தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“யார் கெத்து?” – திருப்பூரில் நடுரோட்டில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள்!

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் ரயில் நிலைய பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே, “யார் கெத்து?” என்கிற போட்டியில் அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், நேற்று (அக்.30) மாலை பள்ளி முடிந்ததும் நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் குமரன் சிலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது, சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மரக்கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் கொலைவெறியுடன் கூச்சலிட்டபடி குமரன் சிலை பகுதிக்கு ஓடிவந்து நஞ்சப்பா பள்ளி மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர்.  இதனால் அதிர்ச்சியடைந்த நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். ஆனால், விடாமல் துரத்திய கும்பல், நடுரோட்டிலேயே அவர்களை விரட்டி விரட்டித் தாக்கியது. இதனைக்கண்டு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவர் பலத்த காயமடைய, அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார், மோதலுக்கான காரணம் என்ன? தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் யார் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் ஆயுதங்களுடன் நடுரோட்டில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த காவல் துறையும், கல்வித் துறையும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘தண்ணீருக்காகத் திரண்ட 2,000 பொதுமக்கள்!’ – மாபெரும் பேரணி & கவன ஈர்ப்பு கருத்தரங்கம்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் மக்கள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கவன ஈர்ப்பு கருத்தரங்கம் அக்டோபர் 28-ல் குன்னத்தூரில் நடைபெற்றது. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் பெருந்துறை முதல், ஆறாவது நீரேற்று நிலையம் வழியாக காரமடை வரை விடுபட்டுள்ள அனைத்து குளம், குட்டைகளை ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து திட்டப்பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும். நிறைவேற்றப்பட்ட திட்டத்தில் உள்ள குறைகளை உடனடியாக சரிசெய்திட வேண்டும். பாண்டியாறு பவானி ஆறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதோடு, பசுமை நீர் வலைப்பின்னல் திட்டம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் இந்த மாபெரும் விழிப்புணர்வு மக்கள் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. காலை சுமார் 9 மணியளவில், குன்னத்தூர் பொங்காளியம்மன் திருக்கோயில் திடலில் அத்திக்கடவு – அவினாசி திட்டக் கூட்டமைப்பின் பெயர்ப்பலகை திறப்பு விழா நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள கொங்கு மஹால் வரை 2 கி.மீ தூரத்திற்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் மக்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொங்கு மஹாலில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. குன்னத்தூர் மஞ்சள் மண்டி தம்பி (எ) மாரிமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அறத்தமிழன் பேரியக்கத்தின் தலைவர் விஜய் சீத்தாராமன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பெரியசாமி, கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் நல்லசாமி ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். அத்திக்கடவு – அவிநாசி திட்டக் கூட்டமைப்பைச் சேர்ந்த பெருந்துறை மு.முருகபூபதி, துடுப்பதி டி.கே.பெரியசாமி, தொரவலூர் சம்பத், வைகை துரை, அத்திக்கடவு சுப்பு, வெள்ளியங்கிரி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது, எவர்சில்வர் டம்ளரில் தண்ணீர் கொடுத்தது தொடங்கி, பேரணியில் பங்கேற்று களைப்பாக கூட்ட அரங்கிற்கு வந்தவர்களுக்கு கம்மங்கூழ் வழங்கியது என சின்னச் சின்ன விஷயங்களில் கூட, உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான அக்கறையை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் காட்டினர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பேரணி எவ்வித சலசலப்பும் இல்லாமல், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பேரணி நேர்த்தியாக நடைபெற்றது. குன்னத்தூர் பகுதி அத்திக்கடவு திட்ட தன்னார்வலர்கள்சுற்றுச்சூழல் காக்கவும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதும் மக்கள் மனதில் பெறும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் நீர் ஆதாரங்களைப் பெருக்கவும், விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றவும், நதிநீர் இணைப்புத் திட்டங்களை முன்னெடுக்கவும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தது உட்பட 7 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

45 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை; தாய், தங்கை என குடும்பத்தோடு சிக்கிய கொள்ளையன்!

