Author name: admin

Uncategorized, தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“ஏன் ஸ்கூலுக்கு வரல..?” – கேள்வி கேட்ட தலைமையாசியரை தாக்கிய பள்ளி மாணவர்கள்

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கர்னல் (54). இந்தப் பள்ளியில் பிளஸ் டூ படித்துவரும் மாணவர்கள் 6 பேர், தினசரி வகுப்புகளுக்கு வராமல், நேரடியாக காலாண்டுத் தேர்வெழுத மட்டும் வந்துள்ளனர். இந்தத் தகவல் பள்ளியின் தலைமையாசிரியரான கர்னல் கவனத்துக்கு சென்றுள்ளது. அதையடுத்து அவர் அந்த மாணவர்களை அழைத்து, பள்ளிக்கு தொடர்ச்சியாக வராததற்கான காரணத்தைக் கேட்டு விசாரித்துள்ளார். மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்ல,  “ஸ்கூலுக்கு தொடர்ந்து வராமல், தேர்வெழுத அனுமதிக்க முடியாது” எனச் சொல்லி கண்டித்து அனுப்பியுள்ளார்.   சிறிது நேரத்தில் திபுதிபுவென தலைமையாசிரியர் அறைக்குள் புகுந்த அந்த பிளஸ் டூமாணவர்கள், தலைமையாசிரியரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அருகிலுள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் ஓடிவந்து பார்த்தபோது, மாணவர்கள் தாக்கியதில் தலைமையாசிரியர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. காயமடைந்த தலைமையாசிரியரை கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு பள்ளிக்குத் திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களை தனித்தனியாக அழைத்து  விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் அவர்கள், “தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியது மோசமான செயல். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“என் வழியை மறிப்பியா?” – 70 வயது முதியவர் மீது டிராக்டரை ஏற்றிச் சாய்த்த கொடூரன்! 

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள போத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி காளநாயக்கர் (வயது 70). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 50) என்பவருக்கும் இடையே தோட்டத்திற்குச் செல்லும் வண்டித்தடத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் ரங்கசாமி தனது டிராக்டரில் தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காளநாயக்கர், ரங்கசாமியின் டிராக்டரை வழிமறித்து நிறுத்தியுள்ளார். “வண்டித்தடப் பிரச்சனை முடியும் வரை, இந்தப் பாதையில் வரக்கூடாது!” என  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, ஆத்திரமடைந்த ரங்கசாமி, தான் ஓட்டி வந்த டிராக்டரை முதியவர் காளநாயக்கர் மீது ஏற்றியுள்ளார். டிராக்டர் சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர் துடிதுடித்து இறந்ததைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த ரங்கசாமி, டிராக்டரை எடுத்துச் சென்று தனது வீட்டின் முன் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி டி.எஸ்.பி சீதாலட்சுமி மற்றும் பவானி போலீசார் காளநாயக்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பவானி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ரங்கசாமியை தேடி வருகின்றனர். வண்டித்தடப் பிரச்சனையில் 70 வயது முதியவர் டிராக்டர் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பறந்து வந்து விழுந்த கார்; ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி – நாமக்கல்லில் சோகம் 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள மோளயாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் (வயது 35). இவர் கயிறு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். இவரின் மனைவி காவ்யாஸ்ரீ (வயது 34), பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கார்த்திக் குமாரின் தந்தை செல்வராஜ் (வயது 60), தாய் காந்திமதி (55) ஆகியோரும் இவர்களுடன் பெங்களூரூ ஈஜிபுரா பகுதியில் வசித்து வந்தனர். காவ்யாஸ்ரீ தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்நிலையில், கரூரில் உள்ள உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, கார்த்திக் குமார் மற்றும் அவரது பெற்றோர் நேற்று (செப்டம்பர் 15) இரவு பெங்களூருவில் இருந்து கரூருக்கு காரில் கிளம்பியுள்ளார். இன்று (செப்டம்பர் 16) அதிகாலை சுமார் 2 மணியளவில், நாமக்கல் நல்லிபாளையம் அருகே சேலம் – கரூர் பைபாஸில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் பெங்களூரூ நோக்கிச் சென்று கொண்டிருந்த தார் ஜீப் ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனைத் தாண்டி பறந்து வந்து, கார்த்திக் குமாரின் காரின் மீது விழுந்ததில், கார் சுக்குநூறாக நொறுங்கியதோடு, காரில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளையம் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் குமார், அவரது தந்தை செல்வராஜ், தாய் காந்திமதி ஆகிய மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிட்டனர். நல்லிபாளையம் போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய தார் ஜீப்பை ஓட்டியவர் பெங்களூரூவைச் சேர்ந்த கிருஷ்ணகவுடா (19) என்பதும், காரில் யதுநாதன் (19), சிவகுமார் (32), கௌதமி (30) என மொத்தம் 4 பேர் பயணித்ததும் தெரியவந்தது. தற்போது நால்வரும் பெங்களூரூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகவுடா ஜீப்பை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஒருவரின் கவனக்குறைவு ஒரு குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

