கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள கந்தம்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கவுதம் (வயது 21). கரூர் தலவபாளையத்தில் உள்ள குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு EEE படித்து வந்தார்.
இவருடன், நாமக்கல் மாவட்டம், மோகனூர் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் மதுப்பிரியா (வயது 20), நாமக்கல் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகள் காமினி (வயது 20), நாமக்கல் அலைவாய்பட்டியைச் சேர்ந்த அருள் மகள் அனுசியா (வயது 20) மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முத்துசாமி மகள் தேவதர்ஷினி (வயது 20) ஆகிய 4 மாணவிகளும் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர்.
நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்வதற்காக கெளதம், தனது உறவினர் காரை வாங்கி வந்துள்ளார். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், கெளதம் மற்றும் 4 மாணவியரும், பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக காரில் கரூருக்கு கிளம்பியுள்ளனர். மாலை 5 மணியளவில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் தனியார் பள்ளி அருகே அதிவேகமாக சென்றபோது, கவுதமின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பலமாக மோதி நொறுங்கியது.
இதில், காரை ஓட்டிய கவுதம் மற்றும் காரின் முன் இருக்கையில் பயணித்த மதுப்பிரியா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரின் பின் இருக்கையில் இருந்த மற்ற 3 மாணவிகளும் படுகாயமடைந்தனர். விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், காயமடைந்த மாணவிகளை மீட்டு, சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரேதப் பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கவுதம் மற்றும் மதுப்பிரியாவின் உடல்களைப் பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியழுதது காண்போரை கலங்கடித்தது.
இந்த விபத்து தொடர்பாக, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் விழாற்காக சென்ற கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.