மாவட்டம்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

திருப்பூர் அரசுப் பள்ளியில் வெடித்த மத விவகாரம்… களமிறங்கிய இந்து முன்னணி

திருப்பூர் குமார் நகர் பகுதியில் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி, மத அடையாளங்கள் தேவையற்ற பிரிவினைகளையும் மோதல்களையும் ஏற்படுத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளன. இதனைத் தடுக்கும் விதமாக, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் கைகளில் கட்டப்பட்டிருந்த பல்வேறு வண்ணக் கயிறுகளை, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று அகற்றிய பிறகே மாணவர்களை பள்ளிக்குள் அனுமதித்துள்ளனர். இந்தத் தகவல் தெரிந்ததும் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளியின் முன்பு கூடினர். மாணவர்களின் மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு விவகாரங்களில் பள்ளி நிர்வாகம் தலையிடக் கூடாது. பொட்டு வைப்பதும், கயிறு கட்டுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனக் கூறி கண்டனம் தெரிவித்தனர். மேலும், சிவப்பு நிறக் கயிறுகளை மாணவர்களின் கைகளில் மீண்டும் கட்டி விட்டனர். அரசுப் பள்ளியில் நடந்த இந்த மத விவகாரம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சினிமா பாணியில் ஸ்கெட்ச்… தாய்மாமன் வீட்டில் 23 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த ‘மருமகள்’

