“7 லட்சம் லஞ்சம் கொடுங்க…!” – ஈரோட்டில் கையும் களவுமாகச் சிக்கிய சார்பதிவாளர்

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள ராயபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (47). விவசாயியான இவர், தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் 51 செண்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் சங்கர் (வயது 42), நிலத்தைப் பதிவு செய்து கொடுக்க ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்தப் பணத்தை பத்திர எழுத்தரான வெற்றியிடம் (வயது 30) கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

லஞ்சம் கொடுத்து பத்திரம் பதிவு செய்வதை விரும்பாத விவசாயி கார்த்திகேயன், இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீசார், ரசாயனம் தடவிய ரூ.7 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கார்த்திகேயனிடம் கொடுத்து, அவற்றை லஞ்சமாக வழங்குமாறு கூறினர்.

போலீசாரின் திட்டப்படி கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்ற விவசாயி கார்த்திகேயன், ரூ.7 லட்சம் பணத்தை பத்திர எழுத்தர் வெற்றியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீசார், லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் சங்கர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பத்திர எழுத்தர் வெற்றி ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top