ஈரோட்டில் சிக்கிய ‘மான் கறி’ மாஃபியா! – ‘விவிஐபி கஸ்டமர்கள்’ சிக்குவார்களா? 

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் சிலர் மான்களை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்து வருவதாக ஈரோடு வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வனத்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என தீவிர விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில், சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்த சச்சின் (வயது 29) மற்றும் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் (வயது 39) ஆகியோர் இதில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து வனத்துறையினர் இருவரையும் பிடித்து விசாரித்தனர். மான் வேட்டைக்கான துப்பாக்கிகள் எப்படி கிடைத்தது? என விசாரித்தபோது, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் அருகேயுள்ள எழுதிங்கள்பட்டியில் கறிக்கடை நடத்திவரும் சந்தோஷ் (வயது 32) என்பவரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கியதாகத் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, ஈரோடு வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் தலைமையிலான வனத்துறையினர் எழுதிங்கள்பட்டியில் உள்ள சந்தோஷ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், இரண்டு ஏர்கன்கள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் அவற்றிற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் ஆகியவை சிக்கின. இதனையடுத்து சந்தோஷ், சதீஷ், சச்சின் ஆகிய மூவரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் நடைபெற்ற விசாரணையில், சந்தோஷ் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்தது மட்டுமல்லாமல், துப்பாக்கிகளை அவரே சொந்தமாக தயாரித்து வந்ததும் தெரியவந்தது. வனத்துறையினர் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரை, திருச்சியில் வைத்து வனத்துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னணியில் பெரும்புள்ளிகள் (!)

மான் வேட்டையில் ஈடுபட்டு அதன் கறியை விற்பனை செய்து வந்தவர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்வர்கள் இதையே தொழிலாகச் செய்து வந்துள்ளனர். அப்படியென்றால் வேட்டையாடப்பட்ட மானின் கறியை, அவர்கள் யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்தனர்? மானின் தோல், கொம்புகள் உள்ளிட்டவற்றையும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தனரா? என்பது குறித்த தகவல்களும் விசாரணையில் பெறப்பட்டதா? 

சட்டவிரோதமாக பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் மான் கறியை சாதாரண நபர்கள் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. எனவே, பல விவிஐபிக்கள் (!) இவர்களின் வாடிக்கையாளர்களாக இருந்திருக்கவும், இந்த சட்டவிரோத காரியத்திற்கு அதிகார வர்க்கத்தின் ஆசியும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. 

மான் கறியை விற்பனை செய்வதைப் போலவே, மான் கறியை வாங்குவதும் 3 முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கக்கூடிய கடுங்குற்றம் ஆகும்.

எனவே, மான்கறி வாடிக்கையாளர்களான பெரும்புள்ளிகள் (!) மீதும் வனத்துறையினரின் நடவடிக்கை பாயுமா? அல்லது வழக்கம்போல பெரும்புள்ளிகள் பக்கம் விசாரணையின் கரங்கள் நீளாமல், இத்துடன் முடிக்கப்படுமா..?   

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top