உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று கொலை… உள்ளாடைக்குள் சிக்கிய ஆதாரம்! – நர்ஸ் கொலையின் அதிரவைக்கும் பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித்குமார் (27) – உத்திரா (26) தம்பதியர். திருமணத்திற்குப் பிறகு திருப்பூர் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரஞ்சித்குமார் மீன் கடையில் வேலை செய்துவர, உத்திரா அக்.3-ல் இருந்து பல்லகவுண்டன்பாளையம் பி.எம் மருத்துவமனையில் நர்ஸ் ஆகப் பணிபுரிந்துள்ளார்.

உத்திரா வேலைக்குச் செல்லும்போதும், திரும்ப வரும்போதும் ரஞ்சித்குமார் அழைத்து வருவது வழக்கம். கடந்த அக்.14-ல் மனைவியை அழைத்துவரச் சென்றபோது, ‘உத்திரா மாலை 7.15 மணிக்கே வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டார்’ என மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.  

மனைவி வீட்டிற்கும் வராமல் மாயமானதால், மறுநாள் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகே, பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் உள்ள காட்டில் ஒரு இளம்பெண்ணின் அழுகிய சடலம் நிர்வாண நிலையில் கிடப்பதாகப் பெருந்துறை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. 

சடலத்தைக் கைப்பற்றி விசாரித்ததில் அது மாயமான உத்திரா என்பது உறுதியானது. அதையடுத்து, கொலையாளியைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

உள்ளாடைக்குள் கிடைத்த முதல் ஆதாரம்!

தனிப்படை போலீசார் பல கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, உத்திராவின் உள்ளாடைக்குள் இருந்து ஒரு சிறிய துண்டுச்சீட்டைக் கண்டுபிடித்தனர். அதில் ஒரேயொரு போன் நம்பர் மட்டும் எழுதப்பட்டிருந்தது. அது உத்திரா வேலை பார்த்த மருத்துவமனையில் பணிபுரியும் சரவணன் என்பவரின் நம்பர் என்பது தெரியவந்தது.

சரவணனைப் பிடித்த போலீசார், ‘உத்திராவுடன் உனக்குப் பழக்கம் இருந்ததா?’ என விசாரிக்க, ‘அவர் யார் என்றே எனக்குத் தெரியாது’ எனக் கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார் மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உத்திராவும் சரவணனும் தோளில் கைபோட்டுப் பேசும் அளவுக்கு நெருக்கமாகப் பழகி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் மீண்டும் சரவணனை துருவியெடுக்க, உத்திராவுடன் பழகி வந்ததை போலீசிடம் சொன்னால் பிரச்னை வரும் என்பதால் பொய் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

குழம்பிப் போன போலீசார்!

ஆனாலும், சரவணை நம்பாமல், ‘சம்பவத்தன்று எங்கிருந்தாய்?’ என போலீசார் விசாரிக்க, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் கோர்ஸ் படித்து வருவதால், மருத்துவமனை வேலை முடிந்தபிறகு அங்கே சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். பெருந்துறை மருத்துவக் கல்லூரி சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்த போது, சம்பவத்தன்று சரியாக இரவு 8.31 மணிக்கு சரவணன் அங்கிருந்தது தெரிந்தது. 

இரவு 7.15 மணிக்கு பல்லகவுண்டன்பாளையம் மருத்துவமனையில் இருந்து கிளம்பிய உத்திராவை கொலை செய்துவிட்டு, இரவு 8.31-க்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு வந்து கேஷூவலாக வேலை பார்க்க முடியுமா? எனக் கருதிய போலீசார், சரவணனை விட்டுவிட்டு சந்தேகப் பட்டியலில் இருந்த மற்ற நபர்களை விசாரிக்க ஆரம்பித்தனர்.

காட்டிக் கொடுத்த சிசிடிவி!

இதற்கிடையே, பல்லகவுண்டன்பாளையத்தில் இருந்து விஜயமங்கலம் டோல்கேட் வரையுள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில், சரவணன் தனது பைக்கில் உத்திராவை அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை சரவணனிடம் காட்ட, வேறு வழியின்றி தான் உத்திராவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான்.

15 நிமிடத்தில் அரங்கேறிய கொடூரம்!

உத்திராவும், சரவணனும் மருத்துவமனையில் நெருங்கிப் பழகி வந்ததுள்ளனர். சம்பவத்தன்று, ஒதுக்குப்புறமான இடத்துக்குச் சென்று உல்லாசமாக இருக்கலாம் என விஜயமங்கலம் டோல்கேட் அருகேயுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, உத்திராவின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி உள்ளான்.

அதே ஆடையை வைத்து உத்திராவின் கழுத்தை இறுக்கிக் கொன்று, அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினை திருடியுள்ளான். இந்தக் கொலையை ஒரு பாலியல் வன்கொடுமை போலக் காட்டி போலீசை திசை திருப்ப வேண்டும் என, உத்திராவின் ஆடைகளை வேறு இடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான். வெறும் 15 நிமிடத்திற்குள் கொலை செய்துவிட்டு, சரியாக 8.31 மணிக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுள்ளான்.

எதற்காக இந்த வெறிச்செயல்?

நர்சிங் கோர்ஸ் முடித்துவிட்டு, துபாய்க்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது சரவணனின் ஆசை. அதற்கான விசா, பிளைட் டிக்கெட், ஏஜெண்ட் கமிஷன் என மொத்தம் ரூ.3.50 லட்சம் அவனுக்கு தேவைப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே ஒரு மொபைல் பறிப்பு வழக்கில் சிக்கியிருந்த சரவணனனுக்கு, வழக்கு செலவுகளுக்காக ரூ.35 ஆயிரம் தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடன் நெருங்கிப் பழகிவந்த உத்திரா அணிந்திருந்த தாலிச் செயினை கவனித்துள்ளான். அதனைப் பறிப்பதற்காக உல்லாச ஆசை காட்டி தனியிடத்திற்கு அழைத்துச் சென்று, இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான்.

சரவணனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்த 4 பவுன் தாலிச் செயினை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முறையற்ற உறவு எந்த மாதிரியான விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே உதாரணம்!

பிற செய்திகள்

Scroll to Top