திருப்பூர் கல்லூரி சாலை மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் அருண்ராஜ் (45). தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூரில் மளிகைக் கடை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார்.  இந்நிலையில், கடந்த அக்.18-ம் தேதி, தசரா பண்டிகைக்காக குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்றவர், அக்.23-ம் தேதி வீடு திரும்பியபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நகை மற்றும் பணம் கொள்ளை போன அருண்ராஜ் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அருண்ராஜ் சொந்த ஊருக்குச் சென்ற தகவல் அறிந்த விஜய், தனது நண்பர்களான தென்காசியை சேர்ந்த அப்துல் ரசாக் மற்றும் மவுலானா யூசுப் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் நகைகளை விஜய் தன்னுடைய தாயார் அமராவதி, தங்கை சரண்யா மற்றும் அவரது கணவர் ஆனந்த் உதவியுடன் கடைகளில் விற்பனை செய்துள்ளார்.  இதையடுத்து, விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர், அப்துல் ரசாக் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 13 பவுன் நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியான மவுலானா யூசுப் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாகவும், மீதமுள்ள நகைகளும், பணமும் அவரிடம் இருப்பதாகவும் அதனை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஒரு கோடியுடன் எஸ்கேப் ஆன இருவர்… போலீசில் சிக்கிய 5 புரோக்கர்கள்! – போலீஸ் ஸ்டேஷன் கதவைப் பூட்டி 7 மணி நேரம் நடந்த ரகசிய விசாரணை!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பவானி ரோடு ராஜேந்திரபிரசாத் வீதியைச் சேர்ந்தவர் அருள்குமார் (55). இவர், காடபாளையத்தில் ‘விநாயகா கார்ஸ்’ என்ற பெயரில் கார் வாங்கி விற்பனை செய்துவருவதோடு, ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்து வருகிறார். இவரின் நண்பர் காஞ்சிக்கோயில் ரோடு தாய் நகரைச் சேர்ந்த சிவராஜ். இருவரும் சேர்ந்து காஞ்சிக்கோயில் ரோடு, ஸ்ரீ மஹால் அருகே சாய்பாபா கோயில் கட்டி வருகின்றனர். அதற்காக ‘ஸ்ரீ சாய்’ என்ற பெயரில் கடந்த வருடம் டிரஸ்ட் ஆரம்பித்து, அந்த டிரஸ்ட் மூலம் கோயில் கட்ட பலரிடமும் நிதி பெற்று வந்துள்ளனர்.   இவர்களுக்குத் திருப்பூரைச் சேர்ந்த குமாரசாமி, சாய்நாத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ‘ரூ.1 கோடி ரொக்கமாகக் கொடுத்தால், தனக்குத் தெரிந்தவர்கள் மூலம், உங்கள் டிரஸ்ட்டின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1.15 கோடியாக அனுப்பப்படும்’ என்று அவர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பி, இருவரும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து, நேற்று (அக்.28) காலை 11.30 மணியளவில் அவர்கள் கட்டிவரும் கோயிலுக்கு, குமாரசாமி மற்றும் சாய்நாத் ஆகிய இருவரும் இந்த பணப் பரிமாற்றத்திற்கு தங்களுடன் சேர்ந்து தரகராகச் செயல்படுபவர்கள் எனக்கூறி மேலும் 3 பேரை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் மற்றொரு காரில் மேலும் இருவர் வந்துள்ளனர். அந்த இருவரும் தான் பணத்தை மாற்றித் தருபவர்கள் என குமாரசாமி அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது, சாய்பாபா கோயிலை கட்டிவரும் அருள்குமார் மற்றும் சிவராஜ் ஆகிய இருவரும் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை மெஷினை வைத்து எண்ணி ஒரு டிராவல் பேக்கில் போட்டு, அந்த இருவரிடமும் கொடுத்துள்ளனர். அடுத்த சில நொடிகளிலேயே அந்த இருவரும், பணத்தை எடுத்துக்கொண்டு தாங்கள் வந்த காரில் கிளம்ப முயன்றபோது, அருள்குமார் மற்றும் சிவராஜ் காரின்மீது கல்லைத் தூக்கிப்போட்டு தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி அவர்கள் இருவரும் காரில் தப்பிச் சென்றனர்.  இதையடுத்து குமாரசாமி, சாய்நாத் மற்றும் அவர்களுடன் வந்த 3 பேரையும் பிடித்து அருள்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் பெருந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெருந்துறை காவல் நிலையத்தில் வைத்து ஈரோடு ஏ.டி.எஸ்.பி தலைமையில் பிடிபட்டவர்களிடம் பெருந்துறை டிஎஸ்பி மற்றும் பெருந்துறை இன்ஸ்பெக்டர் ஆகியோர் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் போது, போலீஸ் ஸ்டேஷனின் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மிக ரகசியமான முறையில் விசாரணை நடைபெற்றது. பிடிபட்டவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தப்பிச்சென்ற இவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து, பெருந்துறை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பெருந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ரூ.400 பணத்தால் வந்த சந்தேகம்… கண்டித்த தாய்… அந்தியூரில் 8-ம் வகுப்பு மாணவி மாயமானதன் பின்னணி? 

