இறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய ரூ.2500 லஞ்சம், சிக்கிய சுகாதார ஆய்வாளர்!

இறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய ரூ.2500 லஞ்சம் பெற்ற மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

​திண்டுக்கல் அருகேயுள்ள கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமார். முன்னாள் ராணுவ வீரரான இவரது தந்தை பொன்ராஜ் 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

இதையடுத்து, தனது தந்தையின் ஓய்வூதியத்தை தாய் தமயந்தி லட்சுமிக்கு பெற்றுத் தருவதற்காக, இறப்புச் சான்றிதழில் உள்ள தாயாரின் பெயரில் இருந்த எழுத்துப் பிழையைத் திருத்தம் செய்ய திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் குமார் மனு அளித்திருந்தார்.

அப்போது அங்கிருந்த சுகாதார ஆய்வாளர் தங்கவேலு பிழையைத் திருத்திக் கொடுக்க ரூ.2500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை குமாரிடம் கொடுத்துள்ளனர். அந்தப் பணத்தை சுகாதார ஆய்வாளர் தங்கவேலு வாங்கும்போது, மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் மற்றும் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார், தங்கவேலுவைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

​திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே சுகாதார ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top