வாழைத் தோப்பில் அலறல் சத்தம்… ஈரோட்டில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! 

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள செம்மாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (41). இவரது கணவர் அய்யாவு. இவர்களுக்கு மரியா என்ற மகளும், மனோஜ் என்ற மகனும் உள்ளனர். அய்யாவு கடந்த 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல், வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார். இதனால் செல்விதான் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். மகள் மரியாவிற்குத் திருமணமான நிலையில், 15 வயதான மகன் மனோஜ் குடும்ப சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். செல்வி கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். மனோஜ் தாயைப் பார்ப்பதற்காக அடிக்கடி அந்தத் தோட்டத்திற்கு வந்து செல்வார். நேற்று (15.09.2026) மாலை 4 மணியளவில் வழக்கம் போல தாய் செல்வியைப் பார்ப்பதற்கு மனோஜ் தோட்டத்திற்கு வந்துள்ளார். சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பியுள்ளார். வாழைத் தோப்பு வழியே வீட்டுக்குத் சென்ற நிலையில், காற்று மற்றும் மழையின் காரணமாக அறுந்துக்கிடந்த மின்கம்பியை மனோஜ் எதிர்பாராதவிதமாக மிதிக்க, நொடிப் பொழுதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.  சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த தாய் செல்வியும், தோட்டத்தில் இருந்தவர்களும் பதறியடித்துச் சென்று பார்க்க, மனோஜ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மனோஜை கோபி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“சாவியைத் தர முடியாது…” – பூட்டை உடைத்து அதிரடி காட்டிய ஆர்.டி.ஓ… ஈங்கூர் கோயிலில் உச்சக்கட்ட பரபரப்பு!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள ஈங்கூரில் மிகவும் பழமை வாய்ந்த தம்பிராட்டி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கொங்கு வேளாளர் சமூகத்தின் ‘ஈஞ்சன்’ குலத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குலதெய்வக் கோயிலாக இது விளங்கி வருகிறது. இக்கோயிலை அப்பகுதியைச் சேர்ந்த ஈஞ்சன் குலப் பெரியவர்கள் நிர்வகித்து வந்தனர். நாளடைவில் இரு கோஷ்டிகளாகப் பிரிந்தனர். இதனால் எழுந்த நிர்வாகச் சிக்கல்களால், கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்க வேண்டும் என சுப்பிரமணி என்பவரது தலைமையிலான தரப்பு கோரிக்கை வைக்க, கோயில் நிர்வாகத்தினை அறநிலையத்துறை எடுத்து கொள்ள முடிவு செய்தது. இதற்கு சாந்தமூர்த்தி என்பவரது தலைமையிலான தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கோயிலைத் தொடர்ந்து நிர்வகித்து வந்தனர். இந்த நிர்வாகப் போட்டியின் தொடர்ச்சியாக, கோயிலின் பொறுப்புக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சாந்தமூர்த்தி தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாந்தமூர்த்தி தரப்பினரின் நிர்வாகம் செல்லத்தக்கது அல்ல என்றும், கோயிலை முன்பு நிர்வகித்து வந்த சுப்பிரமணி தலைமையிலான ‘தம்பிராட்டி அம்மன் அறக்கட்டளை’ கோயிலின் நிர்வாகப் பொறுப்புகளை தொடர்ந்து நடத்தலாம் எனவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை தக்கார் தனலட்சுமி தலைமையில் சுப்பிரமணி தரப்பினர் இன்று (15.09.2026) கோயிலுக்கு வந்தனர். ஆனால், சாந்தமூர்த்தி தரப்பினர் கோயிலின் சாவிகளைக் கொடுக்க மறுத்து, பூட்டி வைத்துப் பிரச்சனை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தரப்பினர் திரண்டு வந்து ஈங்கூர் ரவுண்டானா அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெருந்துறை – சென்னிமலை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்து வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து கோயில் வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, சாந்தமூர்த்தி தரப்பினர் நிர்வாகத்தை ஒப்படைக்க 3 நாட்கள் கால அவகாசம் வேண்டுமென கேட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்திலேயே ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி, பெருந்துறை வட்டாட்சியர் செல்வகுமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார் மற்றும் ஈரோடு டி.எஸ்.பி. முத்துக்குமார் ஆகியோர் இருதரப்பிடமும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உள்ளூர் தரப்பினர் சாவியை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து சலசலப்பில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறிச் சென்றதால், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமியின் அதிரடி உத்தரவின் பேரில் கோயில் அலுவலகப் பூட்டு உடைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சுப்பிரமணியம் தரப்பிடம் நிர்வாகப் பொறுப்புகள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. சாலை மறியல், போக்குவரத்து ஸ்தம்பிப்பு மற்றும் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் ஈங்கூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“தள்ளிப்போன்னு சொன்னா கேக்க மாட்டியா…” – சமையல் தொழிலாளியைக் கொன்ற 17 வயது சிறுவன்!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள கே.என்.பாளையம், செங்கோட்டை நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42), சமையல் தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சமையல் வேலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டுப் போன செந்தில்குமார், 3 நாட்களாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.   இந்த நிலையில், செங்கோட்டை நகருக்கு அருகேயுள்ள குமரன் நகர் பகுதியில் வாக்கிங் சென்ற சிலர், அங்குள்ள சாக்கடையில் ஆண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து, சத்தியமங்கலம் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது மாயமான சமையல் தொழிலாளி செந்தில்குமார் என்பது தெரிந்தது. சம்பவம் நடந்த இடம் ஒதுக்குப்புறமான பகுதி என்பதால், இரவு நேரங்களில் குடிமகன்கள் அங்கு மது அருந்துவது வழக்கம். மேலும், அவரின் உடல் அருகே உடைந்த நிலையில் பீர்பாட்டில் கிடந்ததால், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணையில் இறங்கினர். அதன் அடிப்படையில் அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில், சிறுவனும் சம்பவத்தன்று அதே பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளான். பைக்கில் வீட்டுக்கு கிளம்பச் சென்ற சிறுவன், அருகில் மது அருந்திக்கொண்டு இருந்த செந்தில்குமாரிடம், “கொஞ்சம் தள்ளிப்போய் குடி, நான் பைக்கை எடுக்கணும்” என ஒருமையில் பேசியுள்ளான். இதனால் கோபமடைந்த செந்தில்குமார் அந்தச் சிறுவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி, ஆவேசமடைந்த அந்தச் சிறுவன் அருகிலிருந்த பீர்பாட்டிலை எடுத்து செந்தில்குமாரின் தலையில் ஓங்கி அடித்துள்ளான். அதில் அவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பை தொடராமல், சிறுசிறு கூலி வேலைகளைச் செய்துவந்த சிறுவன், மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது சத்தியமங்கலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சொந்தப் பேரனை சீரழித்த பாட்டி! – ஈரோட்டை அதிரவைத்த பாலியல் சம்பவம்

