திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அந்தச் சிறுமியின் வீடு ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ளது. நேற்றிரவு (நவ.12) சுமார் 9 மணியளவில் தோழி ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு, தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், திடீரென சிறுமியின் வாயைப் பொத்தி அருகிலிருந்த புதர்மண்டிய பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமியின் கை, கால்களை துணியால் கட்டிப்போட்டு சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் நிலைதடுமாறி செய்வதறியாது திகைத்து நின்ற சிறுமி, சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டுக்குச் சென்று, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த அம்மிக்கல் தயாரித்து விற்பனை செய்துவரும் விஷ்ணு (26) என்பது தெரியவந்தது. அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தலைமறைவான விஷ்ணுவைப் பிடிக்க நல்லூர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, கவிதா, உதவி ஆய்வாளர் வேல்பாண்டி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அய்யம்பாளையம் காட்டுப்பகுதியில் விஷ்ணு பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரைப் பிடிக்க முயன்றபோது, தப்பியோட முயற்சி செய்த விஷ்ணு கீழே விழுந்ததில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டு போலீசாரிடம் சிக்கினார்.
இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கால் முறிவுக்கு சிகிச்சையளித்த பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.