மாவட்டம்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பிறந்தநாள் விழா, இறந்தநாளாக மாறிய சோகம் – அதிவேகத்தால் பலியான கல்லூரி மாணவன், மாணவி!

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள கந்தம்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கவுதம் (வயது 21). கரூர் தலவபாளையத்தில் உள்ள குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு EEE படித்து வந்தார். இவருடன், நாமக்கல் மாவட்டம், மோகனூர் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் மதுப்பிரியா (வயது 20), நாமக்கல் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகள் காமினி (வயது 20), நாமக்கல் அலைவாய்பட்டியைச் சேர்ந்த அருள் மகள் அனுசியா (வயது 20) மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முத்துசாமி மகள் தேவதர்ஷினி (வயது 20) ஆகிய 4 மாணவிகளும் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர். நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்வதற்காக கெளதம், தனது உறவினர் காரை வாங்கி வந்துள்ளார். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், கெளதம் மற்றும் 4 மாணவியரும், பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக காரில் கரூருக்கு கிளம்பியுள்ளனர். மாலை 5 மணியளவில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் தனியார் பள்ளி அருகே அதிவேகமாக சென்றபோது, கவுதமின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பலமாக மோதி நொறுங்கியது. இதில், காரை ஓட்டிய கவுதம் மற்றும் காரின் முன் இருக்கையில் பயணித்த மதுப்பிரியா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரின் பின் இருக்கையில் இருந்த மற்ற 3  மாணவிகளும் படுகாயமடைந்தனர். விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், காயமடைந்த மாணவிகளை மீட்டு, சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பிரேதப் பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கவுதம் மற்றும் மதுப்பிரியாவின் உடல்களைப் பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியழுதது காண்போரை கலங்கடித்தது. இந்த விபத்து தொடர்பாக, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் விழாற்காக சென்ற கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘லாபம் கொட்டும்… நிறைய முதலீடு செய்யுங்க’ – ஆன்லைன் செயலியை நம்பி ரூ.16 லட்சத்தை பறிகொடுத்த நபர்!

‘பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்’ என ஆசை வார்த்தை காட்டி, பெருந்துறையைச் சேர்ந்தவரிடம் ரூ.16.19 லட்சத்தை ஆன்லைன் செயலி மூலம் சுருட்டிய கும்பலை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (50). இவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதில் ஆர்வம் இருந்துள்ளது. இதுதொடர்பான தகவல்களைச் சமூக வலைதளங்களில் தேடி வந்த நிலையில், அவரது வாட்ஸ்-அப்க்கு பங்குச்சந்தை தொடர்பான ஆலோசனைகள் வந்துள்ளது. ‘எந்த நிறுவன பங்குகளை எப்போது வாங்கினால் லாபம் கிடைக்கும்?’ என அந்த மெசேஜில் இருந்த தகவல்களின்படி கார்த்திகேயன் முதலீடு செய்ய, அவருக்கு ஓரளவிற்கு லாபம் கிடைத்துள்ளது. கார்த்திகேயன் தங்களின் வலையில் விழுந்துவிட்டதை உறுதி செய்த அந்த ஆன்லைன் கும்பல், தங்களுடைய சீட்டிங் வேலையை காட்டத் தொடங்கியது. ‘இந்த பிரத்யேக செயலியை (App) பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் இன்னும் அதிகமாகப் பணம் சம்பாதிக்கலாம்’ எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பியுள்ளனர். அதை முழுமையாக நம்பிய கார்த்திகேயன், அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடந்த ஜூலை 21-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை பல தவணைகளாக மொத்தம் ரூ.16.19 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அவர் பணத்தை முதலீடு செய்யச் செய்ய, டிரேடிங்கில் அந்தப் பணம் பல்கிப் பெருகி, லட்சக்கணக்கில் லாபம் வந்ததைப் போல செயலியில் காட்டியுள்ளது. இதைப்பார்த்த கார்த்திகேயன்,  தன் பணம் பெருகி வருகிறது என்ற ஆசையில் இருந்துள்ளார். செப்டம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு, ஆன்லைன் செயலியில் காட்டிய பெரிய தொகையைத் தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயன்றுள்ளார். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தபோது, அந்த ஆன்லைன் செயலியே போனிலிருந்து மாயமாகி விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திகேயன், இது குறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் வாட்ஸ்-அப் எண்களை வைத்து ஆன்லைன் மோசடிக் கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கைகூடாத காதல்… சோகத்தில் கல்லூரி பேராசிரியை எடுத்த விபரீத முடிவு! 

