கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளையன் (எ) பாலசுப்பிரமணியம் (45). இவர் ஊட்டியைச் சேர்ந்த மலர் (40) என்பவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாகத் திருப்பூர் தட்டான்தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், திருப்பூர் பூ மார்க்கெட்டில் லோடுமேன் ஆகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மலருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மனைவியை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டிய பாலசுப்பிரமணியம், தினமும் மது அருந்தியும், கஞ்சா போதையிலும் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், இனி உன்னுடன் வாழ முடியாது எனக் கூறி ஊட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மலர் சென்றுவிட்டார். இதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம், இனி குடியையும் போதையையும் தொடமாட்டேன் எனக் கெஞ்சி சமாதானம் பேசி மலரை மீண்டும் திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனால், அதன் பிறகும் பாலசுப்பிரமணியத்தின் போதைப் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தவர், தீபாவளியை முன்னிட்டுப் பூ மார்க்கெட் வியாபாரிகளிடம் தீபாவளி வசூல் செய்துள்ளார். அந்தப் பணத்தில் மறுபடியும் குடிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், நவம்பர் 13-ஆம் தேதி காலையில் இருந்தே மதுபோதையில் இருந்த பாலசுப்பிரமணியம் மனைவி மலரிடம் தகராறில் ஈடுபட்டு, வீட்டிலிருந்த மலரின் பாட்டியிடமும் சண்டையிட்டு அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். கரூரிலுள்ள உறவினர் வீட்டில் இரண்டு குழந்தைகள் தங்கியிருந்த நிலையில், இளைய மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
மாலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம் வீட்டிலிருந்த இரும்புக் கம்பியை எடுத்து மலரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த மலர், அந்த அடியைத் தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டை விட்டுத் தப்பியோடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். உயிரிழந்த மலரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமறை இருந்த பாலசுப்பிரமணியத்தை கைது செய்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதலித்து கைப்பிடித்த மனைவியை மதுபோதையில் கணவனே அடித்துக் கொன்ற சம்பவம் திருப்பூர் தட்டான்தோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.