TW Exclusive, தலைப்புச் செய்திகள்

முத்துசாமி Vs ஈஸ்வரன் – பெருந்துறை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் யார்?

பெருந்துறை தொகுதி காலியாக உள்ளதால் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் யார் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுகவின் எஃகு கோட்டை! பெருந்துறை தொகுதி அதிமுகவின் கோட்டை ஆகும். அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் 1996 தேர்தல் தவிர, மற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2026 தேர்தலிலும் பெருந்துறை தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொண்டது. தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாலும், எடப்பாடி பழனிசாமியின் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் ஆதரவு அதிமுகவுக்குப் பலமாக இருக்கிறது.  இந்நிலையில், ஆளுங்கட்சியான தவெக மற்றும் தொகுதியில் செல்வாக்குடன் இருக்கும் அதிமுகவை வீழ்த்துவது கடினம் என்பதை திமுக தலைமை உணர்ந்துள்ளது. வெற்றி பெறாவிட்டாலும், இரண்டாவது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை தீவிரமாக உள்ளது.  எனவே, புதுமுகத்தை களமிறக்குவதை விட, மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒருவரை நிறுத்தினால்தான் தேர்தலில் டஃப் கொடுக்க முடியும் என அறிவாலயம் தரப்பு யோசிக்கிறதாம்! பெருந்துறையை குறிவைக்கும் முத்துசாமி? முன்னாள் அமைச்சரும், திமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான முத்துசாமி பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. திமுகவின் கட்சி மறுசீரமைப்பில் முத்துசாமியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகிறது. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான முத்துசாமிக்கு தற்போது 78 வயது ஆகிறது. 2031 சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருப்பதைவிட, இந்த இடைத்தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். பெருந்துறையின் அடையாளங்களில் ஒன்றான ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உருவாக்கியது, பெருந்துறை திமுக நிர்வாகிகளின் ஆதரவு, பொதுமக்களிடம் தனக்கிருக்கும் நற்பெயர் ஆகியவற்றின் காரணமாக தான் களமிறங்கினால் வெற்றி பெற்றுவிடலாம் என முத்துசாமி நம்புகிறாராம்.  ‘பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை’ என கட்சி நிர்வாகிகளிடம் சொன்னாலும், தொகுதிக்குள் தீவிரமாக வலம் வருகிறார் முத்துசாமி.  திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகளை ஊத்துக்குளியில் கொட்டுவதற்கு அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் யாரும் அங்கு நேரில் செல்லாத நிலையில் முத்துசாமி மட்டுமே அங்கு சென்றார். அதேபோல், ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளில் 13 இடங்களில் கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. அதில், பெருந்துறை தொகுதியில் மட்டும் 7 இடங்களில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதுமட்டுமின்றி, சமீபத்தில் பெருந்துறை தொகுதியின் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு மட்டும் பல லட்சம் ரூபாய் செலவில் பரிசுப் பொருட்களை வழங்கி கவனித்துள்ளார்.  முத்துசாமியின் இந்த நடவடிக்கைகளைக் கவனித்துவரும் தவெக மற்றும் அதிமுக முகாம்கள், அவர் களமிறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும் என கலக்கத்தில் இருக்கின்றன.  யோசனையில் கொமதேக! திமுக கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்க யோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.  பெருந்துறையில் 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கொமதேக, சுமார் 15 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. மற்ற தொகுதிகளைக் காட்டிலும் பெருந்துறை தொகுதியில் கொமதேக-வின் செல்வாக்கு கணிசமாக உள்ளது.   எனவே, திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரனை களமிறக்கலாம் என கொமதேக தரப்பு தீவிர ஆலோசனையில் உள்ளது. உதயநிதியின் கணக்கு! இதற்கிடையே, தவெகவை சமாளிக்க இளம் நிர்வாகி ஒருவரை இடைத்தேர்தல் வேட்பாளராகக் களமிறக்கலாம் என உதயநிதி ஸ்டாலின் யோசிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், கட்சியில் உள்ள இளம் நிர்வாகிகள் பலரும் வேட்பாளர் ரேஸில் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.  மக்களுக்கு நன்கு பரிச்சயமான முன்னாள் அமைச்சர் முத்துசாமியை திமுக தலைமை களமிறக்குமா? கூட்டணிக் கட்சியான கொமதேகவுக்கு வாய்ப்பளிக்குமா? அல்லது உதயநிதியின் யோசனைப்படி இளம் நிர்வாகி வேட்பாளர் ஆவாரா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம். இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே பெருந்துறையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.