கர்நாடக மாநிலம் சென்னப்பட்டணாவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தங்கி, ஆதர்ஷ் பள்ளி விடுதியில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இவரது 13 வயது மகள் நிவேதிதா, அதே பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (அக். 26) காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதற்காகச் சீருடையில் புறப்பட்ட நிவேதிதா, பள்ளிக்குள் செல்லாமல் மாயமானார். மாணவி பள்ளிக்கு வராதது குறித்து அவரது தந்தைக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதனையடுத்து பதறிப்போன பெற்றோர், உடனடியாக அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாகத் தனிப்படைகள் அமைத்துத் மாயமான சிறுமியை தேடத் தொடங்கினர்.
சிறுமியின் வீடு, பள்ளி மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மாணவி அந்தியூரிலிருந்து ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறியது தெரியவந்தது. ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த சிறுமி அங்கிருந்து மைசூரு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிச் சென்றதை கண்டுபிடித்தனர்.
உடனடியாகச் சத்தியமங்கலம் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் அப்பகுதி வழியே வந்த மைசூர் பேருந்தைச் சோதனையிட்டுச் சிறுமியை மீட்டனர். புகார் அளிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் சிறுமி மீட்கப்பட்டு, பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
நேற்றைய தினம் சிறுமி நிவேதிதாவிடம் ரூ.400 பணம் இருந்ததை அவரது தாயார் ஷீலா பார்த்துள்ளார். “இந்தப் பணம் உனக்கு எப்படி வந்தது?” என்று தாய் கேட்க, “பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் தோழி ஒருவரின் பணம் இது. விடுதியில் பணம் பாதுகாப்பாக இருக்காது என்பதால் என்னிடம் கொடுத்து வைத்திருந்தார்” என்று நிவேதிதா கூறியிருக்கிறார்.
ஆனால் அதை நம்பாத தாயார், “உண்மையைச் சொல்! நான் நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து உங்க மிஸ்கிட்டயும், அந்தப் பொண்ணுகிட்டயும் விசாரிப்பேன்” என்று கூறி சத்தம் போட்டுள்ளார்.
தாயார் பள்ளிக்கு வந்து விசாரித்தால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்று பயந்த நிவேதிதா, மைசூரூவில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். அதன்படி, வீட்டுக்குத் தெரியாமல் மைசூருவுக்கு பேருந்தில் சென்றுள்ளார்.
துரிதமாகச் செயல்பட்டு மாயமான சிறுமியை 3 மணி நேரத்தில் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி நேரில் அழைத்து பாராட்டினார்.