Author name: admin

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

எலுமிச்சை பழத்தால் நடந்த விபரீதம்… ஒர்க்‌ஷாப் உரிமையாளரை துரத்தி துரத்தி வெட்டிய இளநீர்க் கடைக்காரர்! 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் வினோத் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக டூவீலர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையின் அருகே திருநெல்வேலியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் இளநீர்க் கடை வைத்துள்ளார். வினோத் தனது கடையில் சாமி படத்திற்கு வைத்திருந்த எலுமிச்சை பழம் மற்றும் பூக்களை எடுத்து வெளியே வீசியபோது, அந்த எலுமிச்சை பழம் உருண்டு சென்று இளநீர்க் கடை முன்னால் விழுந்துள்ளது.  இதைப் பார்த்து ஆத்திரமடைந்த வெள்ளத்துரை, “என் கடைக்கு செய்வினை வெச்சு எலுமிச்சை பழத்தை போடுறீயா?” எனக் கேட்டு வினோத்திடம் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த வெள்ளத்துரை கடையில் இளநீர் வெட்ட வைத்திருந்த அரிவாளால் வினோத்தை துரத்தி துரத்தி வெட்டியுள்ளார்.  வினோத்தின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வெள்ளத்துரையிடம் இருந்து வினோத்தை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

3 திருமணங்களுக்குப் பிறகும் அடங்காத இன்ஸ்டா மோகம்… இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற 4-வது கணவர்!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சுவேதா (24). இவர் கடந்த வருடம் சென்னை பூந்தமல்லியில் உள்ள செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.  அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்துவந்த விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த அஜித்குமார் (28) என்பவருடன் சுவேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்டதாகவும், தனக்கு பெற்றோர், உறவினர்கள் என யாருமில்லை என சுவேதா கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அஜித்குமார், சுவேதா மீது கொண்ட காதலால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு அஜித்குமாரின் சொந்த ஊரான வத்திராயிருப்பில் 2 மாதங்கள் வசித்து வந்தனர். சரியான வேலை கிடைக்காததால் மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ளனர். சுவேதாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததோடு, எந்நேரமும் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஓட்டுப்போட சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, உறவினர்களை பார்த்து வருவதாகச் சொல்லியுள்ளார். ‘உனக்குத் தான் யாருமில்லையே! என கணவர் விசாரிக்க, சுவேதா மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதன்பிறகு சுவேதாவின் பின்னணி குறித்து அஜித்குமார் விசாரிக்க ஆரம்பித்ததும் அவருக்கு பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. சுவேதாவிற்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்திருப்பதும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சுவேதாவின் சொந்த ஊரான எரியோட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த உண்மைகள் தெரிந்து அஜித்குமார் சண்டை போட, சுவேதா சென்னைக்கு வராமல் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இப்படியான சூழலில் கடந்த மாதம் பழைய பிரச்னைகளை எல்லாம் மறந்துவிட்டு, புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் எனக்கூறி சுவேதாவின் பெற்றோர் வீட்டினருகே வீடு வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் இருந்து வந்தனர். ஆனாலும், இருவருக்கும் இடையே பிரச்சினை ஓயவில்லை. சுவேதா தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையே, தீபாவளியன்று சுவேதாவின் செல்போனை பார்த்துவிட்டு அஜித்குமார் சண்டை போட, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுவேதாவை சரமாரியாக வெட்டிவிட்டு, எரியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், எரியோடு இன்ஸ்பெக்டர் வினோதா உள்ளிட்ட போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுவேதாவின் உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் சுவேதாவின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால், பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சரிந்து விழுந்த ராட்சத கிரேன்… குடும்பத்தின் வறுமையைப் போக்க இஸ்ரேல் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் வீரமணி (31). இவருக்கு புவனேஸ்வரி (25) என்ற மனைவியும், தேஜாஸ்ரீ (4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். குடும்பச் சூழல் காரணமாக, வீரமணி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டிற்கு கட்டிட வேலைக்குச் சென்றுள்ளார். வீரமணி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான மூங்கில்பட்டிக்கு வந்து விட்டு மீண்டும் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார். இந்நிலையில், கடந்த அக்.27-ம் தேதி பணியில் இருந்தபோது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி வீரமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி வீரமணியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வீரமணியின் உடலை விரைவாகத் தமிழகத்திற்கு கொண்டுவரவும், குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘பாபநாசம்’ பட பாணியில் மனைவியை கொன்று புதைத்த கொடூரன்; 3 நாள் தேடலில் 30 அடி ஆழத்தில் சிக்கிய எலும்புகள்!