கர்நாடக மாநிலம் சென்னப்பட்டணாவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தங்கி, ஆதர்ஷ் பள்ளி விடுதியில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இவரது 13 வயது மகள் நிவேதிதா, அதே பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில், நேற்று (அக். 26) காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதற்காகச் சீருடையில் புறப்பட்ட நிவேதிதா, பள்ளிக்குள் செல்லாமல் மாயமானார். மாணவி பள்ளிக்கு வராதது குறித்து அவரது தந்தைக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதனையடுத்து பதறிப்போன பெற்றோர், உடனடியாக அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாகத் தனிப்படைகள் அமைத்துத் மாயமான சிறுமியை தேடத் தொடங்கினர். சிறுமியின் வீடு, பள்ளி மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மாணவி அந்தியூரிலிருந்து ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறியது தெரியவந்தது. ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த சிறுமி அங்கிருந்து மைசூரு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிச் சென்றதை கண்டுபிடித்தனர்.  உடனடியாகச் சத்தியமங்கலம் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் அப்பகுதி வழியே வந்த மைசூர் பேருந்தைச் சோதனையிட்டுச் சிறுமியை மீட்டனர். புகார் அளிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் சிறுமி மீட்கப்பட்டு, பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.  நேற்றைய தினம் சிறுமி நிவேதிதாவிடம் ரூ.400 பணம் இருந்ததை அவரது தாயார் ஷீலா பார்த்துள்ளார். “இந்தப் பணம் உனக்கு எப்படி வந்தது?” என்று தாய் கேட்க, “பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் தோழி ஒருவரின் பணம் இது. விடுதியில் பணம் பாதுகாப்பாக இருக்காது என்பதால் என்னிடம் கொடுத்து வைத்திருந்தார்” என்று நிவேதிதா கூறியிருக்கிறார். ஆனால் அதை நம்பாத தாயார், “உண்மையைச் சொல்! நான் நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து உங்க மிஸ்கிட்டயும், அந்தப் பொண்ணுகிட்டயும் விசாரிப்பேன்” என்று கூறி சத்தம் போட்டுள்ளார். தாயார் பள்ளிக்கு வந்து விசாரித்தால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்று பயந்த நிவேதிதா, மைசூரூவில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். அதன்படி, வீட்டுக்குத் தெரியாமல் மைசூருவுக்கு பேருந்தில் சென்றுள்ளார். துரிதமாகச் செயல்பட்டு மாயமான சிறுமியை 3 மணி நேரத்தில் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி நேரில் அழைத்து பாராட்டினார்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சாலையில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்; நேர்மையால் நெகிழ வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்!

