தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

திருப்பூர் அரசுப் பள்ளியில் வெடித்த மத விவகாரம்… களமிறங்கிய இந்து முன்னணி

திருப்பூர் குமார் நகர் பகுதியில் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி, மத அடையாளங்கள் தேவையற்ற பிரிவினைகளையும் மோதல்களையும் ஏற்படுத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளன. இதனைத் தடுக்கும் விதமாக, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் கைகளில் கட்டப்பட்டிருந்த பல்வேறு வண்ணக் கயிறுகளை, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று அகற்றிய பிறகே மாணவர்களை பள்ளிக்குள் அனுமதித்துள்ளனர். இந்தத் தகவல் தெரிந்ததும் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளியின் முன்பு கூடினர். மாணவர்களின் மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு விவகாரங்களில் பள்ளி நிர்வாகம் தலையிடக் கூடாது. பொட்டு வைப்பதும், கயிறு கட்டுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனக் கூறி கண்டனம் தெரிவித்தனர். மேலும், சிவப்பு நிறக் கயிறுகளை மாணவர்களின் கைகளில் மீண்டும் கட்டி விட்டனர். அரசுப் பள்ளியில் நடந்த இந்த மத விவகாரம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சினிமா பாணியில் ஸ்கெட்ச்… தாய்மாமன் வீட்டில் 23 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த ‘மருமகள்’

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள தேவண்ணகவுண்டனூர் சத்யா நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (47). சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், தனஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கடந்த நவம்பர் 12-ஆம் தேதி பழனிவேல் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி செல்லம்மாள் சுய உதவிக் குழு கடன் தொடர்பாக சங்ககிரி ஸ்டேட் பேங்குக்கு சென்றிருந்தார். வேலைகளை முடித்துக்கொண்டு மாலை 4 மணியளவில் அவர் வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த மகளின் தங்கத் தோடு வீட்டின் கதவினருகே கிடந்துள்ளதைக் கண்டு சந்தேமடைந்த அவர், படுக்கை அறையிலிருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த சுமார் 23 பவுன் தங்க நகைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து, பழனிவேல் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். மேலும், அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தனிப்படைகள் அமைத்து விசாரணையில் இறங்கினர். வீட்டின் வெளிப்புறப் பூட்டும், பீரோவும் உடைக்கப்படாமல் நகைகள் கொள்ளை போனதால், சாவி வைக்கப்படும் இடம் தெரிந்த நெருக்கமானவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்க முடியும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். சம்பவத்தன்று தான் வங்கிக்குச் சென்றபோது பழனிவேலின் அக்கா மகளான சங்கீதா தன்னுடன் நீண்ட நேரம் இருந்ததாக செல்லம்மாள் தெரிவித்துள்ளார். இதையடுத்து சங்கீதாவை சந்தேக வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்தனர். அதையடுத்து செல்லம்மாளும் சங்கீதாவும் சென்றுவந்த இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்லம்மாளின் ஸ்கூட்டியில் இருந்த வீட்டுச் சாவியை சங்கீதா எடுத்து, இரண்டு இளைஞர்களிடம் கொடுத்ததும், மற்றொரு சிசிவிடி காட்சியில் அந்த சாவியை அவர்கள் சங்கீதாவிடம் திரும்பக் கொடுப்பதும், அதை அவர் செல்லாம்மாளின் ஸ்கூட்டியில் வைப்பதும்  பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து சங்கீதாவின் செல்போன் அழைப்பு விபரங்களை ஆராய்ந்தபோது, சம்பவ நடந்த அன்று சங்கீதா இரு இளைஞர்களின் எண்களுக்கு தொடர்ச்சியாக பலமுறை பேசியது தெரிந்தது. சங்கீதா மற்றும் இரு இளைஞர்களையும் பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த சங்கீதா (30), சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லும் தொழில் செய்து வந்துள்ளார். அந்தவகையில், சங்ககிரி ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் (26) மற்றும் ஈரோடு மாவட்டம், பவானி சேத்துனாம்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (22) ஆகிய இருவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நெருக்கமான நண்பர்களாக மாறியுள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சொந்த தாய்மாமா வீட்டிலேயே திருட திட்டம் தீட்டிய சங்கீதா, இதற்கு தனது நெருங்கிய நண்பர்களான கிருபாகரன் மற்றும் பிரவீன் குமார் ஆகிய இருவரை கூட்டாளிகளாகச் சேர்த்துள்ளார். திட்டமிட்டபடி, மாமா வீட்டுச் சாவியை எடுத்து தனது ஆண் நண்பர்களிடம் கொடுத்து, அவர்கள் நகைகளை திருடிவிட்டு திரும்பும் வரை, அத்தை செல்லம்மாளை வங்கி வேலை முடிந்த பிறகும் துணிக்கடைகளுக்கு அழைத்துச் சென்று சங்கீதா நேரத்தைக் கடத்தியுள்ளார். வெற்றிகரமாக கொள்ளையை முடித்து, சாவியை ஸ்கூட்டியில் வைத்த பிறகு தனக்கு எதுவும் தெரியாதது போல் அத்தையை வீட்டுக்கு வழியனுப்பி வைத்துள்ளார். இதன்பிறகு மூவரும் நகைகளை பங்கிட்டுக் கொண்டுள்ளனர். வெற்றிகரமாக கொள்ளையை முடித்த மகிழ்ச்சியில் அதைக் கொண்டாட சங்கீதா தனது நண்பர் பிரவீன் குமாருடன் ‘இன்பச் சுற்றுலா’ சென்றதும் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 22 பவுன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கமாக தாய்மாமன் மடியில் வைத்து சகோதரியின் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பார்கள். ஆனால், சங்கீதா தனது தாய்மாமனுக்கே மொட்டை அடித்துள்ளார்!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை… குப்பையில் வீசிய கொடூரம்!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரே தாய் சேய் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குப்பைத் தொட்டி அருகே கிடந்த ஒரு கட்டைப் பையைச் சுற்றி ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஊழியர்கள் அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதனுள்ளே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள் உடனே திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குப்பையில் வீசப்பட்டது ஆண் குழந்தை என்றும், பிறக்கும்போதே முட்டிக்குக் கீழே கால்கள் இல்லாமல் பிறந்ததால் குழந்தையைக் கொலை செய்து குழந்தையைப் பெற்றவர்களே குப்பையில் வீசிச் சென்றாரா? தாய் சேய் நல மருத்துவமனைக்கு அருகில் இந்தக் குழந்தை கிடந்ததால் அங்கு பிரசவமான குழந்தையா? அல்லது வேறு எங்கிருந்தாவது குழழந்தையைக் கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்றுள்ளனரா? என்ற கோணத்தில்  போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருப்பூர் தெற்கு போலீசார், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குழந்தையை வீசிச் சென்றது யார்? எனத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பச்சிளம் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