ஈரோடு, பெரியசேமூர் தென்றல் நகர் பகுதியைச்  சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் ரம்யாஸ்ரீ (வயது 26). பெற்றோருடன் சூரம்பட்டி குமணன் வீதியில் வசித்து வந்தார். எம்.இ. பட்டதாரியான ரம்யாஸ்ரீ, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். கல்லூரியில் படித்தபோது இவருக்கும், ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், ரம்யாஸ்ரீக்கு அந்த இளைஞர் மீது காதல் வந்துள்ளது. ஆனால், அந்த இளைஞரோ, “நீங்கள் என்னை விட 2 வயது மூத்தவர். இதனால் எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்” எனக்கூறி, ரம்யாஸ்ரீயின் காதலை ஏற்க மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.  இதனால் ரம்யாஸ்ரீ மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையே, அந்த இளைஞர் ஏற்கனவே காதலித்து வந்த ஒரு பெண்ணை, இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இந்த விஷயம் தெரியவந்ததும் ரம்யாஸ்ரீ மேலும் உடைந்து போயுள்ளார். இதற்கிடையே, அந்த இளைஞரின் தாயார் ரம்யாஸ்ரீக்கு போன் செய்து, “என்னுடைய மகனுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. இனிமேல் அவனுக்கு ஃபோன் செய்தால், அவனது குடும்ப வாழ்க்கையில் உன்னால் பிரச்னை வந்துவிடும். எனவே, இனிமேல் அவனுக்கு ஃபோன் செய்ய வேண்டாம்!” எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, கடந்த சில நாட்களாகவே யாரிடமும் பேசாமல் சோகத்தில் மூழ்கியிருந்த ரம்யாஸ்ரீ, கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார். தொடர்ந்து நீடித்த மன அழுத்தத்தின் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த சூரம்பட்டி போலீசார், ரம்யாஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஆர்டரே பண்ணல… ஆனா பேங்க்ல இருந்து ரூ.1.76 லட்சம் காலி! – ஈரோடு ஊழியருக்கு நேர்ந்த பகீர் சம்பவம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்மையன்புதூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (56). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், வீட்டில் இருந்தபடியே மலிவு விலையில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது குறித்து ஆன்லைனில் தேடியுள்ளார். அவர் தேடிய சில மணி நேரங்களிலேயே அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், மிகவும் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் பெற இந்த ஷாப்பிங் செயலியைப் இன்ஸ்டால் செய்யுங்கள் எனக் கூறி ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது.  ஆஃபர் ஆசையால் அந்த லிங்கை க்ளிக் செய்து செயலியைத் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். செயலியைத் திறந்து பொருட்கள் மற்றும் அவற்றின் விலைப் பட்டியலை சில நிமிடங்கள் மட்டுமே பார்த்துள்ளார். எந்தவொரு பொருளையும் அவர் ஆர்டர் செய்யவில்லை, பணப் பரிவர்த்தனையும் செய்யவில்லை.  ஆனால், அவரது வங்கி கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமலேயே ரூ. 1,76,099 மாயமாகியிருப்பது தெரியவந்து அதிர்ந்து போனார். இழந்த  பணத்தை மீட்டுத் தரக்கோரி, ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஓடும் ரயிலில் கேட்ட இளம்பெண்ணின் அலறல் சத்தம் – சிக்கிய 50 வயது ‘சில்மிஷ’ ஆசாமி!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரூவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி பெங்களூரூவில் இருந்து மதுரைக்குச் செல்ல மைசூரு–தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில், 17ஆம் தேதி அதிகாலை ஈரோடு ஸ்டேஷனைத் தாண்டி ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அதே பெட்டியில் இளம்பெண்ணின் இருக்கைக்கு மேலே உள்ள இருக்கையில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர், மெதுவாக அப்பெண்ணின் அருகில் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.  இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். அதைக்கேட்டு சக பயணிகள் திரண்டு, சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரைப் பிடித்து கரூர் ஸ்டேஷன் வந்ததும் ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னியம்மன்மேடு, பிரகாஷ் நகரைச் சேர்ந்த செல்வவிநாயகன் (வயது 50) என்பது தெரிந்தது.  சம்பவம் நடைபெற்ற இடம் ஈரோடு ரயில் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால், செல்வவிநாயகனை ஈரோடு ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Uncategorized, தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“ஏன் ஸ்கூலுக்கு வரல..?” – கேள்வி கேட்ட தலைமையாசியரை தாக்கிய பள்ளி மாணவர்கள்