சேலம் நெய்க்காரப்பட்டி கோடி காடு பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கரின் மகன் தமிழ் (15), அமானி கொண்டலாம்பட்டி காட்டூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கின் மகன் ரிஷபன் (16). இருவரும் கொண்டலாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். மதிய உணவு இடைவேளையின் போது இருவரும் பள்ளிக்கு வெளியே சென்றுள்ளனர். அப்போது, பள்ளிக்கு அருகிலுள்ள சந்தைப்பேட்டை பாலமுருகன் கோயில் அருகே பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட சிறிய பண்டல் ஒன்று கிடந்துள்ளது.  என்னவென்று பிரித்துப் பார்த்தபோது அதற்குள் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததைப் பார்த்து திகைத்துப் போயுள்ளனர். உடனே அந்தப் பணத்தை அப்படியே எடுத்துச் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் துரைசாமியிடம் மாணவர்கள் இருவரும் ஒப்படைத்தனர். இதைக் கண்டு வியந்துபோன தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியருடன் அந்த மாணவர்களை அழைத்துக்கொண்டு உடனடியாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு எஸ்.ஐ பாலகிருஷ்ணனிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.  போலீசார் அந்த பண்டலைப் பிரித்து எண்ணியபோது அதில் ரூ.35 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. மாணவன் தமிழின் தந்தை எலக்ட்ரீஷியன் ஆக உள்ளார். இன்னொரு மாணவரான ரிஷபனின் தந்தை பனியன் கம்பெனியில் செய்கிறார். இருவரும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும், துளியும் பேராசைப்படாமல் பணத்தை ஒப்படைத்த அந்த மாணவர்களின் நேர்மையைக் கண்டு மெச்சிய எஸ்.ஐ பாலகிருஷ்ணன், மாணவர்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.  ரூ.35 ஆயிரம்… யாருடைய பணம்? கொண்டலாம்பட்டி அரசுப் பள்ளி அருகே சக்திவேல் என்பவர் மளிகை கடை வைத்து, பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று நெத்திமேடு பகுதியில் உள்ள பொறிக்கடையில் இருந்து பொறி லோடு ஏற்றிக்கொண்டு, தாதகாப்பட்டியில் உள்ள கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு பொறியை கொடுத்துவிட்டு, அதற்கான ரூ.35 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார்.  பிளாஸ்டிக் கவரில் சுற்றி பாக்கெட்டில் வைத்த அந்தப் பணம், ஆட்டோவில் வரும்போது வழுக்கிக் கீழே விழுந்துள்ளது. வீட்டில் வந்து பார்த்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  பின்னர், சாலையில் கிடந்த பணம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் இருப்பதாகத் தகவல் கிடைக்கவே, அங்கு ஓடிச் சென்ற சக்திவேல், பணத்திற்கான சரியான விவரங்களைக் கூறி தனது பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘நான் அவகிட்டயே போறேன்..’ காதலி இறந்த துயரத்தால் காதலன் எடுத்த விபரீத முடிவு!

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகேயுள்ள தலைச்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாபு – புஷ்பராணி தம்பதியர். இவர்களது மகன் ஸ்ரீகாந்த் (20). குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதியர் பிரிந்த நிலையில், புஷ்பராணி மறுமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்ரீகாந்த் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக பிளஸ் டூவோடு படிப்பை நிறுத்திய ஸ்ரீகாந்த், ஏற்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்தச் சூழலில், ஏற்காடு பிளியூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மகாலட்சுமியுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகாந்தும் மகாலட்சுமியும் காதலித்து வந்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மகாலட்சுமி உயிரிழந்துள்ளார். உயிருக்கு உயிராய் நேசித்த காதலியின் இறப்பை தாங்க முடியாமலும், அதிலிருந்து மீள முடியாமலும் ஸ்ரீகாந்த் தவித்து வந்துள்ளார்.  இதனிடையே, கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ஸ்ரீகாந்த் அக்.22-ம் தேதி மதியம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஏற்காடு போலீசார், ஸ்ரீகாந்தின் சலடத்தைக் கைப்பற்றி ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதலியின் இறப்பை தாங்க முடியாமல், காதலனும் உயிரைவிட்ட இந்தச் சம்பவம்  ஏற்காட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஆசனூர் வனத்துறையின் மர்ம நாடகம்.. உண்மையில் சிறுத்தைகள் பிடிபட்டதா? ஏஐ படங்களை வைத்து ஏமாற்றுகிறதா?