திண்டுக்கல் அருகே உள்ள இரண்டலப்பாறை  பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லாரன்ஸ் (36). இவருக்கும் கெளசல்யா (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 5 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியருக்கு இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த கௌசல்யா திடீரென மாயமானார். குட்டத்துபட்டியில் வசித்துவரும் பெற்றோரிடம் கெளசல்யா தினமும் போனில் பேசுவது வழக்கம். ஆனால், மகளிடம் இருந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் எந்த போனும் வராததால் சந்தேகமடைந்த கௌசல்யாவின் பெற்றோர், மருமகன் லாரன்ஸிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அவரிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை.  அதையடுத்து, ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என பதறிப்போன கெளசல்யாவின் பெற்றோர், தங்களுடைய மகளை கண்டுபிடித்து தருமாறு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார், லாரன்ஸைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரத்தில் அவரைக் கொன்றுவிட்டதாகவும், விஷயம் வெளியே தெரிந்தால் போலீசிடம் மாட்டிக் கொள்வோம் என பயந்து மனைவியின் உடலை மறைக்க திட்டமிட்டதாகவும், பாபநாசம் பட பாணியில் சிறுமலை அடிவாரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரிங் ரோடு பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மனைவியின் உடலைப் போட்டு மூடியதாகவும் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். இதையடுத்து, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வினோத் முன்னிலையில் லாரன்ஸ் அடையாளம் காட்டிய இடத்தில், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடலைக் கண்டுபிடிக்கும் பணி தொடங்கியது. அந்த இடத்தில் ரிங் ரோடு அமைப்பதற்காக பழைய கிணறுகள் மூடப்பட்டிருந்ததால் உடலைக் கண்டெடுப்பதில் பெரும் சிக்கல் நீடித்தது. 3 நாட்கள் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, கௌசல்யாவின் சேலை மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட எலும்புகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், லாரன்ஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாபநாசம் பட பாணியில் நடந்துள்ள இந்தச் சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

முட்புதரை ‘கஞ்சா குடோன்’ ஆக மாற்றிய வடமாநிலத் தொழிலாளி… போலீசிடம் சிக்கிய பின்னணி! 

வட மாநிலங்களில் இருந்து திருப்பூர் மாநகரப் பகுதிக்கு அதிகளவில் கஞ்சா கடத்தி வரப்பட்டு ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த வடமாநில வாலிபர் ஒருவரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்த, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். அதனையடுத்து போலீசார் தங்களது பாணியில் விசாரித்துள்ளனர். விசாரணையில், போலீசில் சிக்கிய நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் நாயக் (23) என்பதும், திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் தங்கி அங்குள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவ்வப்போது ஒடிசா சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. கஞ்சாவை பதுக்கி வைத்துள்ள இடத்தை போலீசார் கேட்டபோது, பிடிபட்ட இடத்திற்கு அருகில் இருந்த முட்புதர் ஒன்றை அடையாளம் காட்டியுள்ளார். அங்கு சோதனை செய்தபோது, முட்புதரையே குடோன் போல மாற்றி, அங்கு பண்டல் பண்டலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கணேஷ் நாயக்கை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

லாட்ஜில் தங்கிய தம்பதியை மிரட்டி தாலிக்கொடியை பறித்த ‘சஸ்பெண்ட்’ போலீஸ்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் சூரஜ் (30) மற்றும் அவரது மனைவி யசோதப்பிரியா (27) ஆகிய இருவரும் காங்கேயம் – கரூர் சாலையில் உள்ள ‘லட்சுமி டவர்’ லாட்ஜில் தங்கியிருந்தனர். இரவு சுமார் 11 மணியளவில், இவர்களது அறைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், தான் விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸ் எனக் கூறி, கீழே தனது உயரதிகாரிகள் நிற்பதாகவும், அவர்களிடம் சொல்லாமல் இருக்கப் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். தாங்கள் கணவன்-மனைவி என்றும், பணம் தர முடியாது எனவும் தம்பதியினர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கத்தியைக் காட்டி மிரட்டி யசோதப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளார். தம்பதியினர் கூச்சலிடவே, லாட்ஜில் இருந்த ஊழியர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து காங்கேயம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி, முத்துபுடையாம்பட்டியைச் சேர்ந்த பாவாஷா (33) என்பதும், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்தபோது கடந்த 2024-ல் சென்னையிலுள்ள ஒரு ஓட்டலில் இதேபோல் விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸ் என மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என தெரியவந்தது. அதையடுத்து பாவாஷா மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாராபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள பாவாஷா சென்னை மதுரவாயல் பகுதியில் தம்பதி ஒருவரை இதே பாணியில் மிரட்டி ரூ.1 லட்சம் கேட்டுள்ளார். கணவர் ஏ.டி.எம்-க்கு பணம் எடுக்கச் சென்ற நேரத்தில், அவரது மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காங்கேயம் லாட்ஜில் தம்பதியை மிரட்டி நகை பறித்த விவகாரத்தில் காங்கேயம் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