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கர்னல் (54). இந்தப் பள்ளியில் பிளஸ் டூ படித்துவரும் மாணவர்கள் 6 பேர், தினசரி வகுப்புகளுக்கு வராமல், நேரடியாக காலாண்டுத் தேர்வெழுத மட்டும் வந்துள்ளனர். இந்தத் தகவல் பள்ளியின் தலைமையாசிரியரான கர்னல் கவனத்துக்கு சென்றுள்ளது. அதையடுத்து அவர் அந்த மாணவர்களை அழைத்து, பள்ளிக்கு தொடர்ச்சியாக வராததற்கான காரணத்தைக் கேட்டு விசாரித்துள்ளார். மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்ல,  “ஸ்கூலுக்கு தொடர்ந்து வராமல், தேர்வெழுத அனுமதிக்க முடியாது” எனச் சொல்லி கண்டித்து அனுப்பியுள்ளார்.   சிறிது நேரத்தில் திபுதிபுவென தலைமையாசிரியர் அறைக்குள் புகுந்த அந்த பிளஸ் டூமாணவர்கள், தலைமையாசிரியரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அருகிலுள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் ஓடிவந்து பார்த்தபோது, மாணவர்கள் தாக்கியதில் தலைமையாசிரியர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. காயமடைந்த தலைமையாசிரியரை கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு பள்ளிக்குத் திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களை தனித்தனியாக அழைத்து  விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் அவர்கள், “தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியது மோசமான செயல். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“என் வழியை மறிப்பியா?” – 70 வயது முதியவர் மீது டிராக்டரை ஏற்றிச் சாய்த்த கொடூரன்! 

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள போத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி காளநாயக்கர் (வயது 70). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 50) என்பவருக்கும் இடையே தோட்டத்திற்குச் செல்லும் வண்டித்தடத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் ரங்கசாமி தனது டிராக்டரில் தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காளநாயக்கர், ரங்கசாமியின் டிராக்டரை வழிமறித்து நிறுத்தியுள்ளார். “வண்டித்தடப் பிரச்சனை முடியும் வரை, இந்தப் பாதையில் வரக்கூடாது!” என  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, ஆத்திரமடைந்த ரங்கசாமி, தான் ஓட்டி வந்த டிராக்டரை முதியவர் காளநாயக்கர் மீது ஏற்றியுள்ளார். டிராக்டர் சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர் துடிதுடித்து இறந்ததைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த ரங்கசாமி, டிராக்டரை எடுத்துச் சென்று தனது வீட்டின் முன் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி டி.எஸ்.பி சீதாலட்சுமி மற்றும் பவானி போலீசார் காளநாயக்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பவானி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ரங்கசாமியை தேடி வருகின்றனர். வண்டித்தடப் பிரச்சனையில் 70 வயது முதியவர் டிராக்டர் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பறந்து வந்து விழுந்த கார்; ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி – நாமக்கல்லில் சோகம் 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள மோளயாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் (வயது 35). இவர் கயிறு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். இவரின் மனைவி காவ்யாஸ்ரீ (வயது 34), பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கார்த்திக் குமாரின் தந்தை செல்வராஜ் (வயது 60), தாய் காந்திமதி (55) ஆகியோரும் இவர்களுடன் பெங்களூரூ ஈஜிபுரா பகுதியில் வசித்து வந்தனர். காவ்யாஸ்ரீ தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்நிலையில், கரூரில் உள்ள உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, கார்த்திக் குமார் மற்றும் அவரது பெற்றோர் நேற்று (செப்டம்பர் 15) இரவு பெங்களூருவில் இருந்து கரூருக்கு காரில் கிளம்பியுள்ளார். இன்று (செப்டம்பர் 16) அதிகாலை சுமார் 2 மணியளவில், நாமக்கல் நல்லிபாளையம் அருகே சேலம் – கரூர் பைபாஸில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் பெங்களூரூ நோக்கிச் சென்று கொண்டிருந்த தார் ஜீப் ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனைத் தாண்டி பறந்து வந்து, கார்த்திக் குமாரின் காரின் மீது விழுந்ததில், கார் சுக்குநூறாக நொறுங்கியதோடு, காரில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளையம் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் குமார், அவரது தந்தை செல்வராஜ், தாய் காந்திமதி ஆகிய மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிட்டனர். நல்லிபாளையம் போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய தார் ஜீப்பை ஓட்டியவர் பெங்களூரூவைச் சேர்ந்த கிருஷ்ணகவுடா (19) என்பதும், காரில் யதுநாதன் (19), சிவகுமார் (32), கௌதமி (30) என மொத்தம் 4 பேர் பயணித்ததும் தெரியவந்தது. தற்போது நால்வரும் பெங்களூரூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகவுடா ஜீப்பை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஒருவரின் கவனக்குறைவு ஒரு குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

வாழைத் தோப்பில் அலறல் சத்தம்… ஈரோட்டில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! 

