பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து, முன்னாள் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளராகக் களமிறங்கிய ஜெயக்குமார், திமுக வேட்பாளரான தோப்பு வெங்கடாச்சலத்தை 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், தேர்தல் நேரத்தில் ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான வழக்குகளைக் காரணம் காட்டி, ஜெயக்குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி தோப்பு வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
‘சட்டப்படி ஏற்கத்தக்க காரணங்கள் இல்லை’
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (08.09.2026) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, ‘தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்வதற்கான சட்டப்பூர்வமான காரணங்கள் எதுவும் இல்லை’ எனக் கூறி, இந்த வழக்கை நிராகரித்தார்.
அதிமுக வேட்பாளராக தேர்தலில் வென்ற ஜெயக்குமார், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். அதையடுத்து பெருந்துறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில், பெருந்துறை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்திருந்தது.
அதேசமயம், ஜெயக்குமாரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தோப்பு வெங்கடாச்சலம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்ததால், அதில் தீர்ப்பு வரும்வரை பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் எழுந்தது.
விலகியது தடை?
தேர்தல் வழக்கில் தீர்ப்பு வந்துள்ள நிலையில், பெருந்துறை இடைத்தேர்லுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு, ஜெயக்குமார் தரப்பு மனுத்தாக்கல் செய்தது. தேர்தல் வழக்கின் தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும், இடைத்தேர்தல் தடை வழக்கின் இறுதித்தீர்ப்பு செப்டம்பர் 28ஆம் தேதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
தேர்தல் வழக்குகள் காரணமாக 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாத நிலையில், வழக்குகள் ஏதும் இல்லாத தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் நேற்று (07.09.2026) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது பெருந்துறை தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், பெருந்துறை தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.