும் மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நான் கொடுத்த ரூ.1 கோடி பணத்தையும், மூன்று நிலங்களின் அசல் ஆவணங்களையும் மீட்டுத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். புகாரளித்த ஈஸ்வரமூர்த்தியிடம் பேசினோம். “தாளாளராக இருந்து பள்ளியில் பல்வேறு முறைகேடுகளைச் செய்த பிரவீன் வேறு யாருமல்ல, என்னுடைய இரண்டாவது மருமகன் தான். இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தே, கே.கே.சி.பாலுவிடம் பஞ்சாயத்துக்கு சென்றேன். ஆனால், என்னிடம் ஒருகோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை வாங்கிக்கொண்டு, திருப்பித் தராமல் மோசடி செய்து வருகின்றனர். கே.கே.சி.பாலுவை நல்லவர் என்று நினைத்திருந்தேன். அவர் இப்படியெல்லாம் செய்வார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எனக்கு மிரட்டல் விடுத்த வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. பள்ளி சொத்து முறைகேடு தொடர்பாக இதுவரை சுமார் 15 முறை புகார் கொடுத்திருப்பேன். ஆனால், எந்தவொரு நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இப்போதாவது என்னுடைய பணம் மற்றும் சொத்து ஆவணங்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். – தி வெஸ்ட் செய்திப் பிரிவு ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

இந்தியா

“காதலி கொடுத்த 3,400 லிப்ஸ்டிக் முத்தம்!” – போலீஸில் வசமாய்ச் சிக்கிய காதலன், நடந்தது என்ன?

காதலனை மகிழ்விக்க காதலி செய்த ‘சின்ன’ காரியம், கடைசியில் காதலனுக்குப் பெருத்த ஆப்பாக முடிந்துள்ள சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் வைரலாகி வருகிறது.  மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரைச் சேர்ந்தவர் ஆதித்யா சிகர்வார். இவர் தனது காரில் வீதியைச் சுற்றி வந்தபோது, வழியில் சென்ற பொதுமக்கள் அனைவரும் காரையே வியப்புடன் உற்றுப் பார்த்தனர். காரணம், அந்த காரின் வெளிப்புறம் முழுவதுமே ‘சிகப்பு லிப்ஸ்டிக்’ முத்தத் தடங்களால் நிரம்பியிருந்தது! வெளிநாடுகளில் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் ஒரு வீடியோவைப் பார்த்த ஆதித்யாவின் காதலி, அதேபோலத் தனது காதலனின் காரிலும் செய்து பார்க்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காகக் காரின் பம்பர் முதல் கூரை வரை சுமார் 4 மணி நேரம் பொறுமையாக நின்று, கிட்டத்தட்ட 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களைப் பதித்து காரையே ‘ரெட் கார்ப்பேட்’ போல மாற்றியுள்ளார். முத்த அடையாளங்களால் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட காரை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. வீடியோவுக்கு சுமார் 55 லட்சம் பார்வைகள் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், முத்த மழையில் நனைந்த காரைப் பார்த்து சாலையில் சென்றவர்கள் ஆச்சரியமடைந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். நொடிப் பொழுதில் ‘கிஸ் கார்’ (Kiss Car) புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தீயாகப் பரவியது. சோஷியல் மீடியாவில் வைரலான வீடியோ, அப்படியே போக்குவரத்து காவல்துறையின் கண்ணிலும் பட்டது. வீடியோவில் தெளிவாகத் தெரிந்த வாகனப் பதிவு எண்ணை வைத்து, காரையும் அதன் உரிமையாளரான ஆதித்யாவையும் தூக்கினர். அதனையடுத்து, பொது இடங்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் காரில் மாற்றங்கள் செய்ததாகக் கூறி, ஆதித்யாவிற்குப் போக்குவரத்து போலீஸார் ரூ.5,500 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அதுமட்டுமின்றி, “முதல்ல அந்த முத்தத்தையெல்லாம் வண்டியை விட்டுத் துடைச்சிட்டு அப்புறமா வண்டியை எடு!” என உத்தரவிட்டனர். இதையடுத்து, 4 மணி நேரமாக காதலி ஆசையாகப் பதித்த 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களையும் ஆதித்யா வாளித் தண்ணீரையும் துணியையும் வைத்து தேய்த்துத் தேய்த்து துடைத்து காரைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தார். காதலின் அடையாளமாகத் தொடங்கி, கடைசியில் அபராதத்திலும் வாளித் தண்ணீரிலும் முடிந்த இந்த ‘முத்தக் கார்’ சம்பவம் தற்போது இணையத்தில் மீம்ஸ்களாகப் பறந்து கொண்டிருக்கிறது! – தி வெஸ்ட் செய்திப் பிரிவு ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