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள தேவண்ணகவுண்டனூர் சத்யா நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (47). சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், தனஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கடந்த நவம்பர் 12-ஆம் தேதி பழனிவேல் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி செல்லம்மாள் சுய உதவிக் குழு கடன் தொடர்பாக சங்ககிரி ஸ்டேட் பேங்குக்கு சென்றிருந்தார். வேலைகளை முடித்துக்கொண்டு மாலை 4 மணியளவில் அவர் வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த மகளின் தங்கத் தோடு வீட்டின் கதவினருகே கிடந்துள்ளதைக் கண்டு சந்தேமடைந்த அவர், படுக்கை அறையிலிருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த சுமார் 23 பவுன் தங்க நகைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து, பழனிவேல் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். மேலும், அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தனிப்படைகள் அமைத்து விசாரணையில் இறங்கினர். வீட்டின் வெளிப்புறப் பூட்டும், பீரோவும் உடைக்கப்படாமல் நகைகள் கொள்ளை போனதால், சாவி வைக்கப்படும் இடம் தெரிந்த நெருக்கமானவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்க முடியும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். சம்பவத்தன்று தான் வங்கிக்குச் சென்றபோது பழனிவேலின் அக்கா மகளான சங்கீதா தன்னுடன் நீண்ட நேரம் இருந்ததாக செல்லம்மாள் தெரிவித்துள்ளார். இதையடுத்து சங்கீதாவை சந்தேக வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்தனர். அதையடுத்து செல்லம்மாளும் சங்கீதாவும் சென்றுவந்த இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்லம்மாளின் ஸ்கூட்டியில் இருந்த வீட்டுச் சாவியை சங்கீதா எடுத்து, இரண்டு இளைஞர்களிடம் கொடுத்ததும், மற்றொரு சிசிவிடி காட்சியில் அந்த சாவியை அவர்கள் சங்கீதாவிடம் திரும்பக் கொடுப்பதும், அதை அவர் செல்லாம்மாளின் ஸ்கூட்டியில் வைப்பதும்  பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து சங்கீதாவின் செல்போன் அழைப்பு விபரங்களை ஆராய்ந்தபோது, சம்பவ நடந்த அன்று சங்கீதா இரு இளைஞர்களின் எண்களுக்கு தொடர்ச்சியாக பலமுறை பேசியது தெரிந்தது. சங்கீதா மற்றும் இரு இளைஞர்களையும் பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த சங்கீதா (30), சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லும் தொழில் செய்து வந்துள்ளார். அந்தவகையில், சங்ககிரி ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் (26) மற்றும் ஈரோடு மாவட்டம், பவானி சேத்துனாம்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (22) ஆகிய இருவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நெருக்கமான நண்பர்களாக மாறியுள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சொந்த தாய்மாமா வீட்டிலேயே திருட திட்டம் தீட்டிய சங்கீதா, இதற்கு தனது நெருங்கிய நண்பர்களான கிருபாகரன் மற்றும் பிரவீன் குமார் ஆகிய இருவரை கூட்டாளிகளாகச் சேர்த்துள்ளார். திட்டமிட்டபடி, மாமா வீட்டுச் சாவியை எடுத்து தனது ஆண் நண்பர்களிடம் கொடுத்து, அவர்கள் நகைகளை திருடிவிட்டு திரும்பும் வரை, அத்தை செல்லம்மாளை வங்கி வேலை முடிந்த பிறகும் துணிக்கடைகளுக்கு அழைத்துச் சென்று சங்கீதா நேரத்தைக் கடத்தியுள்ளார். வெற்றிகரமாக கொள்ளையை முடித்து, சாவியை ஸ்கூட்டியில் வைத்த பிறகு தனக்கு எதுவும் தெரியாதது போல் அத்தையை வீட்டுக்கு வழியனுப்பி வைத்துள்ளார். இதன்பிறகு மூவரும் நகைகளை பங்கிட்டுக் கொண்டுள்ளனர். வெற்றிகரமாக கொள்ளையை முடித்த மகிழ்ச்சியில் அதைக் கொண்டாட சங்கீதா தனது நண்பர் பிரவீன் குமாருடன் ‘இன்பச் சுற்றுலா’ சென்றதும் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 22 பவுன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கமாக தாய்மாமன் மடியில் வைத்து சகோதரியின் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பார்கள். ஆனால், சங்கீதா தனது தாய்மாமனுக்கே மொட்டை அடித்துள்ளார்!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை… குப்பையில் வீசிய கொடூரம்!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரே தாய் சேய் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குப்பைத் தொட்டி அருகே கிடந்த ஒரு கட்டைப் பையைச் சுற்றி ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஊழியர்கள் அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதனுள்ளே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள் உடனே திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குப்பையில் வீசப்பட்டது ஆண் குழந்தை என்றும், பிறக்கும்போதே முட்டிக்குக் கீழே கால்கள் இல்லாமல் பிறந்ததால் குழந்தையைக் கொலை செய்து குழந்தையைப் பெற்றவர்களே குப்பையில் வீசிச் சென்றாரா? தாய் சேய் நல மருத்துவமனைக்கு அருகில் இந்தக் குழந்தை கிடந்ததால் அங்கு பிரசவமான குழந்தையா? அல்லது வேறு எங்கிருந்தாவது குழழந்தையைக் கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்றுள்ளனரா? என்ற கோணத்தில்  போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருப்பூர் தெற்கு போலீசார், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குழந்தையை வீசிச் சென்றது யார்? எனத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பச்சிளம் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட காதல் மனைவி… போதையில் அடித்துக் கொன்ற கணவன்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளையன் (எ) பாலசுப்பிரமணியம் (45). இவர் ஊட்டியைச் சேர்ந்த மலர் (40) என்பவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாகத் திருப்பூர் தட்டான்தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், திருப்பூர் பூ மார்க்கெட்டில் லோடுமேன் ஆகப் பணியாற்றி வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மலருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மனைவியை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டிய பாலசுப்பிரமணியம், தினமும் மது அருந்தியும், கஞ்சா போதையிலும் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், இனி உன்னுடன் வாழ முடியாது எனக் கூறி ஊட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மலர் சென்றுவிட்டார். இதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம், இனி குடியையும் போதையையும் தொடமாட்டேன் எனக் கெஞ்சி சமாதானம் பேசி மலரை மீண்டும் திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அதன் பிறகும் பாலசுப்பிரமணியத்தின் போதைப் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தவர், தீபாவளியை முன்னிட்டுப் பூ மார்க்கெட் வியாபாரிகளிடம் தீபாவளி வசூல் செய்துள்ளார். அந்தப் பணத்தில் மறுபடியும் குடிக்கத் தொடங்கியுள்ளார்.  இந்நிலையில், நவம்பர் 13-ஆம் தேதி காலையில் இருந்தே மதுபோதையில் இருந்த பாலசுப்பிரமணியம் மனைவி மலரிடம் தகராறில் ஈடுபட்டு, வீட்டிலிருந்த மலரின் பாட்டியிடமும் சண்டையிட்டு அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். கரூரிலுள்ள உறவினர் வீட்டில் இரண்டு குழந்தைகள் தங்கியிருந்த நிலையில், இளைய மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.  மாலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம் வீட்டிலிருந்த இரும்புக் கம்பியை எடுத்து மலரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த மலர், அந்த அடியைத் தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  மனைவி இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டை விட்டுத் தப்பியோடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். உயிரிழந்த மலரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமறை இருந்த பாலசுப்பிரமணியத்தை கைது செய்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலித்து கைப்பிடித்த மனைவியை மதுபோதையில் கணவனே அடித்துக் கொன்ற சம்பவம் திருப்பூர் தட்டான்தோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

