ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் பெரும் பிரச்னையாக உள்ளது. ஆசனூர், ஓங்கல்வாடி, பங்களாதொட்டி, பழைய ஆசனூர், கே.கே.தொட்டி, அரேபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்த சிறுத்தை, ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது.
உச்சக்கட்டமாக, கடந்த அக்டோபர் 4-ம் தேதியன்று ஆசனூர் சீர்மடுவு ஓடைப்பகுதியில் பெரியசாமி (36) என்ற இளைஞரையும் சிறுத்தை அடித்துக் கொன்றது. இந்தச் சம்பவம் ஆசனூர் சுற்றுவட்டார கிராம மக்களிடம் பெரும் பீதியை உண்டாக்கியது.
இந்த ஆபத்தான சிறுத்தையைக் கூண்டு வைத்து உடனடியாகப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆசனூர் வனச்சரக அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், பொறுப்பற்ற வனத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தை பெரிதாக அலட்டிக்கொள்ளாமலும், சிறுத்தையைப் பிடிக்க எந்தவிதத் தீவிர முனைப்பும் காட்டாமலும் மெத்தனமாகவே இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
நாளுக்கு நாள் சிறுத்தையின் அட்டகாசம் எல்லை மீறியதால் கொதித்தெழுந்த கிராம மக்கள், சிறுத்தை அடித்துக் கொன்ற கன்றுக்குட்டியின் உடலைத் தூக்கிக் கொண்டு ஆசனூர் வனச்சரக அலுவலகத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்காவிட்டால், அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் குதிப்போம் என்று கடும் எச்சரிக்கையும் விடுத்தனர்.
பொதுமக்களின் போராட்டத்திற்குப் பிறகு, ஆசனூர் வனத்துறை அதிகாரிகள் வைத்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியதாக நேற்று (அக்.22) தகவல் வெளியானது. ஆனால், அதுதொடர்பான முறையான புகைப்படங்களோ, வீடியோ ஆதாரங்களோ வெளியிடப்படவில்லை. செய்தியாளர்களுக்கும் எந்தவொரு விரிவான தகவலும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே சிறுத்தை கூண்டில் இருக்கும் ஒரு படம் மட்டும் வெளியாக, ஏஜ மூலம் உருவாக்கப்பட்ட படத்தை வைத்து சிறுத்தையைப் பிடிக்காமல் வனத்துறை மக்களை ஏமாற்றுகிறது என கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், வனத்துறை வைத்த 2 கூண்டுகளில் ஒரு வயதுடைய இரண்டு சிறுத்தைக் குட்டிகள் ஒரு கூண்டிலும், சுமார் 6 வயதுடைய ஒரு ஆண் சிறுத்தை மற்றொரு கூண்டிலும் நேற்று (அக்.22) காலை பிடிபட்டதாகவும், 3 சிறுத்தைகளையும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டதாகவும் வனத்துறை தரப்பிலிருந்து இன்று அறிக்கை வெளியானது.
நேற்று, ஒரு சிறுத்தை பிடிபட்டதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 3 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளதாக வனத்துறை சார்பில் வெளியான அறிக்கை பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
வனத்துறையின் முன்னுக்குப் பின் முரணான தகவல்களாலும், மர்மமான நடவடிக்கையாலும் கொதிப்படைந்த ஆசனூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இன்று (அக்.23) ஆசனூர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘நேற்று ஒரு சிறுத்தை பிடிபட்டதாகச் சொன்ன நிலையில், இன்று 3 சிறுத்தை பிடிபட்டதாக அறிக்கை வெளியிட்டு உள்ளீர்கள். பிடிபட்ட சிறுத்தை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அந்த சிறுத்தை தானா? என சந்தேகம் எழுகிறது. பிடிபட்ட சிறுத்தையை யாருக்கும் காட்டாமல் ரகசியமாக வைத்திருந்து, வனப்பகுதிக்குள் விட்டது ஏன்?
உண்மையாகவே சிறுத்தை பிடிபட்டதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களை வைத்து மக்களை ஏமாற்றுகிறீர்களா?’ என வனத்துறை அதிகாரிகளிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘மக்களின் உயிரோடு விளையாடும் வனத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஆட்கொல்லி சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்காமல் விட்டுவிட்டு, மக்களை ஏமாற்ற நாடகங்களை அரங்கேற்றிவரும் ஆசனூர் வனச்சரக அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனத்துறை சொன்னது உண்மையா? இல்லையா? என்பது, சிறுத்தையினால் அடுத்து ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும்போது தான் தெரியவரும்.