பெருந்துறை இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ரேஸில் வரிசைகட்டும் உடன்பிறப்புகள்!  

பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளருமான முத்துசாமி, கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் அடிபடும் நிலையில், இன்னும் பலரும் இடைத்தேர்தலில் சீட் பெற வரிசைகட்டி நிற்கின்றனர்.  இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சி செய்துவரும் நிர்வாகிகள் யார் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்து பார்ப்போம். தொகுதியின் சீனியர் ஒருங்கிணைந்த பெருந்துறை ஒன்றியச் செயலாளராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர் கே.பி.சாமி. 1996-2001 காலக்கட்டத்தில் பெருந்துறை யூனியன் சேர்மன் ஆக இருந்தவர். 2016-ல் பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளராகப் களமிறங்கி 68 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர். 2018-ல் பெருந்துறையில் நடைபெற்ற திமுக மண்டல மாநாடு பணிகளை முன்னின்று செய்து தலைமையின் பாராட்டைப் பெற்றவர். தற்போது திமுக மாநில தேர்தல் பணிக்குழுவின் துணைத்தலைவராக உள்ளார். முத்துசாமியின் தீவிரமான ஆதரவாளரான இவர், பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். பாரம்பரிய கழகக் குடும்பம் பெருந்துறை திமுக நகரச் செயலாளராகவும், தற்போதைய நகர்மன்றத் தலைவராகவும் இருப்பவர் ராஜேந்திரன். இவரது தந்தை விஸ்வநாதன், ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட திமுக துணைச் செயலாளராக 3 முறை பதவி வகித்தவர். பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மற்றும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் ஆதரவுடன் வேட்பாளர் வாய்ப்பைப் பெற முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. முத்துசாமியின் சிபாரிசு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளராக இருப்பவர் சரளை ராசு (எ) கோபால். கட்சியின் தீவிர களப்பணியாளராக அறியப்படும் இவர், இதுவரை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மாவட்டச் செயலாளர் முத்துசாமியின் ஆதரவாளராக இருக்கும் இவர், அவரது பரிந்துரையின் மூலம் பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்கக் காத்திருக்கிறார். தலைமையிடம் விருப்பமனு பெருந்துறை மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் சோளி பிரகாஷ். திருவாச்சி ஊராட்சியின் முன்னாள் தலைவரான இவர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆதரவுடன் வேட்பாளர் வாய்ப்பைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதற்கிடையே, சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து, பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். நற்பணி மன்ற ரூட் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணைத் தலைவராக இருப்பவர் மூங்கில்பாளையம் குணசேகரன். இவர் பெருந்துறை தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகவும் உள்ளார். பெருந்துறை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் உதயநிதி நற்பணி மன்ற கிளைகளைத் தொடங்கியது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது என உதயநிதியின் குட்புக்கில் இடம்பெற்றவர். அந்த ரூட் மூலமாக இடைத்தேர்தல் சீட் பெற முயற்சிக்கிறார்.  இளைஞரணி அடையாளம் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் விஜயமங்கலம் பாலசுப்பிரமணியம். வழக்கறிஞரான இவர், நீண்டகாலமாகக் கட்சியில் செயல்பட்டு வருபவர். இளைஞரணியைச் சேர்ந்தவர் என்பதால், இளம் நிர்வாகிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் தனக்குச் சாதகமாக அமையும் எனக் கணக்குப் போடுகிறார். ஈரோடு எம்.பி. பிரகாஷ் மற்றும் மாவட்டச் செயலாளர் முத்துசாமி ஆகியோரின் ஆதரவுடன் இடைத்தேர்தல் வேட்பாளர் வாய்ப்பைப் பெற முழு வீச்சில் முயற்சி செய்து வருகிறார். சமூக சேவை பின்னணி பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் லோகேஸ்வரன். காஞ்சிக்கோயிலைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், ‘கங்கா ஃபுட்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். பல்வேறு சமூகநல அமைப்புகளுடன் இணைந்து பொதுநலச் சேவைகள் மற்றும் உதவிகளைச் செய்து வருவதுடன், கட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்தப் பின்னணியுடன், ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆதரவின் மூலம் பெருந்துறை தொகுதி வேட்பாளர் வாய்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தொழிலதிபர் டு அரசியல் பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் SAN செந்தில்குமார். இவரது குடும்பம் தொடக்க காலம் முதலே முத்துசாமியின் ஆதரவாளர்களாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. திமுகவில் தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். விரைவில் நடைபெறவுள்ள திமுக உட்கட்சித் தேர்தலில் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் செயலாளர் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டியிடவும் விருப்பம் கொண்டுள்ள இவர், முத்துசாமி மற்றும் ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆகியோரின் ஆதரவுடன் வேட்பாளர் வாய்ப்பைப் பெற முழு வீச்சில் முயன்று வருகிறார். ஒருபுறம் முன்னாள் அமைச்சர் முத்துசாமி, கூட்டணிக் கட்சியின் கொங்கு ஈஸ்வரன் மற்றும் கே.பி.சாமி என முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர் போட்டியில் இருக்க, மறுபுறம் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் இளம் தலைமுறையினர் பலரும் களத்தில் இறங்கியுள்ளனர்.  அறிவாலயம் யாரை ‘டிக்’ அடிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

ஓரங்கட்டும் செங்கோட்டையன்? – மன உளைச்சலில் தவெக மாவட்டச் செயலாளர்!

