முட்புதரை ‘கஞ்சா குடோன்’ ஆக மாற்றிய வடமாநிலத் தொழிலாளி… போலீசிடம் சிக்கிய பின்னணி!
வட மாநிலங்களில் இருந்து திருப்பூர் மாநகரப் பகுதிக்கு அதிகளவில் கஞ்சா கடத்தி வரப்பட்டு ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த வடமாநில வாலிபர் ஒருவரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்த, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். அதனையடுத்து போலீசார் தங்களது பாணியில் விசாரித்துள்ளனர். விசாரணையில், போலீசில் சிக்கிய நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் நாயக் (23) என்பதும், திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் தங்கி அங்குள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவ்வப்போது ஒடிசா சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. கஞ்சாவை பதுக்கி வைத்துள்ள இடத்தை போலீசார் கேட்டபோது, பிடிபட்ட இடத்திற்கு அருகில் இருந்த முட்புதர் ஒன்றை அடையாளம் காட்டியுள்ளார். அங்கு சோதனை செய்தபோது, முட்புதரையே குடோன் போல மாற்றி, அங்கு பண்டல் பண்டலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கணேஷ் நாயக்கை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.









