மாவட்டம்

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ரூ.1 கோடி பணம்… ரூ.50 கோடி நில ஆவணங்கள்! ‘கட்டப் பஞ்சாயத்து’ பெயரில் மோசடி? – கொ.ம.தே.க பொருளாளர் கே.கே.சி.பாலு மீது பரபரப்பு புகார் 

பள்ளி நிர்வாகப் பிரச்சினையை பேசி தீர்த்து வைப்பதாகக் கூறி ரூ.1 கோடி பணத்தையும், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களின் அசல் பத்திரங்களையும் பெற்றுக்கொண்டு, அவற்றை திருப்பித் தராமல் மிரட்டுவதாக கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி அளித்துள்ள இந்தப் புகாரில், பள்ளி நிர்வாகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி பணம் மற்றும் நில ஆவணங்கள் பெற்றதாகவும், அரசியல் முக்கியப் புள்ளிகள் சிலர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் அதிரடி கிளப்பியிருக்கிறார் பள்ளி நிர்வாகத்தில் பிரச்சினை… ‘பஞ்சாயத்து’க்கு சென்ற விவகாரம்!  ஈஸ்வரமூர்த்தி அளித்துள்ள புகாரில், “ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூர் கிராமத்தில், ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளையின் கீழ், 2014-ம் ஆண்டு முதல் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியை நான் நடத்தி வருகிறேன். பள்ளியின் தாளாளராக இருந்த பிரவீன், பள்ளி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளைச் செய்தார். எனவே, அவரை பள்ளி நிர்வாகத்தில் இருந்து நீக்கிவிட்டோம். அதனையடுத்து, சென்னிமலை தி.மு.க., ஒன்றியச் செயலாளர் பிரபு மற்றும் சென்னிமலை தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் (எ) சுப்பிரமணி ஆகியோருடன் பிரவீன் சேர்ந்துகொண்டு, பள்ளி சொத்துகளை அபகரிக்க முயன்றார். இப்படியான சூழலில், இந்தப் பிரச்சினையைப் பேசி தீர்த்து வைப்பதாகக் கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளரான கே.கே.சி. பாலு, அ.தி.மு.க., முன்னாள் பெருந்துறை தொகுதி செயலாளர் திங்களூர் கந்தசாமி, கொ.ம.தே.க ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பவானியைச் சேர்ந்த கொங்கு ராஜா ஆகியோர் முன்வந்தனர். ‘முன்பணமாக ரூ.1 கோடி… அசல் பத்திரங்களையும் கொடுங்கள்!’ 2025 செப்டம்பர் 1-ம் தேதி பெருந்துறை பேருந்து நிலையம் அருகே உள்ள கே.கே.சி.பாலுவின் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வரச் சொன்னவர்கள், ‘பள்ளி நிர்வாகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு முன்பணமாக ரூ.1 கோடியும், பள்ளியின் பெயரில் உள்ள நிலங்களின் அசல் பத்திரங்களையும் வழங்க வேண்டும்’ எனக் கூறினர். இதனை நம்பி அறக்கட்டளை உறுப்பினர்கள் 15 பேரும் கடன் பெற்று, 2025 செப்டம்பர் 9-ம் தேதி ரூ.1 கோடி பணத்தையும், மூன்று நிலங்களின் அசல் பத்திரங்களையும் ஒப்படைத்தேன். ‘பள்ளியை விற்றுவிடு’… மிரட்டல் விடுத்தாரா கே.கே.சி.பாலு? பணம் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னரும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஒருகட்டத்தில், ‘பள்ளியை விற்றுவிட்டால் பிரச்னை முடிந்துவிடும்’ எனக்கூறிய கே.கே.சி.பாலு, ‘நான் சொல்லும் ரேட்டுக்கு, நான் சொல்லும் நபருக்கு பள்ளியை எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், என்னிடம் உள்ள ரூ.1 கோடி பணத்தையும், மூன்று அசல் ஆவணங்களையும் திருப்பித் தர முடியாது. ஆவணங்களை வைத்து நான் பள்ளியை விற்றுவிடுவேன்’ என மிரட்டினார். ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள்! ரூ.1 கோடி பணமும், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களின் மூன்று அசல் பத்திரங்களும் வழங்கப்பட்டு 11 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், இன்னும் அவற்றை திருப்பித் தராமல் நம்பிக்கை மோசடி செய்து, கட்டப்பஞ்சாயத்து செய்து, சொத்துகளை எழுதிக் கொடுக்க மிரட்டிவருகின்றனர். எனவே, கே.கே.சி. பாலு மற்றும் மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நான் கொடுத்த ரூ.1 கோடி பணத்தையும், மூன்று நிலங்களின் அசல் ஆவணங்களையும் மீட்டுத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். புகாரளித்த ஈஸ்வரமூர்த்தியிடம் பேசினோம். “தாளாளராக இருந்து பள்ளியில் பல்வேறு முறைகேடுகளைச் செய்த பிரவீன் வேறு யாருமல்ல, என்னுடைய இரண்டாவது மருமகன் தான். இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தே, கே.கே.சி.பாலுவிடம் பஞ்சாயத்துக்கு சென்றேன். ஆனால், என்னிடம் ஒருகோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை வாங்கிக்கொண்டு, திருப்பித் தராமல் மோசடி செய்து வருகின்றனர். கே.கே.சி.பாலுவை நல்லவர் என்று நினைத்திருந்தேன். அவர் இப்படியெல்லாம் செய்வார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எனக்கு மிரட்டல் விடுத்த வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. பள்ளி சொத்து முறைகேடு தொடர்பாக இதுவரை சுமார் 15 முறை புகார் கொடுத்திருப்பேன். ஆனால், எந்தவொரு நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இப்போதாவது என்னுடைய பணம் மற்றும் சொத்து ஆவணங்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். – தி வெஸ்ட் செய்திப் பிரிவு ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

