சிறுமிகளை சீரழித்த கொடூரன்! 81 வயது ‘கிரானைட் அதிபரின்’ வெறியாட்டம் – போலீஸ் மறைக்கப் பார்த்தது ஏன்?

தொழில்துறை வட்டாரங்களில் பெரும் செல்வாக்கு பெற்ற நபராக வலம் வந்த ‘ஜெம் கிரானைட்ஸ்’ குழுமத் தலைவர் வீரமணி (வயது 81), சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த தம்பதியரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு ரகசிய பென்-டிரைவில் தொடங்கிய வன்கொடுமை வழக்கு விசாரணையை, ‘போதிய ஆதாரமில்லை’ என காவல்துறை முடிக்க நினைத்தது. பின்னர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் தள்ளியது என இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

திடுக்கிடும் திருப்பம் தந்த ‘பென்-டிரைவ்’!

2025-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, சென்னை மத்திய குற்றப்பிரிவின் மனித கடத்தல் தடுப்புப் பிரிவு (Anti-Vice Squad / ITPU) அலுவலகத்தை அணுகிய ஒரு சமூக ஆர்வலர், முகம் தெரியாத ஒரு நபர் தனது அலுவலகத்திற்கு வந்து ஒரு பென்- டிரைவை கொடுத்து, இதை காவல்துறையில் சேர்த்துவிடுங்கள் என வேண்டி கேட்டுக் கொண்டார் என ஒரு ‘பென்-டிரைவை’ காவல் துறையிடம் ஒப்படைத்தார். அந்த பென்-டிரைவை ஆய்வு செய்த அதிகாரிகள் திடுக்கிட்டனர். ஒரு சொகுசு அறையின் படுக்கையறையில், முதியவர் ஒருவர் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் கொடூரமான காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

தேனாம்பேட்டை ‘ரகசிய சொகுசு இல்லம்’

வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அக்டோபர் 7-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. வீடியோவில் இடம்பெற்ற முதியவர் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி என்பதும், அந்தச் சம்பவம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரின் வாடகை வீட்டில் நடந்ததும் தெரியவந்தது.

அந்த தேனாம்பேட்டை வீட்டை மகேந்திர சிம்மன் (63) மற்றும் அவரது மனைவி சாந்தி (60) ஆகியோர் நிர்வகித்து வந்தனர். இந்த தம்பதியரின் உதவியுடன், சிறுமிகள் மற்றும் பெண்கள் அந்த வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

‘வழக்கை முடித்துக்கொள்ளலாம்!’

வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், “இந்தச் சம்பவம் 2019-இல் நடந்திருக்கலாம்; வீடியோவில் இருக்கும் நபர் வீரமணி அல்ல என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மறுக்கின்றனர்; சிறுமியைப் பற்றிய விபரம் கிடைக்கவில்லை” எனக் கூறியதோடு, போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை முடித்துக் கொள்ள அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ‘Closure Report’ தாக்கல் செய்தனர். 

சாட்டையைச் சுழற்றிய போக்சோ நீதிமன்றம்!

காவல் துறையின் அந்த அறிக்கையைக் கண்டு கொதித்தெழுந்த சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றம், “வழக்கை முடித்து வைக்க முடியாது!” எனக் கூறி, காவல் துறையின் அறிக்கையை அதிரடியாக நிராகரித்தது. அத்துடன் விடாமல், “இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரித்து, 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு கெடு விதித்து உத்தரவிட்டது. 

நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, மீண்டும் வழக்கை கையில் எடுத்த காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியது. தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் வீடியோவில் இருப்பது வீரமணி தான் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மேலும் பல சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் தடயங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த மகேந்திர சிம்மன் மற்றும் சாந்தி ஆகிய மூவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

11 மாத தாமதம் ஏன்?

2025 அக்டோபரில் புகார் வந்தும், 2026 ஆகஸ்ட் வரை 11 மாதங்களாக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்? வீடியோவில் இருக்கும் நபரை அடையாளம் காண முடியாத காரணத்தினால், வழக்கை முடித்து வைக்கச் சொல்லி போலீஸ் கோர்ட்டில் சொல்லியிருந்தால் அதிலொரு நியாயம் இருக்கிறது. ஆனால், அந்த வீடியோவில் இருக்கும் நபர் யாரென்று தெரிந்த பின்னரும், அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கை முடித்துவைக்கச் சொல்லி போலீஸ் கோர்ட்டை அணுகிய மர்மமென்ன? இங்குதான், வீரமணியின் பணபலமும், செல்வாக்கும் விளையாடியிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. 

இந்த வன்கொடுமை விவகாரத்தில் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் எப்படி வரவழைப்பட்டார்கள்? கடத்தி வரப்பட்டார்களா? அல்லது பெற்றோர்களுக்கு ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டவர்களா? என்பதையெல்லாம் தீர விசாரித்து உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

பிற செய்திகள்

Scroll to Top