பாசத்திற்குப் பெயர்போன பாட்டியின் அரவணைப்பில் பேரக்குழந்தைகள் பாதுகாப்புடன் வளர்வதுதான் வழக்கம். ஆனால், ஈரோட்டில் சொந்தப் பேரனையே பாலியல் சித்ரவதை செய்துவந்த பாட்டியின் கொடூர முகம் அம்பலமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு லக்காபுரம் பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண்மணி அவர். திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவரால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வருகிறார். இவரது 31 வயது மகள் பியூட்டி பார்லரிலும், மருமகன் சமையல் மாஸ்டராகவும் உள்ளனர். இவர்களது 12 வயது மகன் ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான். பெற்றோர் இருவருமே வேலைக்குச் சென்று விடுவதால், சிறுவன் வீட்டில் தனியாக இருக்கக் கூடாது என, பள்ளி விடுமுறை நாட்களில் பேரனைப் பாட்டியின் வீட்டில் கொண்டு போய் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  பள்ளிக்குத் தொடர் விடுமுறை விடப்பட்டதால், 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போலச் சிறுவனைப் பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெற்றோர் முயன்றுள்ளனர். ஆனால், பாட்டி வீட்டிற்குச் செல்ல மறுத்து அழுது அடம் பிடித்துள்ளான். சந்தேகமடைந்த பெற்றோர் அவனிடம் கனிவாக என்ன நடந்தது என விசாரித்துள்ளனர்.  அப்போதுதான் அந்தச் சிறுவன் கூறிய உண்மை பெற்றோரின் தலையில் இடியாய் இறங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் பாட்டி வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம், அந்த 46 வயது பாட்டி தனக்குப் பாலியல் ரீதியாகத் தொடர் தொல்லைகளும் சித்ரவதைகளும் கொடுத்து வந்ததாகச் சிறுவன் அழுதுகொண்டே கூறியுள்ளான். இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். தன் மகனுக்கு நேர்ந்த கொடுமை குறித்துச் சிறுவனின் பெற்றோர் உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து போலீசார் 46 வயது பாட்டி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சொந்தப் பேரனுக்கே பாட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“ஐயோ போச்சே..!” – மகளின் 12 பவுன் திருமண நகையை பஸ்ஸில் பறிகொடுத்த தாய்

ஈரோடு மாவட்டம், பவானி காவிரி வீதியைச் சேர்ந்தவர் அமுதவள்ளி (வயது 48). இவரது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. மகளுக்காக சிறுகச் சிறுகச் சேர்த்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் 60 கிராம் வெள்ளிப் பொருட்களை, ஈரோடு நாட்ராயன் கோவில் வீதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் அமுதவள்ளி பாதுகாப்பாகக் கொடுத்து வைத்திருந்துள்ளார்.  திருமணத் தேதி நெருங்கியதால், ஈரோடு உறவினர் வீட்டிற்குச் சென்றவர், அவர்களிடம் கொடுத்து வைத்திருந்த தங்க நகைகளை வாங்கி, ஒரு பையில் பத்திரமாக எடுத்துக்கொண்டு பவானிக்குத் திரும்பினார். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பவானி செல்ல அரசு டவுன் பஸ்ஸில் ஏறிய அமுதவள்ளி, கூட்டம் அதிகமாக இருந்ததாலும், நகைப் பை கைநழுவி கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்திலும், தனக்கு அருகில் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம், “கொஞ்சம் இந்த பையை பிடிச்சுக்கோங்க அக்கா” எனக் கூறி நகைப் பையைக் கொடுத்துள்ளார். பஸ் ஈரோடு கோணவாய்க்கால் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, சீட்டில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி நகைப் பையோடு சத்தமில்லாமல் பேருந்திலிருந்து கீழே இறங்கிச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்த அமுதவள்ளி, தன் கைப்பையை வைத்திருந்த பெண் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, “ஐய்யோ… என் மகளோட கல்யாண நகை போச்சே!” எனக் கத்திக்கதறி கூச்சல் போட்டுள்ளார். உடனே, கண்டக்டர் பஸ்ஸை ஓரங்கட்டி நிறுத்தி, பஸ்ஸில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தியுள்ளார். ஆனால், நகை வைத்திருந்த பெண் ஏற்கனவே இறங்கிச் சென்றுவிட்டதால் நகை கிடைக்கவில்லை. இதையடுத்து, இழந்த தன்னுடைய நகையை மீட்டுத்தரச் சொல்லி, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அமுதவள்ளி கண்ணீருடன் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகையோடு தப்பிச் சென்ற பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“என் ஆளுகிட்ட பேசுவியா..!” – இளைஞரை கத்தியால் வெட்டிய காதலன் 