மாவட்டம்

“கொட்டியதை அள்ளாம ஒரு வண்டியும் நகராது!” – சிறைபிடிக்கப்பட்ட 50 லாரிகள்; அரண்டுப்போன திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் நாள்தோறும் சுமார் 700 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை பல்வேறு பகுதிகளில் சாலையோரமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது சேகரிக்கப்படும் குப்பைகளை ஊத்துக்குளி அருகே உள்ள ஏ.பெரியபாளையம் பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் பாறைக்குழியில் கொட்டி வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பைகள் கொண்டு வரப்பட்டு பாறைக்குழியில் கொட்டியுள்ளனர். தங்கள் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொடிய தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆத்திரமடைந்த ஏ. பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஒன்றுகூடி குப்பைகளை ஏற்றி வந்த லாரிகளை அதிரடியாகச் சிறைபிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஏற்கனவே பாறைக்குழியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முழுமையாக அகற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. சில மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் பொதுமக்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். திருப்பூர் மாநகராட்சியின் இந்த செயல்பாட்டிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், பாறைக்குழியில் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படுமா, இனி அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மாவட்டம்

காரில் விழுந்த ‘அந்த ஒரு பொருள்’… நொடியில் லாக் ஆன பிரேக்! – திருப்பூரில் 3 வாகனங்கள் நொறுங்கி பகீர் விபத்து

திருப்பூர் மன்னரை பகுதியில் இருந்து செங்கப்பள்ளி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே கார் பயணித்துக் கொண்டிருந்தபோது, காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில் திடீரென ஓட்டுநரின் கால் பகுதியில் கீழே விழுந்து, பிரேக் பெடலுக்கு அடியில் லாவகமாகப் போய் மாட்டிக்கொண்டது. காரை நிறுத்த ஓட்டுநர் பிரேக்கை மிதித்தபோது, பாட்டில் அடைத்துக் கொண்டதால் பிரேக் பிடிக்க முடியவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகமாக மோதியது. அந்த வேகத்திலும் நிற்காமல் பாய்ந்து சென்று, எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீதும் பலமாக மோதி நின்றது. இந்தத் தொடர் விபத்தில், ஆட்டோ அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர், விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் மற்றொரு காரில் பயணம் செய்தவர்கள் என 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில் உயிர்ப்பலி எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் படுகாயமடைந்த மொத்தம் 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே எக்காரணம் கொண்டும் தண்ணீர் பாட்டில்கள், பொம்மைகள் போன்ற பொருட்களை வைக்காதீர்கள்! பிரேக் பெடலுக்கு அடியில் அது உருண்டு சென்றால் பிரேக் இயங்காமல் போகும். ஒரு சிறிய அலட்சியம், உயிரையே பறிக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என்பதற்கு இந்த விபத்தே சாட்சி!

மாவட்டம்

“யார்ரா இவன், ஒரு செகண்ட்ல தூக்கிட்டான்?!” – திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி திருடன்’! 

