பெருந்துறை இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ரேஸில் வரிசைகட்டும் உடன்பிறப்புகள்!
பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளருமான முத்துசாமி, கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் அடிபடும் நிலையில், இன்னும் பலரும் இடைத்தேர்தலில் சீட் பெற வரிசைகட்டி நிற்கின்றனர். இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சி செய்துவரும் நிர்வாகிகள் யார் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்து பார்ப்போம். தொகுதியின் சீனியர் ஒருங்கிணைந்த பெருந்துறை ஒன்றியச் செயலாளராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர் கே.பி.சாமி. 1996-2001 காலக்கட்டத்தில் பெருந்துறை யூனியன் சேர்மன் ஆக இருந்தவர். 2016-ல் பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளராகப் களமிறங்கி 68 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர். 2018-ல் பெருந்துறையில் நடைபெற்ற திமுக மண்டல மாநாடு பணிகளை முன்னின்று செய்து தலைமையின் பாராட்டைப் பெற்றவர். தற்போது திமுக மாநில தேர்தல் பணிக்குழுவின் துணைத்தலைவராக உள்ளார். முத்துசாமியின் தீவிரமான ஆதரவாளரான இவர், பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். பாரம்பரிய கழகக் குடும்பம் பெருந்துறை திமுக நகரச் செயலாளராகவும், தற்போதைய நகர்மன்றத் தலைவராகவும் இருப்பவர் ராஜேந்திரன். இவரது தந்தை விஸ்வநாதன், ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட திமுக துணைச் செயலாளராக 3 முறை பதவி வகித்தவர். பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மற்றும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் ஆதரவுடன் வேட்பாளர் வாய்ப்பைப் பெற முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. முத்துசாமியின் சிபாரிசு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளராக இருப்பவர் சரளை ராசு (எ) கோபால். கட்சியின் தீவிர களப்பணியாளராக அறியப்படும் இவர், இதுவரை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மாவட்டச் செயலாளர் முத்துசாமியின் ஆதரவாளராக இருக்கும் இவர், அவரது பரிந்துரையின் மூலம் பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்கக் காத்திருக்கிறார். தலைமையிடம் விருப்பமனு பெருந்துறை மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் சோளி பிரகாஷ். திருவாச்சி ஊராட்சியின் முன்னாள் தலைவரான இவர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆதரவுடன் வேட்பாளர் வாய்ப்பைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதற்கிடையே, சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து, பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். நற்பணி மன்ற ரூட் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணைத் தலைவராக இருப்பவர் மூங்கில்பாளையம் குணசேகரன். இவர் பெருந்துறை தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகவும் உள்ளார். பெருந்துறை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் உதயநிதி நற்பணி மன்ற கிளைகளைத் தொடங்கியது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது என உதயநிதியின் குட்புக்கில் இடம்பெற்றவர். அந்த ரூட் மூலமாக இடைத்தேர்தல் சீட் பெற முயற்சிக்கிறார். இளைஞரணி அடையாளம் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் விஜயமங்கலம் பாலசுப்பிரமணியம். வழக்கறிஞரான இவர், நீண்டகாலமாகக் கட்சியில் செயல்பட்டு வருபவர். இளைஞரணியைச் சேர்ந்தவர் என்பதால், இளம் நிர்வாகிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் தனக்குச் சாதகமாக அமையும் எனக் கணக்குப் போடுகிறார். ஈரோடு எம்.பி. பிரகாஷ் மற்றும் மாவட்டச் செயலாளர் முத்துசாமி ஆகியோரின் ஆதரவுடன் இடைத்தேர்தல் வேட்பாளர் வாய்ப்பைப் பெற முழு வீச்சில் முயற்சி செய்து வருகிறார். சமூக சேவை பின்னணி பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் லோகேஸ்வரன். காஞ்சிக்கோயிலைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், ‘கங்கா ஃபுட்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். பல்வேறு சமூகநல அமைப்புகளுடன் இணைந்து பொதுநலச் சேவைகள் மற்றும் உதவிகளைச் செய்து வருவதுடன், கட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்தப் பின்னணியுடன், ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆதரவின் மூலம் பெருந்துறை தொகுதி வேட்பாளர் வாய்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தொழிலதிபர் டு அரசியல் பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் SAN செந்தில்குமார். இவரது குடும்பம் தொடக்க காலம் முதலே முத்துசாமியின் ஆதரவாளர்களாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. திமுகவில் தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். விரைவில் நடைபெறவுள்ள திமுக உட்கட்சித் தேர்தலில் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் செயலாளர் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டியிடவும் விருப்பம் கொண்டுள்ள இவர், முத்துசாமி மற்றும் ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆகியோரின் ஆதரவுடன் வேட்பாளர் வாய்ப்பைப் பெற முழு வீச்சில் முயன்று வருகிறார். ஒருபுறம் முன்னாள் அமைச்சர் முத்துசாமி, கூட்டணிக் கட்சியின் கொங்கு ஈஸ்வரன் மற்றும் கே.பி.சாமி என முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர் போட்டியில் இருக்க, மறுபுறம் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் இளம் தலைமுறையினர் பலரும் களத்தில் இறங்கியுள்ளனர். அறிவாலயம் யாரை ‘டிக்’ அடிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