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் பெரும் பிரச்னையாக உள்ளது. ஆசனூர், ஓங்கல்வாடி, பங்களாதொட்டி, பழைய ஆசனூர், கே.கே.தொட்டி, அரேபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்த சிறுத்தை, ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது.  உச்சக்கட்டமாக, கடந்த அக்டோபர் 4-ம் தேதியன்று ஆசனூர் சீர்மடுவு ஓடைப்பகுதியில் பெரியசாமி (36) என்ற இளைஞரையும் சிறுத்தை அடித்துக் கொன்றது. இந்தச் சம்பவம் ஆசனூர் சுற்றுவட்டார கிராம மக்களிடம் பெரும் பீதியை உண்டாக்கியது. இந்த ஆபத்தான சிறுத்தையைக் கூண்டு வைத்து உடனடியாகப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆசனூர் வனச்சரக அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், பொறுப்பற்ற வனத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தை பெரிதாக அலட்டிக்கொள்ளாமலும், சிறுத்தையைப் பிடிக்க எந்தவிதத் தீவிர முனைப்பும் காட்டாமலும் மெத்தனமாகவே இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. நாளுக்கு நாள் சிறுத்தையின் அட்டகாசம் எல்லை மீறியதால் கொதித்தெழுந்த கிராம மக்கள், சிறுத்தை அடித்துக் கொன்ற கன்றுக்குட்டியின் உடலைத் தூக்கிக் கொண்டு ஆசனூர் வனச்சரக அலுவலகத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்காவிட்டால், அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் குதிப்போம் என்று கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். பொதுமக்களின் போராட்டத்திற்குப் பிறகு, ஆசனூர் வனத்துறை அதிகாரிகள் வைத்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியதாக நேற்று (அக்.22) தகவல் வெளியானது. ஆனால், அதுதொடர்பான முறையான புகைப்படங்களோ, வீடியோ ஆதாரங்களோ வெளியிடப்படவில்லை. செய்தியாளர்களுக்கும் எந்தவொரு விரிவான தகவலும் வழங்கப்படவில்லை.  இதற்கிடையே சிறுத்தை கூண்டில் இருக்கும் ஒரு படம் மட்டும் வெளியாக, ஏஜ மூலம் உருவாக்கப்பட்ட படத்தை வைத்து சிறுத்தையைப் பிடிக்காமல் வனத்துறை மக்களை ஏமாற்றுகிறது என கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், வனத்துறை வைத்த 2 கூண்டுகளில் ஒரு வயதுடைய இரண்டு சிறுத்தைக் குட்டிகள் ஒரு கூண்டிலும், சுமார் 6 வயதுடைய ஒரு ஆண் சிறுத்தை மற்றொரு கூண்டிலும் நேற்று (அக்.22) காலை பிடிபட்டதாகவும், 3 சிறுத்தைகளையும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டதாகவும் வனத்துறை தரப்பிலிருந்து இன்று அறிக்கை வெளியானது. நேற்று, ஒரு சிறுத்தை பிடிபட்டதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 3 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளதாக வனத்துறை சார்பில் வெளியான அறிக்கை பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. வனத்துறையின் முன்னுக்குப் பின் முரணான தகவல்களாலும், மர்மமான நடவடிக்கையாலும் கொதிப்படைந்த ஆசனூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இன்று (அக்.23) ஆசனூர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, ‘நேற்று ஒரு சிறுத்தை பிடிபட்டதாகச் சொன்ன நிலையில், இன்று 3 சிறுத்தை பிடிபட்டதாக அறிக்கை வெளியிட்டு உள்ளீர்கள். பிடிபட்ட சிறுத்தை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அந்த சிறுத்தை தானா? என சந்தேகம் எழுகிறது. பிடிபட்ட சிறுத்தையை யாருக்கும் காட்டாமல் ரகசியமாக வைத்திருந்து, வனப்பகுதிக்குள் விட்டது ஏன்?  உண்மையாகவே சிறுத்தை பிடிபட்டதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களை வைத்து மக்களை ஏமாற்றுகிறீர்களா?’ என வனத்துறை அதிகாரிகளிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ‘மக்களின் உயிரோடு விளையாடும் வனத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஆட்கொல்லி சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்காமல் விட்டுவிட்டு, மக்களை ஏமாற்ற நாடகங்களை அரங்கேற்றிவரும் ஆசனூர் வனச்சரக அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை சொன்னது உண்மையா? இல்லையா? என்பது, சிறுத்தையினால் அடுத்து ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும்போது தான் தெரியவரும்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