திருப்பூர் கோவில் வழி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (30), அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது மனைவியுடன் புத்தாடைகள் வாங்குவதற்காக திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மனைவியுடன் துணிக்கடைக்கு சென்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது, அவர் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அருணாசலம், உடனடியாக அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, இளைஞர் ஒருவர் அப்பகுதியில் நோட்டமிட்டு, அருணாசலத்தின் இருசக்கர வாகனத்தை கேஷூவலாக அங்கிருந்து எடுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து, பைக்கின் உரிமையாளர் அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வாகனத்தை திருடிச் சென்ற நபரை அடையாளம் கண்டு பிடிக்கவும், திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்கும் முயற்சியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.   பொது இடங்களில் வண்டியை நிறுத்திட்டுப் போறீங்களா? ‘கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே… இல்லன்னா உங்க வண்டிக்கும் இதே நிலைமைதான்! 

மாவட்டம்

‘நொய்யலை காப்போம்!’ – திருப்பூரில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

நொய்யல் ஆற்றை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, திருப்பூர் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். “இயற்கையின் இதயம் காப்போம்” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் உதயம் பவுண்டேஷன் சார்பில் ‘வனத்துக்குள் நொய்யல்’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் இருந்து நொய்யல் ஆற்றுப்படுகையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.5 கோடி செலவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியை சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என். சுகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் திருப்பூர் தொழில்துறையினர் என பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக பங்கேற்றனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நொய்யல் ஆற்றங்கரையோரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நொய்யல் ஆற்றை தூய்மையாகவும், பசுமையாகவும் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மாவட்டம்

ஈரோடு மாவட்டத்திற்கு 2 புதிய நீதிமன்றங்கள். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு!

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நேற்று, சட்டதுறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பதிலளித்து பேசிய மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஈரோடு மாவட்டதில், இரண்டு புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஈரோட்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989-இன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கான ஒரு சிறப்பு நீதிமன்றம் ரூ.1.93 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், பெருந்துறையில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், பெருந்துறையில், ரூ.2.29 கோடி செலவில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனை, பெருந்துறை வழக்கறிஞர் சங்கத்தினர், இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மாவட்டம்

TNPSC உறுப்பினர் பதவிக்கு ரூ.2 கோடி ‘டீல்’! – ஈரோடு கல்லூரி முதல்வர் சிக்கியது எப்படி?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி, அரசு கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி பெற்றதாக எழுந்த புகாரில், ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் சுரேஷ்குமாரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (48), தனியார் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் முதல்வராக பணியாற்றியவர். டிஎன்பிஎஸ்சி -யில் தனக்கு உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்புகள் இருப்பதாகவும், அதன் மூலம் உறுப்பினர் பதவி பெற்றுத் தர முடியும் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இதை அறிந்த நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையைச் சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியர் மாணிக்கவாசகன், தனது மனைவிக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி பெற்றுத் தர சுரேஷ்குமாரை அணுகியுள்ளார். இதற்காக ரூ.2 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பணத்தை பெற்ற பிறகும் பதவியை பெற்றுத் தராமல் சுரேஷ்குமார் காலம் கடத்தியதாகவும், இதையடுத்து மாணிக்கவாசகன் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஈரோட்டில் இருந்த சுரேஷ்குமாரை கைது செய்தனர். விசாரணையில், இதேபோன்று டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் சுரேஷ்குமார் பணம் பெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி, தர்மபுரியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.70 லட்சம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி, சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 லட்சம் என பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சுரேஷ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள அந்த நபரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

மாவட்டம்

திருப்பூரில் நடக்க இருக்கும் 10 கி.மீ. மராத்தான்… எதற்காக தெரியுமா?

திருப்பூர்: குப்பையும் புதர்களும் மண்டிக் கிடக்கும் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக, ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூரில் வரும் 22-ம் தேதி மராத்தான் போட்டி நடைபெற உள்ளது. கோவையில் தொடங்கி கரூரில் காவிரியுடன் கலக்கும் சுமார் 160 கி.மீ. நீளமுள்ள நொய்யல் ஆற்றை சீரமைக்கும் பணியை, திருப்பூர் தொழில்துறையினரால் தொடங்கப்பட்டுள்ள ‘உதயம்’ அமைப்பு மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் முதல் மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், புதர்களை நீக்குதல், தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நொய்யல் ஆற்றில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்; ஆற்றை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்பதை வலியுறுத்தி நொய்யல் ஆற்றுப்படுகை சாலையில் 10 கி.மீ. மராத்தான் மற்றும் 5 கி.மீ. வாக்காத்தான் நடைபெறுகிறது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ள நிலையில், முன்பதிவு செய்யாதவர்களும் போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று நொய்யல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ‘உதயம்’ அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர். நொய்யலின் 160 கி.மீ. முழுவதையும் தூய்மைப்படுத்துவதே இலக்கு; அரசின் அனுமதி பெற்று அடுத்தடுத்த பகுதிகளிலும் பணிகள் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டம்

