November 20, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

100 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்… திருமண விருந்துக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி மதீனா நகரைச் சேர்ந்தவர் பூ வியாபாரி முஜிபூர் ரஹ்மான். இவரது மகளுக்கும், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று (நவம்பர் 19) மணமகன் ஊரான கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் ‘மறுவீட்டு விருந்து’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த விருந்தில் பங்கேற்பதற்காகப் பழனி மற்றும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மானின் உறவினர்கள் 24 பேர் ஒரு டூரிஸ்ட் வேனில் கொடைக்கானலுக்குச் சென்றனர். பழனியைச் சேர்ந்த சிலம்பரசன் (40) வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.  விருந்தை முடித்துக்கொண்டு, நேற்றிரவு அனைவரும் கொடைக்கானலில் இருந்து பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், எதிரே வரும் பாதை சரியாகத் தெரியாமல் சவரிக்காடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த சுமார் 100 அடி பள்ளத்திற்குள் பாய்ந்தது. விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டதும், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பழனி மற்றும் கொடைக்கானல் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி 100 அடி பள்ளத்திற்குள் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரம் என்பதாலும், கடும் குளிர் மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததாலும் பெரும் போராட்டத்திற்குப் பிறகே விபத்தில் சிக்கியவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். இந்தக் கோர விபத்தில், மணமகளின் தாத்தா நிஜாமுதீன் (75), பெரியப்பா அப்பாஸ் (61) மற்றும் சித்தப்பா மகன் ஷேக்பரித் (25) ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணித்த 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 3 பேரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

திருப்பூர் அரசுப் பள்ளியில் வெடித்த மத விவகாரம்… களமிறங்கிய இந்து முன்னணி

திருப்பூர் குமார் நகர் பகுதியில் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி, மத அடையாளங்கள் தேவையற்ற பிரிவினைகளையும் மோதல்களையும் ஏற்படுத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளன. இதனைத் தடுக்கும் விதமாக, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் கைகளில் கட்டப்பட்டிருந்த பல்வேறு வண்ணக் கயிறுகளை, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று அகற்றிய பிறகே மாணவர்களை பள்ளிக்குள் அனுமதித்துள்ளனர். இந்தத் தகவல் தெரிந்ததும் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளியின் முன்பு கூடினர். மாணவர்களின் மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு விவகாரங்களில் பள்ளி நிர்வாகம் தலையிடக் கூடாது. பொட்டு வைப்பதும், கயிறு கட்டுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனக் கூறி கண்டனம் தெரிவித்தனர். மேலும், சிவப்பு நிறக் கயிறுகளை மாணவர்களின் கைகளில் மீண்டும் கட்டி விட்டனர். அரசுப் பள்ளியில் நடந்த இந்த மத விவகாரம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top