தவெக ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் பிரதீப்குமார், உட்கட்சியில் நிலவும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி தனது முகநூல் பக்கத்தில் மனக்குமுறலைக் கொட்டியுள்ளார். முகநூல் பதிவில் இருப்பது என்ன? மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்த சிலர், விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து பயணித்த பழைய நிர்வாகிகளைத் திட்டமிட்டு ஓரங்கட்டுகின்றனர். சட்டமன்றத் தேர்தலின்போது பவானிசாகர் தொகுதி தவெக வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்ட தாளவாடி சிக்கன் பாபு மற்றும் பிரச்சாரத்தின் போது நிர்வாகிகளிடமிருந்த விசிலைப் பிடுங்கி வீசிய கடம்பூர் நாச்சிமுத்து உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியில் இணைந்து அதிகாரம் செய்கின்றனர். சாதி மற்றும் பொருளாதார அடிப்படையில் ஒரு சிலர் மட்டுமே சுயலாபம் அடைய முயற்சிக்கின்றனர். மாவட்டச் செயலாளர் என்றுகூடப் பாராமல் என்னைத் தாக்க வந்த நபரை பொறுத்துக்கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஈரோடு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து தலைமையைச் சந்தித்து எங்களது பிரச்னைகளைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக்கொள்வோம். இந்தப் பதிவால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்துகொண்டே இப்படி ஒரு பதிவை வெளியிடுகிறேன் என்றால், எந்த அளவுக்கு மன உளைச்சலில் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என பிரதீப்குமார் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். செங்கோட்டையன் தரப்பின் நெருக்கடி? இதன் பின்னணி குறித்து விஷயமறிந்தவர்களிடம் பேசினோம். “செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததில் இருந்தே பிரதீப்குமாரை ஓரங்கட்டத் தொடங்கிவிட்டார். அவரை பதவியிலிருந்து தூக்கிவிட்டு தனது ஆதரவாளர் ஒருவரை மாவட்டச் செயலாளராக்க செங்கோட்டையன் தரப்பு நினைக்கிறது. இதன் காரணமாக பிரதீப்குமாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், அவருக்கு எதிராகப் பல்வேறு வழிகளில் மறைமுக நெருக்கடிகளைக் கொடுத்தும் வருகிறது. மாவட்டச் செயலாளராக இருந்தும் சுயமாக செயல்பட முடியாத அளவுக்கு ‘டம்மி’ ஆக்கப்பட்டு வருவது பிரதீப்குமாருக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அடிக்கப் பாய்ந்த செங்கோட்டையன் ஆதரவாளர்! சமீபத்தில், செங்கோட்டையனின் வலதுகரமாக வலம்வரும் நபர் ஒருவர், செங்கோட்டையனின் வீட்டில் வைத்தே மாவட்டச் செயலாளர் பிரதீப்குமாரை அடிக்கப் பாய்ந்துள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த பிரதீப்குமார், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து, மாவட்ட அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி ஆகியோரைத் தொடர்பு கொண்ட புஸ்ஸி ஆனந்த், பிரச்சினையைப் சுமுகமாகப் பேசி முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தைக்காக அமைச்சர் விஜய் பாலாஜியை கோபிசெட்டிபாளையம் வருமாறு செங்கோட்டையன் தரப்பு அழைத்துள்ளது. இதற்கிடையே, ‘தனது ஆதரவாளரான பிரதீப்குமாரை உங்கள் வீட்டில் வைத்து அவமானப்படுத்திவிட்டு, அங்கே பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுவீர்களா?’ என வர மறுத்ததோடு, வேண்டுமானால் பொதுவான ஒரு இடத்தில் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என விஜய் பாலாஜி தரப்பு கூறியுள்ளது.  இதையடுத்து பெருந்துறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் ரிசார்ட்டில் இந்தப் பஞ்சாயத்து நடந்துள்ளது. ஆனால், அதில் எந்தத் சுமுகத் தீர்வும் ஏற்படவில்லை. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனத்திற்கு பிரச்சினையை கொண்டு சென்றும் தீர்க்கப்படாதது பிரதீப்குமாருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே தற்போது பேஸ்புக்கில் அதிருப்தியைக் வெளிப்படுத்தியுள்ளார்’ என்றனர். நடவடிக்கை பாயுமா? பிரதீப்குமாரின் பதிவில் செங்கோட்டையனின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும்,  செங்கோட்டையன் தரப்புடன் மோதல் நிலவும் சூழலில் இந்தப் பதிவு யாரை நோக்கி வெளியிடப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது. 20 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்து பயணிக்கும் பிரதீப்குமாரின் பிரச்சினையை தலைமை சரி செய்யுமா? அல்லது நேற்று கட்சியில் இணைந்த செங்கோட்டையன் தரப்பின் அடாவடியை வேடிக்கை பார்க்குமா?