12 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… போலீசில் சிக்கிய கொடூரன்!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அந்தச் சிறுமியின் வீடு ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ளது. நேற்றிரவு (நவ.12) சுமார் 9 மணியளவில் தோழி ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு, தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், திடீரென சிறுமியின் வாயைப் பொத்தி அருகிலிருந்த புதர்மண்டிய பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு சிறுமியின் கை, கால்களை துணியால் கட்டிப்போட்டு சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் நிலைதடுமாறி செய்வதறியாது திகைத்து நின்ற சிறுமி, சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டுக்குச் சென்று, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த அம்மிக்கல் தயாரித்து விற்பனை செய்துவரும் விஷ்ணு (26) என்பது தெரியவந்தது. அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவான விஷ்ணுவைப் பிடிக்க நல்லூர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, கவிதா, உதவி ஆய்வாளர் வேல்பாண்டி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அய்யம்பாளையம் காட்டுப்பகுதியில் விஷ்ணு பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரைப் பிடிக்க முயன்றபோது, தப்பியோட முயற்சி செய்த விஷ்ணு கீழே விழுந்ததில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டு போலீசாரிடம் சிக்கினார்.  இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கால் முறிவுக்கு சிகிச்சையளித்த பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

குடும்பத்தினருக்கு தெரியாமல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கர்ப்பிணி… பிரசவத்தின்போது நடந்த விபரீதம்!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (36). இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், பிரியங்கா (30) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், தம்பதிக்கு குழந்தை இல்லை.  இதையடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘கவின் கருத்தரித்தல் மருத்துவமனையில்’ சிகிச்சை பெற்று, செயற்கை கருத்தரித்தல் முறையில் பிரியங்கா கருவுற்றிருந்தார்.  இந்நிலையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி பிரியங்காவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே, குடும்பத்தினர் அவரை கவின் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கவின் மருத்துவமனை மருத்துவர் மாலினி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பிரியங்காவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல், அவசர அவசரமாய் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர் மாலினியே முன்னின்று பிரியங்காவிற்கு பிரசவம் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. சிசேரியன் முறையில் நடைபெற்ற இந்த பிரசவத்தின் போது பிரியாங்காவின் வயிற்றில் இருந்த இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை பரிதாபமாக இறந்து பிறந்துள்ளது.  இதற்கிடையே, தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பிரியங்காவின் குடும்பத்தினருக்கு, தாய் மற்றும் குழந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர், எங்களுக்குத் தெரியாமல் எதற்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தீர்கள்? மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் பிரசவத்தின் போது ஒரு குழந்தை இறந்துவிட்டது எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பிறகு உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். தற்போது பிரியங்காவும் மற்றொரு குழந்தையும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

எலுமிச்சை பழத்தால் நடந்த விபரீதம்… ஒர்க்‌ஷாப் உரிமையாளரை துரத்தி துரத்தி வெட்டிய இளநீர்க் கடைக்காரர்! 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் வினோத் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக டூவீலர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையின் அருகே திருநெல்வேலியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் இளநீர்க் கடை வைத்துள்ளார். வினோத் தனது கடையில் சாமி படத்திற்கு வைத்திருந்த எலுமிச்சை பழம் மற்றும் பூக்களை எடுத்து வெளியே வீசியபோது, அந்த எலுமிச்சை பழம் உருண்டு சென்று இளநீர்க் கடை முன்னால் விழுந்துள்ளது.  இதைப் பார்த்து ஆத்திரமடைந்த வெள்ளத்துரை, “என் கடைக்கு செய்வினை வெச்சு எலுமிச்சை பழத்தை போடுறீயா?” எனக் கேட்டு வினோத்திடம் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த வெள்ளத்துரை கடையில் இளநீர் வெட்ட வைத்திருந்த அரிவாளால் வினோத்தை துரத்தி துரத்தி வெட்டியுள்ளார்.  வினோத்தின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வெள்ளத்துரையிடம் இருந்து வினோத்தை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