இந்தியா

காணாமல் போன 5 அரசுப் பள்ளிகள்! கண்டுபிடிச்சா ரூ.1 லட்சம் ரொக்கம்! – எம்பி கொடுத்த அதிரடி ஆஃபர்!

பொதுவாகக் காணாமல் போன மனிதர்களையோ அல்லது தொலைந்து போன உடைமைகளையோ கண்டுபிடித்துத் தருபவர்களுக்குப் பரிசுத் தொகை அறிவிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், அரசுப் பதிவேடுகளிலேயே இருக்கும் 5 அரசுப் பள்ளிகளைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்திருப்பது இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச அரசு மீது இந்த வினோதமான குற்றச்சாட்டையும் சவாலையும் முன்வைத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங். “உ.பி அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி ஜோன்பூர் மாவட்டத்தில் உள்ள, இந்த பள்ளிகள் அனைத்தும் UDISE Plus எனப்படும் கல்வி தொடர்பான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பில், செயல்பட்டுக் கொண்டிருப்பதாக காட்டப்படுவதாகவும், நிஜத்தில் அந்தந்த முகவரிகளில் அமைந்திருக்கவே இல்லை என்றும், அவை காகிதத்தில் மட்டுமே இயங்கி வருகின்றன என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பள்ளிகள் உண்மையில் இல்லாத நிலையில் அவை எவ்வாறு தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகப் பதிவாகியுள்ளன? எனவும், பள்ளிகள் இல்லாத நிலையில் மாணவர்களுக்கான கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பெயரில் பெருந்தொகை நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் சிங் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. – தி வெஸ்ட் செய்திப் பிரிவு ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

தமிழ்நாடு

எமனாக வந்த ‘பலூன்’; 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17 ***** திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்துள்ள பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் – சத்யா தம்பதியர். துணி வியாபாரம் செய்து வரும் இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள் இரட்டையர்கள். வழக்கம்போல பெற்றோர் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது 6 வயது மகன் சோமநாத், மூச்சுப் பேச்சின்றி மயங்கிய நிலையில் வீட்டில் கீழே விழுந்து கிடந்துள்ளான். இதனைப் பார்த்து பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர், உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர்.  அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அப்போதுதான், பலூனை ஊத முயன்றபோது அல்லது விளையாடியபோது எதிர்பாராதவிதமாக பலூன் சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டதும், அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் சோமநாத் உயிரிழந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த பலூனை மருத்துவர்கள் அகற்றி வெளியே எடுத்தனர். இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பலூன் போன்ற சாதாரண விளையாட்டுப் பொருள்கூட சிறு குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. குறிப்பாக பலூனை ஊதுவது அல்லது அதன் உடைந்த துண்டுகளை வைத்து விளையாடுவது போன்ற நேரங்களில் பெற்றோர் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. – தி வெஸ்ட் செய்திப் பிரிவு ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

மாவட்டம்

“கொட்டியதை அள்ளாம ஒரு வண்டியும் நகராது!” – சிறைபிடிக்கப்பட்ட 50 லாரிகள்; அரண்டுப்போன திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் நாள்தோறும் சுமார் 700 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை பல்வேறு பகுதிகளில் சாலையோரமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது சேகரிக்கப்படும் குப்பைகளை ஊத்துக்குளி அருகே உள்ள ஏ.பெரியபாளையம் பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் பாறைக்குழியில் கொட்டி வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பைகள் கொண்டு வரப்பட்டு பாறைக்குழியில் கொட்டியுள்ளனர். தங்கள் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொடிய தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆத்திரமடைந்த ஏ. பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஒன்றுகூடி குப்பைகளை ஏற்றி வந்த லாரிகளை அதிரடியாகச் சிறைபிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஏற்கனவே பாறைக்குழியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முழுமையாக அகற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. சில மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் பொதுமக்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். திருப்பூர் மாநகராட்சியின் இந்த செயல்பாட்டிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், பாறைக்குழியில் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படுமா, இனி அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மாவட்டம்