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட காதல் மனைவி… போதையில் அடித்துக் கொன்ற கணவன்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளையன் (எ) பாலசுப்பிரமணியம் (45). இவர் ஊட்டியைச் சேர்ந்த மலர் (40) என்பவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாகத் திருப்பூர் தட்டான்தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், திருப்பூர் பூ மார்க்கெட்டில் லோடுமேன் ஆகப் பணியாற்றி வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மலருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மனைவியை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டிய பாலசுப்பிரமணியம், தினமும் மது அருந்தியும், கஞ்சா போதையிலும் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், இனி உன்னுடன் வாழ முடியாது எனக் கூறி ஊட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மலர் சென்றுவிட்டார். இதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம், இனி குடியையும் போதையையும் தொடமாட்டேன் எனக் கெஞ்சி சமாதானம் பேசி மலரை மீண்டும் திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அதன் பிறகும் பாலசுப்பிரமணியத்தின் போதைப் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தவர், தீபாவளியை முன்னிட்டுப் பூ மார்க்கெட் வியாபாரிகளிடம் தீபாவளி வசூல் செய்துள்ளார். அந்தப் பணத்தில் மறுபடியும் குடிக்கத் தொடங்கியுள்ளார்.  இந்நிலையில், நவம்பர் 13-ஆம் தேதி காலையில் இருந்தே மதுபோதையில் இருந்த பாலசுப்பிரமணியம் மனைவி மலரிடம் தகராறில் ஈடுபட்டு, வீட்டிலிருந்த மலரின் பாட்டியிடமும் சண்டையிட்டு அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். கரூரிலுள்ள உறவினர் வீட்டில் இரண்டு குழந்தைகள் தங்கியிருந்த நிலையில், இளைய மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.  மாலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம் வீட்டிலிருந்த இரும்புக் கம்பியை எடுத்து மலரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த மலர், அந்த அடியைத் தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  மனைவி இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டை விட்டுத் தப்பியோடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். உயிரிழந்த மலரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமறை இருந்த பாலசுப்பிரமணியத்தை கைது செய்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலித்து கைப்பிடித்த மனைவியை மதுபோதையில் கணவனே அடித்துக் கொன்ற சம்பவம் திருப்பூர் தட்டான்தோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

முத்துசாமி Vs ஈஸ்வரன் – பெருந்துறை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் யார்?