குழந்தை இல்லாத சோகம்… குடியை நிறுத்தாத கணவன் – மனைவி எடுத்த விபரீத முடிவு!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலீபன் (35). பெருந்துறையைச் சேர்ந்த அருணா (31) என்பவரைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திலீபன் கோபியில் உள்ள ‘கிளாசிக் பைனான்ஸ்’ நிதி நிறுவனத்தில் கலெக்‌ஷன் பிரிவில் பணியாற்றி வர, அருணா கோபியில் உள்ள ‘சி.கே.கே மெட்ரிகுலேசன்’ பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால், தம்பதியர் இருவரும் இதற்கான மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே, திலீபனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததோடு, குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குழந்தைப்பேறுக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், மது அருந்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படும் நிலையிலும், திலீபன் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். சம்பவத்தன்று (அக்.20) இரவு 10 மணிக்கு மேல் திலீபன் வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சூழலில் இப்படித் தொடர்ந்து குடிப்பது சரியா? என அருணா கேட்க, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன்பின்னர், திலீபன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று தூங்கியுள்ளார். கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த அருணா, வீட்டிலுள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நள்ளிரவு சுமார் 3 மணியளவில் போதை தெளிந்து கீழே இறங்கி வந்து பார்த்த திலீபன், அருணா தூக்கில் தொங்கியபடி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருணாவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு அருணாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதனிடையே, அருணாவின் தாய் ஜாய் மேரி மருத்துவமனை முன்பு கதறி அழுததுடன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “எனக்கு கணவர் இல்லை. 3 மகள் மட்டுமே உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு 10 பவுன் நகை போட்டு, என் மகளை திலீபனுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனாலும், திலீபன் குடித்துவிட்டு என் மகளிடம் பணம், நகையை வரதட்சனையாக வாங்கி வரும்படி கேட்டுத் தொல்லை கொடுத்து வந்தார். குழந்தை இல்லை என்றும் தொடர்ந்து கொடுமைப்படுத்தினார். இப்படியான நிலையில், என் மகள் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார். என்னுடைய மகள் அருணாவின் சாவில் சந்தேகம் இருக்கிறது. என்னுடைய மகளை அடித்துக் கொன்றுவிட்டார்கள், அவளுடைய சாவுக்கு நீதி வேண்டும்” எனக் கூறி உறவினர்களுடன் மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருணாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவன் திலீபனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். திருமணமான நான்கே ஆண்டுகளில் அருணா உயிரிழந்திருப்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாக கோபி வருவாய்க் கோட்டாட்சியர் சிந்துஜா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஒன்றாக மது அருந்திய கணவன், மனைவி… ஓவர் போதையில் மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன்!

ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகேயுள்ள காரைவாய்க்கால்புதூரைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் (45) – ராஜேஸ்வரி (40) தம்பதியர். நாகராஜ் தறிப்பட்டறையிலும், ராஜேஸ்வரி பிரிண்டிங் பட்டறையிலும் வேலை செய்து வந்தனர்.  கடந்த அக்.19-ம் தேதி இரவு, நாகராஜும் மனைவி ராஜேஸ்வரியும் வீட்டில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ராஜேஸ்வரி, வீட்டினருகே இருந்த ஆட்டுப்பட்டியில் தூங்கச் சென்றுள்ளார். நாகராஜ் அங்கு சென்றும் தகராறு செய்ய, ராஜேஸ்வரி அவரை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், மனைவி ராஜேஸ்வரியை கீழே தள்ளியும், கட்டையாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி, மயங்கிச் சரிந்துள்ளார். இதன்பிறகு நாகராஜ் வீட்டுக்குச் சென்று தூங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்து வெளியே சென்றுவிட்டு, மதியம் சுமார் 12.30 மணியளவில் வீட்டிற்குத் திரும்பிய நாகராஜ் ஆட்டுப்பட்டிக்குச் சென்று பார்த்தபோது மனைவி அசைவில்லாமல் கிடந்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு பதறிப்போனவர், போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க திட்டம் தீட்டியுள்ளார். அதாவது ராஜேஸ்வரியின் மரணத்தை ஏதோ திடீர் உடல்நலக்குறைவால் ஏற்பட்ட ‘இயற்கை மரணம்’ போலக் காட்டி, அவசர அவசரமாகச் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். நாகராஜின் இந்த அவசர இறுதிச்சடங்கு ஏற்பாடுகளும், ராஜேஸ்வரியின் திடீர் மரணமும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக அக்கம்பக்கத்தினருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே, இதுகுறித்து சித்தோடு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனிடையே கணவர் நாகராஜைப் பிடித்து விசாரித்தனர். அதில், குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்துக் கொன்றதாகவும், போலீசில் சிக்காமல் இருக்க அவசர அவசரமாக இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்ததையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் நாகராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Scroll to Top