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள செம்மாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (41). இவரது கணவர் அய்யாவு. இவர்களுக்கு மரியா என்ற மகளும், மனோஜ் என்ற மகனும் உள்ளனர். அய்யாவு கடந்த 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல், வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார். இதனால் செல்விதான் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். மகள் மரியாவிற்குத் திருமணமான நிலையில், 15 வயதான மகன் மனோஜ் குடும்ப சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். செல்வி கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். மனோஜ் தாயைப் பார்ப்பதற்காக அடிக்கடி அந்தத் தோட்டத்திற்கு வந்து செல்வார். நேற்று (15.09.2026) மாலை 4 மணியளவில் வழக்கம் போல தாய் செல்வியைப் பார்ப்பதற்கு மனோஜ் தோட்டத்திற்கு வந்துள்ளார். சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பியுள்ளார். வாழைத் தோப்பு வழியே வீட்டுக்குத் சென்ற நிலையில், காற்று மற்றும் மழையின் காரணமாக அறுந்துக்கிடந்த மின்கம்பியை மனோஜ் எதிர்பாராதவிதமாக மிதிக்க, நொடிப் பொழுதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.  சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த தாய் செல்வியும், தோட்டத்தில் இருந்தவர்களும் பதறியடித்துச் சென்று பார்க்க, மனோஜ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மனோஜை கோபி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“சாவியைத் தர முடியாது…” – பூட்டை உடைத்து அதிரடி காட்டிய ஆர்.டி.ஓ… ஈங்கூர் கோயிலில் உச்சக்கட்ட பரபரப்பு!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள ஈங்கூரில் மிகவும் பழமை வாய்ந்த தம்பிராட்டி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கொங்கு வேளாளர் சமூகத்தின் ‘ஈஞ்சன்’ குலத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குலதெய்வக் கோயிலாக இது விளங்கி வருகிறது. இக்கோயிலை அப்பகுதியைச் சேர்ந்த ஈஞ்சன் குலப் பெரியவர்கள் நிர்வகித்து வந்தனர். நாளடைவில் இரு கோஷ்டிகளாகப் பிரிந்தனர். இதனால் எழுந்த நிர்வாகச் சிக்கல்களால், கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்க வேண்டும் என சுப்பிரமணி என்பவரது தலைமையிலான தரப்பு கோரிக்கை வைக்க, கோயில் நிர்வாகத்தினை அறநிலையத்துறை எடுத்து கொள்ள முடிவு செய்தது. இதற்கு சாந்தமூர்த்தி என்பவரது தலைமையிலான தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கோயிலைத் தொடர்ந்து நிர்வகித்து வந்தனர். இந்த நிர்வாகப் போட்டியின் தொடர்ச்சியாக, கோயிலின் பொறுப்புக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சாந்தமூர்த்தி தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாந்தமூர்த்தி தரப்பினரின் நிர்வாகம் செல்லத்தக்கது அல்ல என்றும், கோயிலை முன்பு நிர்வகித்து வந்த சுப்பிரமணி தலைமையிலான ‘தம்பிராட்டி அம்மன் அறக்கட்டளை’ கோயிலின் நிர்வாகப் பொறுப்புகளை தொடர்ந்து நடத்தலாம் எனவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை தக்கார் தனலட்சுமி தலைமையில் சுப்பிரமணி தரப்பினர் இன்று (15.09.2026) கோயிலுக்கு வந்தனர். ஆனால், சாந்தமூர்த்தி தரப்பினர் கோயிலின் சாவிகளைக் கொடுக்க மறுத்து, பூட்டி வைத்துப் பிரச்சனை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தரப்பினர் திரண்டு வந்து ஈங்கூர் ரவுண்டானா அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெருந்துறை – சென்னிமலை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்து வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து கோயில் வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, சாந்தமூர்த்தி தரப்பினர் நிர்வாகத்தை ஒப்படைக்க 3 நாட்கள் கால அவகாசம் வேண்டுமென கேட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்திலேயே ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி, பெருந்துறை வட்டாட்சியர் செல்வகுமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார் மற்றும் ஈரோடு டி.எஸ்.பி. முத்துக்குமார் ஆகியோர் இருதரப்பிடமும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உள்ளூர் தரப்பினர் சாவியை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து சலசலப்பில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறிச் சென்றதால், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமியின் அதிரடி உத்தரவின் பேரில் கோயில் அலுவலகப் பூட்டு உடைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சுப்பிரமணியம் தரப்பிடம் நிர்வாகப் பொறுப்புகள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. சாலை மறியல், போக்குவரத்து ஸ்தம்பிப்பு மற்றும் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் ஈங்கூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Scroll to Top