3 திருமணங்களுக்குப் பிறகும் அடங்காத இன்ஸ்டா மோகம்… இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற 4-வது கணவர்!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சுவேதா (24). இவர் கடந்த வருடம் சென்னை பூந்தமல்லியில் உள்ள செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.  அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்துவந்த விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த அஜித்குமார் (28) என்பவருடன் சுவேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்டதாகவும், தனக்கு பெற்றோர், உறவினர்கள் என யாருமில்லை என சுவேதா கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அஜித்குமார், சுவேதா மீது கொண்ட காதலால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு அஜித்குமாரின் சொந்த ஊரான வத்திராயிருப்பில் 2 மாதங்கள் வசித்து வந்தனர். சரியான வேலை கிடைக்காததால் மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ளனர். சுவேதாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததோடு, எந்நேரமும் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஓட்டுப்போட சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, உறவினர்களை பார்த்து வருவதாகச் சொல்லியுள்ளார். ‘உனக்குத் தான் யாருமில்லையே! என கணவர் விசாரிக்க, சுவேதா மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதன்பிறகு சுவேதாவின் பின்னணி குறித்து அஜித்குமார் விசாரிக்க ஆரம்பித்ததும் அவருக்கு பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. சுவேதாவிற்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்திருப்பதும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சுவேதாவின் சொந்த ஊரான எரியோட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த உண்மைகள் தெரிந்து அஜித்குமார் சண்டை போட, சுவேதா சென்னைக்கு வராமல் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இப்படியான சூழலில் கடந்த மாதம் பழைய பிரச்னைகளை எல்லாம் மறந்துவிட்டு, புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் எனக்கூறி சுவேதாவின் பெற்றோர் வீட்டினருகே வீடு வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் இருந்து வந்தனர். ஆனாலும், இருவருக்கும் இடையே பிரச்சினை ஓயவில்லை. சுவேதா தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையே, தீபாவளியன்று சுவேதாவின் செல்போனை பார்த்துவிட்டு அஜித்குமார் சண்டை போட, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுவேதாவை சரமாரியாக வெட்டிவிட்டு, எரியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், எரியோடு இன்ஸ்பெக்டர் வினோதா உள்ளிட்ட போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுவேதாவின் உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் சுவேதாவின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால், பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சரிந்து விழுந்த ராட்சத கிரேன்… குடும்பத்தின் வறுமையைப் போக்க இஸ்ரேல் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் வீரமணி (31). இவருக்கு புவனேஸ்வரி (25) என்ற மனைவியும், தேஜாஸ்ரீ (4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். குடும்பச் சூழல் காரணமாக, வீரமணி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டிற்கு கட்டிட வேலைக்குச் சென்றுள்ளார். வீரமணி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான மூங்கில்பட்டிக்கு வந்து விட்டு மீண்டும் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார். இந்நிலையில், கடந்த அக்.27-ம் தேதி பணியில் இருந்தபோது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி வீரமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி வீரமணியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வீரமணியின் உடலை விரைவாகத் தமிழகத்திற்கு கொண்டுவரவும், குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘பாபநாசம்’ பட பாணியில் மனைவியை கொன்று புதைத்த கொடூரன்; 3 நாள் தேடலில் 30 அடி ஆழத்தில் சிக்கிய எலும்புகள்!

திண்டுக்கல் அருகே உள்ள இரண்டலப்பாறை  பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லாரன்ஸ் (36). இவருக்கும் கெளசல்யா (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 5 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியருக்கு இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த கௌசல்யா திடீரென மாயமானார். குட்டத்துபட்டியில் வசித்துவரும் பெற்றோரிடம் கெளசல்யா தினமும் போனில் பேசுவது வழக்கம். ஆனால், மகளிடம் இருந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் எந்த போனும் வராததால் சந்தேகமடைந்த கௌசல்யாவின் பெற்றோர், மருமகன் லாரன்ஸிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அவரிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை.  அதையடுத்து, ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என பதறிப்போன கெளசல்யாவின் பெற்றோர், தங்களுடைய மகளை கண்டுபிடித்து தருமாறு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார், லாரன்ஸைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரத்தில் அவரைக் கொன்றுவிட்டதாகவும், விஷயம் வெளியே தெரிந்தால் போலீசிடம் மாட்டிக் கொள்வோம் என பயந்து மனைவியின் உடலை மறைக்க திட்டமிட்டதாகவும், பாபநாசம் பட பாணியில் சிறுமலை அடிவாரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரிங் ரோடு பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மனைவியின் உடலைப் போட்டு மூடியதாகவும் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். இதையடுத்து, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வினோத் முன்னிலையில் லாரன்ஸ் அடையாளம் காட்டிய இடத்தில், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடலைக் கண்டுபிடிக்கும் பணி தொடங்கியது. அந்த இடத்தில் ரிங் ரோடு அமைப்பதற்காக பழைய கிணறுகள் மூடப்பட்டிருந்ததால் உடலைக் கண்டெடுப்பதில் பெரும் சிக்கல் நீடித்தது. 3 நாட்கள் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, கௌசல்யாவின் சேலை மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட எலும்புகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், லாரன்ஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாபநாசம் பட பாணியில் நடந்துள்ள இந்தச் சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top