‘நாங்க என்ன குப்பையா… இல்ல கொத்தடிமையா?’ – அதிகாரிகளின் அலட்சியத்தால் அரளிவிதையை சாப்பிட்ட டாஸ்மாக் ஊழியர்!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் – பண்ணாரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எண் 3588-ல் சேல்ஸ்மேன் ஆகப் பணியாற்றி வருபவர் வேலுசாமி. இவர் கடந்த செப். 17-ல், தனக்கு ஒரு வாரமாகவே உடல்நிலை சரியில்லை என்றும், கால் மரத்துப்போய் நிற்கக்கூட முடியவில்லை எனச் சொல்லி கடையின் சூப்பர்வைசரான பழனிசாமியிடம் லீவ் கேட்டுள்ளார். ஆனால், பழனிசாமி லீவ் கொடுக்க மறுத்ததோடு ‘ஒழுங்காகப் போய் வேலையைப் பார். இல்லையென்றால் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போ!’ என்று வேலுசாமியிடம் கடுமையாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

அதையடுத்து, வேலுசாமி மறுநாள் காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆனந்தகுமாரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார். அப்போது தனது உடல்நிலை குறித்து விளக்கியதோடு, சூப்பர்வைசர் தன்னிடம் நடந்துகொண்ட முறை குறித்தும் சொல்லி லீவ் கேட்டுள்ளார். ஆனால், மாவட்ட மேலாளரோ, ‘என்ன நடிக்கிறீயா? இப்ப பைக்கில தானே வந்த, எனக்கும் தான் கால் மரத்துப்போகுது’ என அலட்சியமாகப் பேசியதோடு, ‘அந்த ஆளை வெளியே போகச்  சொல்லு’ என வேலுசாமியை விரட்டியடித்துள்ளார்.

உயரதிகாரிகளின் இந்த செயல்பாடுகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வேலுசாமி, செப். 19-ல் தேதியன்று தனது வீட்டினருகே உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் அரளி விதையை அரைத்து சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்குப் போராடிய அவரை மீட்ட குடும்பத்தினர், உடனடியாகச் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலுசாமி, தற்போது உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறார். 

தற்கொலை முயற்சியின் போது அரளிவிதையை சாப்பிட்டுக் கொண்டே நடந்த சம்பவங்களை விளக்கி, வேலுசாமி தன்னுடைய செல்ஃபோனில் செல்ஃபி வீடியோவாக எடுத்து தன்னுடைய சக ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். 

அதில் பேசும் வேலுசாமி, “ 23 வருஷமாக மாடு மாதிரி உழைச்சிருக்கேன். தினமும் 10 மணி நேரம் நிக்கிறோம். கால் எல்லாம் மரத்துப்போச்சு. மெடிக்கல் லீவ் எங்களோட உரிமை. அதைக்கேட்டா அசிங்கப்படுத்துவீங்களா? நாங்க என்ன குப்பையா? இல்ல நவீன கொத்தடிமையா?” என்றதோடு டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனுவில், ஊழியரைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் நடந்துகொண்ட டாஸ்மாக் சூப்பர்வைசர் பழனிசாமி மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆனந்தகுமார் ஆகிய இருவரிடமும் உரிய விசாரணை நடத்தித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சரிசெய்ய, தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அவை கண்டுகொள்ளப்படுவது இல்லை. குடி குடிப்பவருக்கு மட்டும் ஆபத்து இல்லை, அதை விற்பனை செய்பவருக்கு ஆபத்து தான் போல!

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top