தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘கருப்புசாமி கனவில் வந்து கருணாநிதி சிலையை உடைக்கச் சொன்னார்’… சிலையை உடைத்தவரின் ‘குபீர்’ வாக்குமூலம்!

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கலைஞர் சிலை, மொடக்குறிச்சியில் உள்ள கலைஞர் சிலை மற்றும் அதன் கீழே உள்ள ‘அன்பகம் உதயம்’ இளைஞரணி அலுவலகம், ஈரோடு முனிசிபல் காலனி கலைஞர் சிலை கீழேயுள்ள நூலகக் கட்டிடம் மற்றும் மணல்மேட்டில் உள்ள திமுக அலுவலகம் ஆகியவை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இன்று (நவ.24) அதிகாலை பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் இந்தச் செயலில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகளுடன் திமுகவினர் காவல்துறையில் புகார் அளித்தனர். மேலும், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா மற்றும் மொடக்குறிச்சியில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார், ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் அருகேயுள்ள தொட்டிபாளையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஹரி விக்னேஷ் (26) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், நேற்றிரவு (நவ.23) மது போதையில் தனது வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததோடு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளையும் அவர் சேதப்படுத்தியதும், அவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஹரி விக்னேஷின் பின்னணி குறித்து நாம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இருமுறை சாலை விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டதால், ஹரி விக்னேஷ் கடந்த சில மாதங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.  இந்நிலையில், வீட்டினருகே உள்ள ஒரு தனியார் ரீவைண்டிங் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த மறுநாளே, சக ஊழியர்களுக்கு சிறிய கிப்ட் பாக்ஸ்களை ஹரி விக்னேஷ் கொடுத்துள்ளார். அதை பிரித்துப் பார்த்தபோது அதனுள் ‘சூடம்’ இருந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற விசித்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், நிறுவனத்தினர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இதனால், கடந்த 4 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இப்படியான சூழலில் தான் கலைஞர் சிலையையும், திமுக அலுவலகத்தையும் உடைத்து போலீசில் சிக்கியுள்ளார். அதன்பிறகு தான் ஹரி விக்னேஷ் நம்மிடம் சிக்கவில்லை, அவரிடம் தான் நாம் வசமாகச் சிக்கியுள்ளோம் என போலீசாரே நொந்துபோகும் அளவுக்கு சம்பவங்கள் நடந்துள்ளன. கலைஞர் சிலையை எதற்காக உடைத்தாய் என்று போலீசார் கேட்க, ‘கருப்புசாமி தான் கனவில் வந்து கருணாநிதி சிலையை உடைக்கச் சொன்னார்’ எனச் சொன்னதோடு,  போலீசார் கேட்ட பல கேள்விகளுக்கும் அவர் சொன்ன கோக்குமாக்கான பதில்களைக் கேட்டு போலீசாரே ஆடிப்போயுள்ளனர். இதையடுத்து ஹரி விக்னேஷை மருத்துவமனையில் அனுமதித்து, அவரது மனநிலை குறித்து பரிசோதித்து வருகின்றனர்.