THE WEST RADAR: கதர் அமைச்சரை கதறவிட்ட மஞ்சள் மாவட்ட நிர்வாகம்!

சமீபத்தில் மஞ்சள் மாவட்டத்திற்கு வருகை தந்த கதர்க் கட்சி அமைச்சரை, மாவட்ட நிர்வாகம் நடத்திய விதம் தான் அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக்!  என்ன நடந்தது என விசாரித்தபோது, பொதுவாக ஒரு மாவட்டத்திற்கு துறை சார்ந்த அமைச்சர் ஆய்வுக்கு வரும்போது, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வரவேற்பு கொடுப்பது வழக்கம். ஆனால், கதர் அமைச்சர் வந்தபோது, மாவட்ட உயர் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததோடு, அவரை வரவேற்க தாசில்தார் ஒருவரை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் கடுப்பான அமைச்சர், ‘நீங்க எதுக்கு வந்தீங்க? உங்க உயர் அதிகாரிகள் எல்லாம் எங்க போயிட்டாங்க?’ எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியதோடு, ‘எனக்கு யாரும் வரவேற்பு கொடுக்க வேண்டாம். நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க!’ என தாசில்தாரை விரட்டியுள்ளார். கதர் அமைச்சர் வந்த அதேநாளில், முதன்மையானவர் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து ஆய்வு செய்ய, ஆனந்தமான அமைச்சர் சிப்காட் நகரத்தில் உள்ள கல்லூரிக்கு வருகை தந்திருந்தார். மாவட்ட நிர்வாகம் முழுவதும் ஆனந்தமான அமைச்சரை கவனிக்கச் சென்றுவிட்டதால், கதர் அமைச்சரை வரவேற்க சம்பிரதாயத்திற்கு ஒரு தாசில்தாரை மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். விஷயமறிந்த கதர் அமைச்சர், ‘எங்க தயவுல தான் இந்த ஆட்சியே நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு கூட்டணிக் கட்சி அமைச்சருக்கு மரியாதை கொடுக்கும் லட்சணம் இதுதானா?’ என கொதித்துள்ளார். வரவேற்பு களேபரங்கள் முடிந்து, மாநகரில் உள்ள டிராவலர்ஸ் பங்களாவிற்கு ஓய்வெடுக்கச் சென்ற போதுதான் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபிக்களுக்கு ஒதுக்கும் அறையைத் தராமல், சாதாரண நபர்கள் தங்கும் அறையைக் கொடுத்துள்ளனர். இதனால் மேலும் கடுப்பான கதர் அமைச்சர், ‘விவிஐபிக்களுக்கான அறை என்ன ஆனது?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.  நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் வரவிருப்பதாகவும், அவருக்காக அந்த அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பல்லைக் கடித்துக்கொண்டு வேறு வழியில்லாமல், அந்த சாதாரண அறையிலேயே தங்கியுள்ளார்.  ஆனந்தமான அமைச்சரை வழி அனுப்பி வைத்தபிறகு, கதர் அமைச்சரைக் காண மாவட்ட உயரதிகாரி சாவகாசமாக வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கதர் அமைச்சர், ‘உங்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த மரியாதையே மனநிறைவா இருக்கு. இப்ப நீங்க எதுக்கு வந்தீங்க’ என வெடித்துள்ளார். ஒருவழியாக மாவட்டத்தில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் எதேச்சையாக அந்த விவிஜபி அறையை எட்டிப் பார்த்தபோது, அந்த அறை பூட்டியே இருந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க, வருவதாகச் சொன்ன அந்த முக்கியஸ்தர் வரவில்லை எனக் கூலாகக் கூறியுள்ளனர். இதனால் நொந்துபோன அமைச்சர், மஞ்சள் மாவட்டத்துக்காரங்க பேச்சுல மட்டும் தான் மரியாதை தருவாய்ங்க போல… என நொந்தபடியே நடையைக் கட்டியுள்ளார். ஆக மொத்தத்தில் கதர் அமைச்சரையே கதற விட்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம்!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

இறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய ரூ.2500 லஞ்சம், சிக்கிய சுகாதார ஆய்வாளர்!

இறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய ரூ.2500 லஞ்சம் பெற்ற மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ​திண்டுக்கல் அருகேயுள்ள கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமார். முன்னாள் ராணுவ வீரரான இவரது தந்தை பொன்ராஜ் 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து, தனது தந்தையின் ஓய்வூதியத்தை தாய் தமயந்தி லட்சுமிக்கு பெற்றுத் தருவதற்காக, இறப்புச் சான்றிதழில் உள்ள தாயாரின் பெயரில் இருந்த எழுத்துப் பிழையைத் திருத்தம் செய்ய திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் குமார் மனு அளித்திருந்தார். அப்போது அங்கிருந்த சுகாதார ஆய்வாளர் தங்கவேலு பிழையைத் திருத்திக் கொடுக்க ரூ.2500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை குமாரிடம் கொடுத்துள்ளனர். அந்தப் பணத்தை சுகாதார ஆய்வாளர் தங்கவேலு வாங்கும்போது, மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் மற்றும் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார், தங்கவேலுவைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். ​திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே சுகாதார ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சொந்த ஊருக்குக் கிளம்பும் வடமாநிலத்தவர்கள்… திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

திருப்பூர் மாநகரில் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த தொழில் நிறுவனங்களில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.  வடமாநிலங்களில் தீபாவளியைத் தொடர்ந்து கோவர்த்தன் பூஜை, பாய் தூஜ் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை என அடுத்தடுத்து பண்டிகைகள் நடைபெறுகின்றன. குடும்பத்தினருடன் இணைந்து இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இதனால், வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. போதிய ரயில்கள் இயக்கப்படாததால், டிக்கெட் கிடைக்காத பலரும்  முன்பதிவில்லாத பெட்டிகளில் நெருக்கியடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருக்கும் தொழிலாளர்கள், ரயில்கள் வந்ததும் முண்டியடித்துக் கொண்டு ஏறிச் செல்கின்றனர். இன்று காலை திருப்பூரில் இருந்து பீகார் மாநிலம் பரோனி சென்ற சிறப்பு ரயிலிலும் ஏராளமான தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஏறிச் சென்றனர். ரயிலுக்குள் இடம் பிடிப்பதில் பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சில இடங்களில் வாக்குவாதமும் ஏற்பட்டது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

போலி நகைகளை அடகு வைத்து மோசடி; போலீசில் சிக்கிய இருவர்!

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்த அஸ்வின் ரங்கேஷ் மற்றும் மணிகண்டன். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். அஸ்வின் ரங்கேஷ் பனியன் கம்பெனியிலும், மணிகண்டன் சுமை தூக்கும் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் முத்தூட் ஃபைனான்ஸில் தங்க நகைகள் எனக்கூறி அடகு வைத்து ரூ.3.50 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்துள்ள நகைகளை மீட்டு விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறி, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மற்றொரு நகை அடகு நிறுவனத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை அணுகியுள்ளனர்.  அதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி ரூ.3.50 லட்சம் பணத்தை முத்தூட் நிறுவனத்தில் செலுத்த, அடகில் இருந்த நகையை இருவரும் மீட்டுக் கொடுத்துள்ளனர். ஏற்கனவே அடகில் இருந்த நகை என்பதால், அது தங்க நகை தான் என நம்பி கிருஷ்ணமூர்த்தி எடுத்துச் சென்றுள்ளார். அந்த நகைகளை தங்களது நிறுவனத்தில் சோதனை செய்தபோது, அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்து, கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான போலீசார், தலைமறைவாக இருந்த மணிகண்டன் மற்றும் அஸ்வின் ரங்கேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Scroll to Top