“கசப்பான அனுபவங்கள்… இனி பயணிக்க மனமில்லை!” – திமுகவுக்கு ‘குட்பை’ சொன்ன தோப்பு

திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளது, ஈரோடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கடந்த 2021-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து அவருக்கு திமுகவின் ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய தோப்பு வெங்கடாசலம், அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரிடம் தோல்வியடைந்தார். தேர்தலின்போது ஏற்பட்ட அதிருப்தி மற்றும் உள்கட்சி பிரச்னைகள் தொடர்பாக தனக்குள்ள ஆதங்கத்தை பொது வெளியில் பேசி வந்தார். 

இப்படியான நிலையில் தான், சமீபத்தில் தோப்பு வெங்கடாசலம் வகித்துவந்த ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பை, திமுக தலைமை பறித்தது. பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்துடனும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டது.

திமுக தலைமையின் இந்த அதிரடியால் கடும் மன வருத்தத்தில் இருந்துவந்த தோப்பு வெங்கடாசலம், தற்போது திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த தோப்பு வெங்கடாசலம், “திமுகவிலிருந்து விலகுவது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் அளித்துள்ளேன். எனக்கு மாவட்ட கழக பொறுப்பும், பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கியதற்கு நன்றி. மாவட்ட கழக செயலாளராக செயல்பட்ட காலத்திலும், சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட “கசப்பான அனுபவங்கள்” என்னை பெரிதும் பாதித்துள்ளது

இதனால், இனிமேலும் திமுகவில் பயணிக்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே, திமுகவிலிருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசியவர்,

“முத்துசாமி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை!”

“முத்துசாமி எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து பயணிக்கும் மூத்த அரசியல்வாதி. அதிமுகவில் நான் உறுப்பினராக சேர்ந்த ஆரம்பகால கட்டத்தில் எனக்கு கை கொடுத்தவர். அவர்மீது எனக்கு என்றைக்கும் அளவுக்கதிகமான பற்றும் பாசமும் இருக்கிறது. நேரடியாக அவர் என்மீது எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியோ, நெருக்கடியோ கொடுத்ததாகத் தெரியவில்லை. எனவே, அவர்மீது நான் எந்தக் குற்றச்சாட்டையும் கூற விரும்பவில்லை.

எனக்கு முன்னாள், எனக்குப் பின்னால் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெருந்துறை தொகுதியினுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கினை அளித்திருக்கிறேன். அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு, இந்தப் பதவியை வைத்து இந்த மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்கிற சிந்தனையோடு வாழ்பவன் நான்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பெருந்துறை தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக மாறிவிட்டதை பார்க்கும்போது எனது மனம் வேதனைப்படுகிறது. தற்போதைக்கு வேறு எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை” என்றார்.

அடுத்த ‘மூவ்’ என்ன?

அதிமுகவில் அமைச்சராக இருந்தவர்… பின்னர் சுயேச்சையாக போட்டியிட்டவர், அதன்பின் திமுகவில் இணைந்தவர்… தற்போது திமுகவிலிருந்தும் வெளியேறியிருப்பது, கொங்கு மண்டல அரசியலில் தோப்பு வெங்கடாசலத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்த விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

பிற செய்திகள்

Scroll to Top