காரில் விழுந்த ‘அந்த ஒரு பொருள்’… நொடியில் லாக் ஆன பிரேக்! – திருப்பூரில் 3 வாகனங்கள் நொறுங்கி பகீர் விபத்து

திருப்பூர் மன்னரை பகுதியில் இருந்து செங்கப்பள்ளி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே கார் பயணித்துக் கொண்டிருந்தபோது, காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில் திடீரென ஓட்டுநரின் கால் பகுதியில் கீழே விழுந்து, பிரேக் பெடலுக்கு அடியில் லாவகமாகப் போய் மாட்டிக்கொண்டது. காரை நிறுத்த ஓட்டுநர் பிரேக்கை மிதித்தபோது, பாட்டில் அடைத்துக் கொண்டதால் பிரேக் பிடிக்க முடியவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகமாக மோதியது. அந்த வேகத்திலும் நிற்காமல் பாய்ந்து சென்று, எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீதும் பலமாக மோதி நின்றது. இந்தத் தொடர் விபத்தில், ஆட்டோ அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர், விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் மற்றொரு காரில் பயணம் செய்தவர்கள் என 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில் உயிர்ப்பலி எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் படுகாயமடைந்த மொத்தம் 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே எக்காரணம் கொண்டும் தண்ணீர் பாட்டில்கள், பொம்மைகள் போன்ற பொருட்களை வைக்காதீர்கள்! பிரேக் பெடலுக்கு அடியில் அது உருண்டு சென்றால் பிரேக் இயங்காமல் போகும். ஒரு சிறிய அலட்சியம், உயிரையே பறிக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என்பதற்கு இந்த விபத்தே சாட்சி!

சினிமா

“என்னதான் விளம்பரம் செய்தாலும்…” திருப்பூர் ரசிகர்களிடம் ரியோ ராஜ் வைத்த கோரிக்கை!

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில், ரியோ ராஜ், வர்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ராம் இன் லீலா’. இப்படம் திரையிடப்பட்டு வரும் திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு படக்குழுவினர் திடீரென வருகை தந்தனர். இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், நடிகர் ரியோ ராஜ், நடிகை வர்த்திகா உள்ளிட்ட படக்குழுவினர் திரையரங்கிற்குள் நுழைந்ததும், அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர். அப்போது ரசிகர்களிடம் பேசிய படக்குழுவினர், “படத்திற்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்து வருகிறோம். அதன்படி திருப்பூருக்கும் வந்துள்ளோம்” என்றனர். நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், “திரையரங்குகளில் எங்கள் படத்தை மக்கள் ரசித்துப் பார்ப்பதும், படம் மக்களுக்கு பிடித்திருப்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. படம் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். என்னதான் விளம்பரம் செய்தாலும், மக்களின் வாய்மொழி விமர்சனம்தான் ஒரு படத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இந்தச் சின்னப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம்” என்றார்.

மாவட்டம்

“யார்ரா இவன், ஒரு செகண்ட்ல தூக்கிட்டான்?!” – திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி திருடன்’! 

திருப்பூர் கோவில் வழி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (30), அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது மனைவியுடன் புத்தாடைகள் வாங்குவதற்காக திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மனைவியுடன் துணிக்கடைக்கு சென்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது, அவர் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அருணாசலம், உடனடியாக அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, இளைஞர் ஒருவர் அப்பகுதியில் நோட்டமிட்டு, அருணாசலத்தின் இருசக்கர வாகனத்தை கேஷூவலாக அங்கிருந்து எடுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து, பைக்கின் உரிமையாளர் அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வாகனத்தை திருடிச் சென்ற நபரை அடையாளம் கண்டு பிடிக்கவும், திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்கும் முயற்சியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.   பொது இடங்களில் வண்டியை நிறுத்திட்டுப் போறீங்களா? ‘கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே… இல்லன்னா உங்க வண்டிக்கும் இதே நிலைமைதான்! 