பங்குச்சந்தையில் ‘மாஸ்’ காட்டிய ஈரோடு நிறுவனம்! – முதலீட்டாளர்களுக்கு இவ்வளவு லாபமா?

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ‘மில்கிமிஸ்ட்’, பங்குச்சந்தையில் காலடி எடுத்து வைத்த குறுகிய நேரத்திலேயே முதலீட்டாளர்களுக்கு அபார லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. சுமார் ரூ.1,553 கோடி நிதியைத் திரட்டும் நோக்கில் வெளியிடப்பட்ட இந்த ஐபிஓ, தொடக்கத்திலேயே முதலீட்டாளர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பொதுப் பங்கு விற்பனையின் போதே இத்துறைக்கான பங்குகள் 56 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு சாதனை படைத்தது. மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தையில் (NSE) மில்கிமிஸ்ட் பங்குகள், அதன் தொடக்க விற்பனை விலையான ரூ.140-ஐ விட 18% கூடுதலாக, அதாவது ரூ.165-க்கு பட்டியலிடப்பட்டு மாஸ் என்ட்ரி கொடுத்தன. வர்த்தகம் தொடங்கிய முதல் நாளிலேயே 10% உயர்ந்து ‘அப்பர் சர்க்கியூட்’ அடித்த இந்த பங்கு, அடுத்தடுத்த வர்த்தக நாட்களிலும் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு ரூ.211.80 வரை உயர்ந்தது. இதன் மூலம் ஐபிஓ ஆரம்ப விலையில் இருந்து முதலீட்டாளர்களுக்குக் குறுகிய காலத்தில் 51% வரையிலான லாபம் கிடைத்துள்ளது. பங்குகளின் இந்த அதிரடி விலையேற்றத்தைத் தொடர்ந்து, மில்கிமிஸ்ட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.15,000 கோடியைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தென்னிந்தியாவில் பன்னீர், சீஸ், தயிர் மற்றும் வெண்ணெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் சந்தையில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள இந்நிறுவனம், ஐபிஓ மூலம் திரட்டிய நிதியைக் கொண்டு தங்களது கடன் சுமையைக் கணிசமாகக் குறைக்கவும், ஈரோடு பெருந்துறையில் அமைந்துள்ள அதிநவீன உற்பத்தி ஆலையை மேலும் விரிவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

மாவட்டம்

ஈரோடு: வானில் சாகசம் செய்த ‘ட்ரோன்கள்’ – அசத்திய கல்லூரி மாணவர்கள்!  

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில், உயர்கல்வி மாணவர்களின் நவீன தொழில்நுட்பத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளுக்கு இடையேயான ‘ட்ரோன் மற்றும் ரோபோடிக்ஸ்’ போட்டி நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்போட்டியில் களமிறங்கினர். தாங்களே சொந்தமாக வடிவமைத்த நவீன ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ரோபோக்களைக் கொண்டுவந்து, அவற்றின் இயக்கம் மற்றும் பயன்பாடுகளைச் செய்து காட்டினர். வான்வெளியில் அமைக்கப்பட்ட கடினமான தடைகளை லாவகமாகக் கடந்து செல்வது, குறிப்பிட்ட எடைகளைத் தாங்கிக்கொண்டு இலக்கை அடைவது எனப் பல்வேறு சவாலான பிரிவுகளின் கீழ் சோதனைகள் நடத்தப்பட்டு, அதிவேகமாகவும் துல்லியமாகவும் செயல்பட்ட சிறந்த ட்ரோன்கள் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டன. நிறைவு விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், நிர்வாகி எம்.யுவராஜா, முதல்வர் டாக்டர் ஜெயராமன், சென்னை ‘கருடா ஏர் ஸ்பேஸ்’ அமைப்பின் அதிகாரி கே.பி.பொற்செல்வி, இசிஇ (ECE) துறைத் தலைவர் நிஷா அஞ்சலின் மற்றும் பேராசிரியர் அஸ்வத் ஆகியோர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.

Scroll to Top