சமீபத்தில் மஞ்சள் மாவட்டத்திற்கு வருகை தந்த கதர்க் கட்சி அமைச்சரை, மாவட்ட நிர்வாகம் நடத்திய விதம் தான் அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக்!
என்ன நடந்தது என விசாரித்தபோது, பொதுவாக ஒரு மாவட்டத்திற்கு துறை சார்ந்த அமைச்சர் ஆய்வுக்கு வரும்போது, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வரவேற்பு கொடுப்பது வழக்கம். ஆனால், கதர் அமைச்சர் வந்தபோது, மாவட்ட உயர் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததோடு, அவரை வரவேற்க தாசில்தார் ஒருவரை அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் கடுப்பான அமைச்சர், ‘நீங்க எதுக்கு வந்தீங்க? உங்க உயர் அதிகாரிகள் எல்லாம் எங்க போயிட்டாங்க?’ எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியதோடு, ‘எனக்கு யாரும் வரவேற்பு கொடுக்க வேண்டாம். நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க!’ என தாசில்தாரை விரட்டியுள்ளார்.
கதர் அமைச்சர் வந்த அதேநாளில், முதன்மையானவர் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து ஆய்வு செய்ய, ஆனந்தமான அமைச்சர் சிப்காட் நகரத்தில் உள்ள கல்லூரிக்கு வருகை தந்திருந்தார். மாவட்ட நிர்வாகம் முழுவதும் ஆனந்தமான அமைச்சரை கவனிக்கச் சென்றுவிட்டதால், கதர் அமைச்சரை வரவேற்க சம்பிரதாயத்திற்கு ஒரு தாசில்தாரை மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
விஷயமறிந்த கதர் அமைச்சர், ‘எங்க தயவுல தான் இந்த ஆட்சியே நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு கூட்டணிக் கட்சி அமைச்சருக்கு மரியாதை கொடுக்கும் லட்சணம் இதுதானா?’ என கொதித்துள்ளார்.
வரவேற்பு களேபரங்கள் முடிந்து, மாநகரில் உள்ள டிராவலர்ஸ் பங்களாவிற்கு ஓய்வெடுக்கச் சென்ற போதுதான் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபிக்களுக்கு ஒதுக்கும் அறையைத் தராமல், சாதாரண நபர்கள் தங்கும் அறையைக் கொடுத்துள்ளனர். இதனால் மேலும் கடுப்பான கதர் அமைச்சர், ‘விவிஐபிக்களுக்கான அறை என்ன ஆனது?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் வரவிருப்பதாகவும், அவருக்காக அந்த அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பல்லைக் கடித்துக்கொண்டு வேறு வழியில்லாமல், அந்த சாதாரண அறையிலேயே தங்கியுள்ளார்.
ஆனந்தமான அமைச்சரை வழி அனுப்பி வைத்தபிறகு, கதர் அமைச்சரைக் காண மாவட்ட உயரதிகாரி சாவகாசமாக வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கதர் அமைச்சர், ‘உங்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த மரியாதையே மனநிறைவா இருக்கு. இப்ப நீங்க எதுக்கு வந்தீங்க’ என வெடித்துள்ளார்.
ஒருவழியாக மாவட்டத்தில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் எதேச்சையாக அந்த விவிஜபி அறையை எட்டிப் பார்த்தபோது, அந்த அறை பூட்டியே இருந்துள்ளது.
இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க, வருவதாகச் சொன்ன அந்த முக்கியஸ்தர் வரவில்லை எனக் கூலாகக் கூறியுள்ளனர். இதனால் நொந்துபோன அமைச்சர், மஞ்சள் மாவட்டத்துக்காரங்க பேச்சுல மட்டும் தான் மரியாதை தருவாய்ங்க போல… என நொந்தபடியே நடையைக் கட்டியுள்ளார்.
ஆக மொத்தத்தில் கதர் அமைச்சரையே கதற விட்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம்!