லாட்ஜில் தங்கிய தம்பதியை மிரட்டி தாலிக்கொடியை பறித்த ‘சஸ்பெண்ட்’ போலீஸ்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் சூரஜ் (30) மற்றும் அவரது மனைவி யசோதப்பிரியா (27) ஆகிய இருவரும் காங்கேயம் – கரூர் சாலையில் உள்ள ‘லட்சுமி டவர்’ லாட்ஜில் தங்கியிருந்தனர்.

இரவு சுமார் 11 மணியளவில், இவர்களது அறைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், தான் விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸ் எனக் கூறி, கீழே தனது உயரதிகாரிகள் நிற்பதாகவும், அவர்களிடம் சொல்லாமல் இருக்கப் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.

தாங்கள் கணவன்-மனைவி என்றும், பணம் தர முடியாது எனவும் தம்பதியினர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கத்தியைக் காட்டி மிரட்டி யசோதப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளார்.

தம்பதியினர் கூச்சலிடவே, லாட்ஜில் இருந்த ஊழியர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து காங்கேயம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருச்சி, முத்துபுடையாம்பட்டியைச் சேர்ந்த பாவாஷா (33) என்பதும், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்தபோது கடந்த 2024-ல் சென்னையிலுள்ள ஒரு ஓட்டலில் இதேபோல் விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸ் என மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என தெரியவந்தது. அதையடுத்து பாவாஷா மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாராபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள பாவாஷா சென்னை மதுரவாயல் பகுதியில் தம்பதி ஒருவரை இதே பாணியில் மிரட்டி ரூ.1 லட்சம் கேட்டுள்ளார். கணவர் ஏ.டி.எம்-க்கு பணம் எடுக்கச் சென்ற நேரத்தில், அவரது மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காங்கேயம் லாட்ஜில் தம்பதியை மிரட்டி நகை பறித்த விவகாரத்தில் காங்கேயம் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top