November 19, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சினிமா பாணியில் ஸ்கெட்ச்… தாய்மாமன் வீட்டில் 23 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த ‘மருமகள்’

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள தேவண்ணகவுண்டனூர் சத்யா நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (47). சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், தனஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கடந்த நவம்பர் 12-ஆம் தேதி பழனிவேல் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி செல்லம்மாள் சுய உதவிக் குழு கடன் தொடர்பாக சங்ககிரி ஸ்டேட் பேங்குக்கு சென்றிருந்தார். வேலைகளை முடித்துக்கொண்டு மாலை 4 மணியளவில் அவர் வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த மகளின் தங்கத் தோடு வீட்டின் கதவினருகே கிடந்துள்ளதைக் கண்டு சந்தேமடைந்த அவர், படுக்கை அறையிலிருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த சுமார் 23 பவுன் தங்க நகைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து, பழனிவேல் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். மேலும், அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தனிப்படைகள் அமைத்து விசாரணையில் இறங்கினர். வீட்டின் வெளிப்புறப் பூட்டும், பீரோவும் உடைக்கப்படாமல் நகைகள் கொள்ளை போனதால், சாவி வைக்கப்படும் இடம் தெரிந்த நெருக்கமானவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்க முடியும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். சம்பவத்தன்று தான் வங்கிக்குச் சென்றபோது பழனிவேலின் அக்கா மகளான சங்கீதா தன்னுடன் நீண்ட நேரம் இருந்ததாக செல்லம்மாள் தெரிவித்துள்ளார். இதையடுத்து சங்கீதாவை சந்தேக வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்தனர். அதையடுத்து செல்லம்மாளும் சங்கீதாவும் சென்றுவந்த இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்லம்மாளின் ஸ்கூட்டியில் இருந்த வீட்டுச் சாவியை சங்கீதா எடுத்து, இரண்டு இளைஞர்களிடம் கொடுத்ததும், மற்றொரு சிசிவிடி காட்சியில் அந்த சாவியை அவர்கள் சங்கீதாவிடம் திரும்பக் கொடுப்பதும், அதை அவர் செல்லாம்மாளின் ஸ்கூட்டியில் வைப்பதும்  பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து சங்கீதாவின் செல்போன் அழைப்பு விபரங்களை ஆராய்ந்தபோது, சம்பவ நடந்த அன்று சங்கீதா இரு இளைஞர்களின் எண்களுக்கு தொடர்ச்சியாக பலமுறை பேசியது தெரிந்தது. சங்கீதா மற்றும் இரு இளைஞர்களையும் பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த சங்கீதா (30), சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லும் தொழில் செய்து வந்துள்ளார். அந்தவகையில், சங்ககிரி ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் (26) மற்றும் ஈரோடு மாவட்டம், பவானி சேத்துனாம்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (22) ஆகிய இருவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நெருக்கமான நண்பர்களாக மாறியுள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சொந்த தாய்மாமா வீட்டிலேயே திருட திட்டம் தீட்டிய சங்கீதா, இதற்கு தனது நெருங்கிய நண்பர்களான கிருபாகரன் மற்றும் பிரவீன் குமார் ஆகிய இருவரை கூட்டாளிகளாகச் சேர்த்துள்ளார். திட்டமிட்டபடி, மாமா வீட்டுச் சாவியை எடுத்து தனது ஆண் நண்பர்களிடம் கொடுத்து, அவர்கள் நகைகளை திருடிவிட்டு திரும்பும் வரை, அத்தை செல்லம்மாளை வங்கி வேலை முடிந்த பிறகும் துணிக்கடைகளுக்கு அழைத்துச் சென்று சங்கீதா நேரத்தைக் கடத்தியுள்ளார். வெற்றிகரமாக கொள்ளையை முடித்து, சாவியை ஸ்கூட்டியில் வைத்த பிறகு தனக்கு எதுவும் தெரியாதது போல் அத்தையை வீட்டுக்கு வழியனுப்பி வைத்துள்ளார். இதன்பிறகு மூவரும் நகைகளை பங்கிட்டுக் கொண்டுள்ளனர். வெற்றிகரமாக கொள்ளையை முடித்த மகிழ்ச்சியில் அதைக் கொண்டாட சங்கீதா தனது நண்பர் பிரவீன் குமாருடன் ‘இன்பச் சுற்றுலா’ சென்றதும் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 22 பவுன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கமாக தாய்மாமன் மடியில் வைத்து சகோதரியின் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பார்கள். ஆனால், சங்கீதா தனது தாய்மாமனுக்கே மொட்டை அடித்துள்ளார்!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை… குப்பையில் வீசிய கொடூரம்!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரே தாய் சேய் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குப்பைத் தொட்டி அருகே கிடந்த ஒரு கட்டைப் பையைச் சுற்றி ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஊழியர்கள் அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதனுள்ளே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள் உடனே திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குப்பையில் வீசப்பட்டது ஆண் குழந்தை என்றும், பிறக்கும்போதே முட்டிக்குக் கீழே கால்கள் இல்லாமல் பிறந்ததால் குழந்தையைக் கொலை செய்து குழந்தையைப் பெற்றவர்களே குப்பையில் வீசிச் சென்றாரா? தாய் சேய் நல மருத்துவமனைக்கு அருகில் இந்தக் குழந்தை கிடந்ததால் அங்கு பிரசவமான குழந்தையா? அல்லது வேறு எங்கிருந்தாவது குழழந்தையைக் கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்றுள்ளனரா? என்ற கோணத்தில்  போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருப்பூர் தெற்கு போலீசார், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குழந்தையை வீசிச் சென்றது யார்? எனத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பச்சிளம் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top