ஒரு கோடியுடன் எஸ்கேப் ஆன இருவர்… போலீசில் சிக்கிய 5 புரோக்கர்கள்! – போலீஸ் ஸ்டேஷன் கதவைப் பூட்டி 7 மணி நேரம் நடந்த ரகசிய விசாரணை!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பவானி ரோடு ராஜேந்திரபிரசாத் வீதியைச் சேர்ந்தவர் அருள்குமார் (55). இவர், காடபாளையத்தில் ‘விநாயகா கார்ஸ்’ என்ற பெயரில் கார் வாங்கி விற்பனை செய்துவருவதோடு, ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்து வருகிறார். இவரின் நண்பர் காஞ்சிக்கோயில் ரோடு தாய் நகரைச் சேர்ந்த சிவராஜ். இருவரும் சேர்ந்து காஞ்சிக்கோயில் ரோடு, ஸ்ரீ மஹால் அருகே சாய்பாபா கோயில் கட்டி வருகின்றனர். அதற்காக ‘ஸ்ரீ சாய்’ என்ற பெயரில் கடந்த வருடம் டிரஸ்ட் ஆரம்பித்து, அந்த டிரஸ்ட் மூலம் கோயில் கட்ட பலரிடமும் நிதி பெற்று வந்துள்ளனர். இவர்களுக்குத் திருப்பூரைச் சேர்ந்த குமாரசாமி, சாய்நாத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ‘ரூ.1 கோடி ரொக்கமாகக் கொடுத்தால், தனக்குத் தெரிந்தவர்கள் மூலம், உங்கள் டிரஸ்ட்டின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1.15 கோடியாக அனுப்பப்படும்’ என்று அவர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பி, இருவரும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து, நேற்று (அக்.28) காலை 11.30 மணியளவில் அவர்கள் கட்டிவரும் கோயிலுக்கு, குமாரசாமி மற்றும் சாய்நாத் ஆகிய இருவரும் இந்த பணப் பரிமாற்றத்திற்கு தங்களுடன் சேர்ந்து தரகராகச் செயல்படுபவர்கள் எனக்கூறி மேலும் 3 பேரை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் மற்றொரு காரில் மேலும் இருவர் வந்துள்ளனர். அந்த இருவரும் தான் பணத்தை மாற்றித் தருபவர்கள் என குமாரசாமி அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது, சாய்பாபா கோயிலை கட்டிவரும் அருள்குமார் மற்றும் சிவராஜ் ஆகிய இருவரும் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை மெஷினை வைத்து எண்ணி ஒரு டிராவல் பேக்கில் போட்டு, அந்த இருவரிடமும் கொடுத்துள்ளனர். அடுத்த சில நொடிகளிலேயே அந்த இருவரும், பணத்தை எடுத்துக்கொண்டு தாங்கள் வந்த காரில் கிளம்ப முயன்றபோது, அருள்குமார் மற்றும் சிவராஜ் காரின்மீது கல்லைத் தூக்கிப்போட்டு தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி அவர்கள் இருவரும் காரில் தப்பிச் சென்றனர். இதையடுத்து குமாரசாமி, சாய்நாத் மற்றும் அவர்களுடன் வந்த 3 பேரையும் பிடித்து அருள்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் பெருந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெருந்துறை காவல் நிலையத்தில் வைத்து ஈரோடு ஏ.டி.எஸ்.பி தலைமையில் பிடிபட்டவர்களிடம் பெருந்துறை டிஎஸ்பி மற்றும் பெருந்துறை இன்ஸ்பெக்டர் ஆகியோர் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் போது, போலீஸ் ஸ்டேஷனின் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மிக ரகசியமான முறையில் விசாரணை நடைபெற்றது. பிடிபட்டவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தப்பிச்சென்ற இவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து, பெருந்துறை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பெருந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