மாவட்டம்

‘நொய்யலை காப்போம்!’ – திருப்பூரில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

நொய்யல் ஆற்றை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, திருப்பூர் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். “இயற்கையின் இதயம் காப்போம்” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் உதயம் பவுண்டேஷன் சார்பில் ‘வனத்துக்குள் நொய்யல்’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் இருந்து நொய்யல் ஆற்றுப்படுகையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.5 கோடி செலவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியை சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என். சுகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் திருப்பூர் தொழில்துறையினர் என பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக பங்கேற்றனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நொய்யல் ஆற்றங்கரையோரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நொய்யல் ஆற்றை தூய்மையாகவும், பசுமையாகவும் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு

13 மா.செக்களுக்கு ‘கெட் அவுட்’, குறுநில மன்னர் முறைக்கு முடிவுரை! – அதிரடிக்குத் தயாராகும் ஸ்டாலின்!

தி.மு.க-வில் நீண்டகாலமாக ‘குறுநில மன்னர்கள்’ போல அதிகாரம் செலுத்தி வரும் மூத்த நிர்வாகிகளுக்கு ‘செக்’ வைக்கும் வகையில், கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இன்று பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் இந்த அமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்கின்றனர். 13 மா.செ-க்களுக்கு ‘கெட் அவுட்’! புதிய விதியின்படி, மாவட்டச் செயலாளர் பதவியில் இருப்பவரின் வயது 70-ஐ தாண்டக் கூடாது. மேலும், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஆகிய 70 வயதைக் கடந்துள்ள 13 சிட்டிங் மாவட்டச் செயலாளர்களுக்கு பதவியில் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் எ.வ.வேலு, முத்துசாமி உள்ளிட்ட 7 முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளும் பறிபோக இருப்பது தான், தி.மு.க, வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. 77-ல் இருந்து 110 மாவட்டங்கள்! தற்போது உள்ள 77 கழக மாவட்டங்களை 110 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் மாவட்டச் செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பழைய முகங்களின் ஆதிக்கம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், புதிய அமைப்பில் ‘மாநகரச் செயலாளர்’ என்ற பதவி நீக்கப்பட உள்ளது. கிளைச் செயலாளருக்கு (45 வயது), வட்டச் செயலாளருக்கு (50 வயது), ஒன்றியச் செயலாளருக்கு (60 வயது) என கீழ்மட்ட நிர்வாகப் பதவிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஒரு பதவியை வகிக்க முடியாது. மேலும், புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழகங்களின் புதிய நிர்வாக அமைப்புகளை 15 நாட்களுக்குள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘குறுநில மன்னர்களுக்கு’ முடிவா? திமுக தலைமை மேற்கொள்ளவிருக்கும் இந்த மாற்றங்கள் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “நீண்ட காலத்துக்குப் பிறகு திமுகவில் நடைபெறும் மிகப்பெரிய அமைப்பு ரீதியான மாற்றம் இது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை சரிசெய்வதற்கான முதல் அடியை தலைமை எடுத்துள்ளது. இதன்மூலம், கட்சியில் பல ஆண்டுகளாக ‘குறுநில மன்னர்கள்’ போல ஆதிக்கம் செலுத்தி வந்த அதிகார மையங்களின் ஆதிக்கம் குறைந்து, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், 13 பேரில் பலர் முன்னாள் அமைச்சர்கள். இவர்களது மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகும் நிலையில், புதிதாக வருபவர்களுக்கு அவர்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள்? உள்ளூர் அரசியலில் கோஷ்டிப் பூசல் இல்லாமல் கட்சிக்காக பணியாற்றுவார்களா? என்பதுதான் அடுத்த கேள்வி” என்றனர். மாவட்டங்களை அதிகரித்து, வயது வரம்பை கொண்டு வந்து, பதவிக்காலத்துக்கும் ‘செக்’ வைத்துள்ள திமுக தலைமை, அடுத்ததாக எந்தெந்த மாவட்டங்களில் யாரை களமிறக்கப் போகிறது என்பதே இப்போது கட்சிக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.

Scroll to Top