‘டார்ச்சர்’ செய்த கள்ளக்காதலி… 15 வயது மகளுடன் சேர்ந்து கதையை முடித்த கள்ளக்காதலன்!

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (52). இவரது மனைவி கீதா (38). இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் கோவையைச் சேர்ந்த மூர்த்தி என்பவருடன், கீதா திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளார். கணவர் கணேசன் முதல் மாடியில் வசிக்க, கீதாவும் மூர்த்தியும் தரைத்தளத்தில் வசித்துள்ளனர். இதில், கீதா கர்ப்பமடைய 7வது மாதத்திலேயே மூர்த்தி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். மூர்த்தி மூலம் கீதாவுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தற்போது 15 வயது ஆகிறது.

இதற்கிடையே, வட்டித் தொழில் செய்துவந்த கீதா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த பைக் மெக்கானிக் கதிரவன் (36) என்பவருக்கு கடன் கொடுத்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இருவரும் கணவன் மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

காதலன் கதிரவன் அவசரச் செலவுக்கு என பணம் கேட்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக 27.5 பவுன் நகைகளை கீதா அள்ளிக் கொடுத்துள்ளார். கீதாவின் செல்வச் செழிப்பான பின்னணியை நன்கு அறிந்த கதிரவன், அந்த நகைகளை எல்லாம் விற்று ஜாலியாக செலவு செய்து வந்துள்ளார். 

ஒருகட்டத்தில் கொடுத்த நகைகளை திரும்பக் கேட்டு கீதா தொந்தரவு செய்ய ஆரம்பித்ததோடு, வாய்க்கு வந்தபடி அசிங்கமாகத் திட்டியுள்ளார். கடந்த 2023-ல் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு கதிரவன் கீதாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதுகுறித்து கீதா கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகாரளித்து, கதிரவனை சிறையில் தள்ளியுள்ளார். ஆனால், அடுத்த சில நாட்களில் கீதாவே கதிரவனை ஜாமீனில் எடுத்துள்ளார். 

கதிரவனை ஜாமீனில் வெளியே எடுத்த பிறகும் நகைகளைக் கேட்டு கீதா டார்ச்சர் கொடுக்க, கதிரவன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். ஆனால், அவரை விடாமல் தேடிச்சென்ற கீதா பொது இடங்களில் வைத்து அசிங்கமான வார்த்தைகளால் பேசி கதிரவனை அவமானப்படுத்தி வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கதிரவன், கள்ளக்காதலி கீதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக தனது மெக்கானிக் நண்பரான சண்முகவடிவேலுவுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

சண்முகவடிவேலுவின் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், குடிமங்கலத்தில் கீதாவின் நகைகள் இருப்பதாகவும், நகைகளை திருப்பித் தருவதாக குடிமங்கலம் அழைத்துச் சென்று அங்குள்ள பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்துவிட்டு, அவர் தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறி தப்பித்து விடலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக, கீதாவின் கடுமையான சுபாவத்தினால் கடும் மன உளைச்சலில் இருந்த அவரது 15 வயது மகளிடம், ‘உன்னுடைய அம்மா இல்லாவிட்டால் அவரிடன் டார்ச்சர் இல்லாமல் நீ ஜாலியாக இருக்கலாம். விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்’ என ஆசைகாட்டி சம்மதிக்க வைத்துள்ளனர்.

தங்கள் திட்டப்படி, குடிமங்கலத்தில் உள்ள நண்பன் சண்முகவடிவேலுவிடம் இருந்து நகைகளை வாங்கித் தருவதாகக் கூறி, நவம்பர் 16ஆம் தேதி கீதாவையும், அவரது 15 வயது மகளையும் கதிரவன் காரில் கூட்டிச் சென்றுள்ளார். கீதாவிற்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவரை இரவுக் காட்சிக்கு சினிமா பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். சினிமா முடிந்தபிறகு நள்ளிரவில் குடிமங்கலத்திற்குக் கிளம்பியுள்ளனர்.

அதிகாலையில் குடிமங்கலம் அருகேயுள்ள பிஏபி வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு காத்திருந்த சண்முகவடிவேலுவுடன் சேர்ந்து கீதாவின் தலையில் கல்லால் தாக்கி, வாய்க்காலில் தூக்கி வீசியுள்ளனர்.

வாய்க்கால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கீதாவை அரசூர் ஷட்டர் அருகே மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, வாய்க்காலில் தவறி விழுந்துவிட்டார் என நாடகமாடியுள்ளனர். கீதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கீதாவின் உடலை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குடிமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேதப் பரிசோதனையின் போது கீதாவின் தலையில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கதிரவன், சண்முகவடிவேலு மற்றும் கீதாவின் 15 வயது மகள் ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து மூவரையும் தீவிரமாக விசாரித்ததில், கீதாவை வாய்க்காலில் தள்ளி கொலை செய்துவிட்டு தவறி விழுந்துவிட்டதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, குடிமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் கதிரவன், அவரது நண்பர் சண்முகவடிவேலு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், கீதாவின் 15 வயது மகள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பெற்ற தாயக் கொலை செய்ய அவரது மகளே துணை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top