ஈரோடு புதுமை காலனி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஆறுச்சாமி (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவரும் அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் தெரிய வந்ததும் ஆறுச்சாமி கடும் ஆத்திரமடைந்தார். ஆறுச்சாமி, தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு கார்த்திக்கிடம் சென்று “என் காதலிகிட்ட இனிமேல் நீ போன்ல பேசுனா நடக்கிறதே வேற, ஜாக்கிரதையா இருந்துக்கோ!” என மிரட்டியுள்ளார். ஆனால், கார்த்திக்கோ, “நான் அப்படித்தான் பேசுவேன். என்ன பண்ணுவ?” என பதிலுக்கு எகிற, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, ஆறுச்சாமி தான் மறைத்து வைத்திருந்த ஆடு வெட்டும் கத்தியை எடுத்து கார்த்திக்கின் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார். இதில் கார்த்திக்கின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கார்த்திக் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுச்சாமி மற்றும் அவரது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

காருக்குள் ‘ரொமான்ஸ்’; சிக்கிய காதல் ஜோடி! – காங்கேயம் கோயிலில் பரபரப்பு 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. நேற்று (12.09.2026) மதியம் 12 மணியளவில் கோயிலின் மேல் பகுதிக்கு வந்த ஒரு ஃபோர்டு கார், ஒதுக்குப்புறமான இடத்தில் நின்றது. 2 மணி நேரத்திற்கு மேலாகியும் காரிலிருந்து யாரும் கீழே இறங்கவில்லை. அதேசமயம், காரின் இன்ஜின் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த கோயில் ஊழியர்கள், காரின் அருகே சென்று பார்த்தபோது உள்ளே இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் பேசிக்கொண்டு (!) இருந்துள்ளனர்.  கோயில் ஊழியர்களைப் பார்த்தவுடன், காரில் இருந்த இளைஞர், காரை திடீரென்று வேகமாக இயக்கி ஊழியர்கள் மீது மோதுவது போல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோயில் ஊழியர்கள் அடிவாரத்தில் இருந்த ஊழியர்களுக்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.   மலை மீதிருந்து அடிவாரத்தை நோக்கி வேகமாக காரை ஓட்டிச்சென்ற இளைஞர் பதற்றத்தில், அடிவார நுழைவு வாயில் அருகே சென்றபோது, அங்கிருந்த தடுப்பில் மோதியுள்ளார். அதையடுத்து அடிவாரத்தில் இருந்த கோவில் பணியாளர்கள் காரைச் சுற்றிவளைத்து, காரில் இருந்த இளம் ஜோடியிடம் விசாரித்தினர். அதில், காரில் இருந்த இளைஞர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், கேரள மாநிலம் திருச்சூரில் வேலை செய்து வருவதும், அவருடன் இருந்த இளம்பெண் காங்கேயத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. இருவரும் சமூக வலைத்தளம் மூலமாக பழகி, காதலர்களாக மாறியதும், காதலியைச் சந்திக்க அவர் கேரளாவில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இனிமேல் கோவில் வளாகத்தில் இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Scroll to Top