பெருந்துறை தொகுதி காலியாக உள்ளதால் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் யார் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுகவின் எஃகு கோட்டை! பெருந்துறை தொகுதி அதிமுகவின் கோட்டை ஆகும். அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் 1996 தேர்தல் தவிர, மற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2026 தேர்தலிலும் பெருந்துறை தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொண்டது. தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாலும், எடப்பாடி பழனிசாமியின் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் ஆதரவு அதிமுகவுக்குப் பலமாக இருக்கிறது.  இந்நிலையில், ஆளுங்கட்சியான தவெக மற்றும் தொகுதியில் செல்வாக்குடன் இருக்கும் அதிமுகவை வீழ்த்துவது கடினம் என்பதை திமுக தலைமை உணர்ந்துள்ளது. வெற்றி பெறாவிட்டாலும், இரண்டாவது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை தீவிரமாக உள்ளது.  எனவே, புதுமுகத்தை களமிறக்குவதை விட, மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒருவரை நிறுத்தினால்தான் தேர்தலில் டஃப் கொடுக்க முடியும் என அறிவாலயம் தரப்பு யோசிக்கிறதாம்! பெருந்துறையை குறிவைக்கும் முத்துசாமி? முன்னாள் அமைச்சரும், திமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான முத்துசாமி பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. திமுகவின் கட்சி மறுசீரமைப்பில் முத்துசாமியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகிறது. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான முத்துசாமிக்கு தற்போது 78 வயது ஆகிறது. 2031 சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருப்பதைவிட, இந்த இடைத்தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். பெருந்துறையின் அடையாளங்களில் ஒன்றான ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உருவாக்கியது, பெருந்துறை திமுக நிர்வாகிகளின் ஆதரவு, பொதுமக்களிடம் தனக்கிருக்கும் நற்பெயர் ஆகியவற்றின் காரணமாக தான் களமிறங்கினால் வெற்றி பெற்றுவிடலாம் என முத்துசாமி நம்புகிறாராம்.  ‘பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை’ என கட்சி நிர்வாகிகளிடம் சொன்னாலும், தொகுதிக்குள் தீவிரமாக வலம் வருகிறார் முத்துசாமி.  திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகளை ஊத்துக்குளியில் கொட்டுவதற்கு அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் யாரும் அங்கு நேரில் செல்லாத நிலையில் முத்துசாமி மட்டுமே அங்கு சென்றார். அதேபோல், ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளில் 13 இடங்களில் கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. அதில், பெருந்துறை தொகுதியில் மட்டும் 7 இடங்களில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதுமட்டுமின்றி, சமீபத்தில் பெருந்துறை தொகுதியின் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு மட்டும் பல லட்சம் ரூபாய் செலவில் பரிசுப் பொருட்களை வழங்கி கவனித்துள்ளார்.  முத்துசாமியின் இந்த நடவடிக்கைகளைக் கவனித்துவரும் தவெக மற்றும் அதிமுக முகாம்கள், அவர் களமிறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும் என கலக்கத்தில் இருக்கின்றன.  யோசனையில் கொமதேக! திமுக கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்க யோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.  பெருந்துறையில் 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கொமதேக, சுமார் 15 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. மற்ற தொகுதிகளைக் காட்டிலும் பெருந்துறை தொகுதியில் கொமதேக-வின் செல்வாக்கு கணிசமாக உள்ளது.   எனவே, திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரனை களமிறக்கலாம் என கொமதேக தரப்பு தீவிர ஆலோசனையில் உள்ளது. உதயநிதியின் கணக்கு! இதற்கிடையே, தவெகவை சமாளிக்க இளம் நிர்வாகி ஒருவரை இடைத்தேர்தல் வேட்பாளராகக் களமிறக்கலாம் என உதயநிதி ஸ்டாலின் யோசிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், கட்சியில் உள்ள இளம் நிர்வாகிகள் பலரும் வேட்பாளர் ரேஸில் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.  மக்களுக்கு நன்கு பரிச்சயமான முன்னாள் அமைச்சர் முத்துசாமியை திமுக தலைமை களமிறக்குமா? கூட்டணிக் கட்சியான கொமதேகவுக்கு வாய்ப்பளிக்குமா? அல்லது உதயநிதியின் யோசனைப்படி இளம் நிர்வாகி வேட்பாளர் ஆவாரா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம். இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே பெருந்துறையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

12 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… போலீசில் சிக்கிய கொடூரன்!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அந்தச் சிறுமியின் வீடு ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ளது. நேற்றிரவு (நவ.12) சுமார் 9 மணியளவில் தோழி ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு, தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், திடீரென சிறுமியின் வாயைப் பொத்தி அருகிலிருந்த புதர்மண்டிய பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு சிறுமியின் கை, கால்களை துணியால் கட்டிப்போட்டு சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் நிலைதடுமாறி செய்வதறியாது திகைத்து நின்ற சிறுமி, சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டுக்குச் சென்று, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த அம்மிக்கல் தயாரித்து விற்பனை செய்துவரும் விஷ்ணு (26) என்பது தெரியவந்தது. அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவான விஷ்ணுவைப் பிடிக்க நல்லூர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, கவிதா, உதவி ஆய்வாளர் வேல்பாண்டி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அய்யம்பாளையம் காட்டுப்பகுதியில் விஷ்ணு பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரைப் பிடிக்க முயன்றபோது, தப்பியோட முயற்சி செய்த விஷ்ணு கீழே விழுந்ததில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டு போலீசாரிடம் சிக்கினார்.  இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கால் முறிவுக்கு சிகிச்சையளித்த பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: எஸ்.ஐ டிரான்ஸ்பரில் வெளிவந்த உண்மை… ஈரோடு மாவட்ட காவல்துறையின் நாடகம் அம்பலம்?

ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாது (எ) மகாதேவா (19) என்பவரை தாளவாடி காவல் நிலைய ஓய்வு அறையில் போலீசார் கட்டி வைத்து தாக்கும் வீடியோ கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் செப்டம்பர் 9ஆம் தேதி அறிக்கை ஒன்று வெளியானது. அதில், இந்தச் சம்பவம் 2024 செப்டம்பரில் நடைபெற்றது எனவும் தற்போது நடைபெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இந்த வீடியோ செய்தி மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் இளைஞரைத் தாக்கிய தாளவாடி எஸ்.ஐ மார்ட்டின் லூதர் மற்றும் ஏட்டு தனபால் அகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி, ஈரோடு எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் 26 எஸ்.ஐகளை பணியிட மாறுதல் செய்து எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்தப் பட்டியலில் வரிசை எண் 22-ல் எஸ்.ஐ மார்ட்டின் லூதர் தாளவாடி காவல் நிலையத்திலிருந்து புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் ஈரோடு மாவட்ட காவல்துறையின் மீது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக எஸ்.ஐ மார்ட்டின் லூதர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக வெளியான செய்தி உண்மை என்றால், தற்போதைய பணியிட மாற்ற அறிவிப்பில் ஆயுதப்படையில் இருந்து புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தாளவாடி காவல் நிலையத்தில் இருந்து புளியம்பட்டிக்கு மாற்றப்படுவதாக எப்படி அறிவிப்பு வெளியானது? கைதியைத் தாக்கிய சர்ச்சையில் சிக்கிய எஸ்.ஐ மார்ட்டின் லூதர் உண்மையிலேயே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாரா? அல்லது தாளவாடியிலேயே தொடர்ந்து பணியாற்றினாரா? என சந்தேகம் எழுகிறது. எஸ்.ஐ மார்ட்டின் லூதர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் என அனைத்து முன்னணி ஊடகங்களிலும் செய்து வெளியானது. அந்தச் செய்தி தவறானது என்றால், செய்தி வெளியான போதே ஈரோடு மாவட்ட காவல்துறை அதை மறுத்து ஏன் அறிக்கை வெளியிடவில்லை? இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் கண் துடைப்பிற்காக, எஸ்.ஐ மார்ட்டின் லூதர் ஆயுதப்படைக்கு மாற்றம் என பொய்யான அறிவிப்பு வெளியிடப்பட்டதா? இல்லை அவர் உண்மையிலேயே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்றால் அதுதொடர்பான உத்தரவு நகலை வெளியிட மாவட்ட காவல்துறை தயாராக உள்ளதா?  செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி கைதியைத் தாக்கிய விவகாரத்தில் எஸ்.ஐ மார்ட்டின் லூதர் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதே மிகமிக குறைந்தபட்ச நடவடிக்கை தான். ஆனால், அந்த இடமாற்ற நடவடிக்கையே வெறும் கண் துடைப்பு நாடகம் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே, எஸ்.ஐ மார்ட்டின் லூதர் பணியிட மாறுதல் சர்ச்சையில் நடந்தது என்ன? என்பதை ஈரோடு மாவட்ட எஸ்.பி கிரண் ஸ்ருதி தெளிவுபடுத்த வேண்டும்!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

குடும்பத்தினருக்கு தெரியாமல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கர்ப்பிணி… பிரசவத்தின்போது நடந்த விபரீதம்!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (36). இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், பிரியங்கா (30) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், தம்பதிக்கு குழந்தை இல்லை.  இதையடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘கவின் கருத்தரித்தல் மருத்துவமனையில்’ சிகிச்சை பெற்று, செயற்கை கருத்தரித்தல் முறையில் பிரியங்கா கருவுற்றிருந்தார்.  இந்நிலையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி பிரியங்காவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே, குடும்பத்தினர் அவரை கவின் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கவின் மருத்துவமனை மருத்துவர் மாலினி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பிரியங்காவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல், அவசர அவசரமாய் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர் மாலினியே முன்னின்று பிரியங்காவிற்கு பிரசவம் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. சிசேரியன் முறையில் நடைபெற்ற இந்த பிரசவத்தின் போது பிரியாங்காவின் வயிற்றில் இருந்த இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை பரிதாபமாக இறந்து பிறந்துள்ளது.  இதற்கிடையே, தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பிரியங்காவின் குடும்பத்தினருக்கு, தாய் மற்றும் குழந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர், எங்களுக்குத் தெரியாமல் எதற்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தீர்கள்? மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் பிரசவத்தின் போது ஒரு குழந்தை இறந்துவிட்டது எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பிறகு உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். தற்போது பிரியங்காவும் மற்றொரு குழந்தையும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Scroll to Top