October 22, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஒன்றாக மது அருந்திய கணவன், மனைவி… ஓவர் போதையில் மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன்!

ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகேயுள்ள காரைவாய்க்கால்புதூரைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் (45) – ராஜேஸ்வரி (40) தம்பதியர். நாகராஜ் தறிப்பட்டறையிலும், ராஜேஸ்வரி பிரிண்டிங் பட்டறையிலும் வேலை செய்து வந்தனர்.  கடந்த அக்.19-ம் தேதி இரவு, நாகராஜும் மனைவி ராஜேஸ்வரியும் வீட்டில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ராஜேஸ்வரி, வீட்டினருகே இருந்த ஆட்டுப்பட்டியில் தூங்கச் சென்றுள்ளார். நாகராஜ் அங்கு சென்றும் தகராறு செய்ய, ராஜேஸ்வரி அவரை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், மனைவி ராஜேஸ்வரியை கீழே தள்ளியும், கட்டையாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி, மயங்கிச் சரிந்துள்ளார். இதன்பிறகு நாகராஜ் வீட்டுக்குச் சென்று தூங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்து வெளியே சென்றுவிட்டு, மதியம் சுமார் 12.30 மணியளவில் வீட்டிற்குத் திரும்பிய நாகராஜ் ஆட்டுப்பட்டிக்குச் சென்று பார்த்தபோது மனைவி அசைவில்லாமல் கிடந்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு பதறிப்போனவர், போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க திட்டம் தீட்டியுள்ளார். அதாவது ராஜேஸ்வரியின் மரணத்தை ஏதோ திடீர் உடல்நலக்குறைவால் ஏற்பட்ட ‘இயற்கை மரணம்’ போலக் காட்டி, அவசர அவசரமாகச் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். நாகராஜின் இந்த அவசர இறுதிச்சடங்கு ஏற்பாடுகளும், ராஜேஸ்வரியின் திடீர் மரணமும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக அக்கம்பக்கத்தினருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே, இதுகுறித்து சித்தோடு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனிடையே கணவர் நாகராஜைப் பிடித்து விசாரித்தனர். அதில், குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்துக் கொன்றதாகவும், போலீசில் சிக்காமல் இருக்க அவசர அவசரமாக இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்ததையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் நாகராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ஈரோடு கலெக்டர் கார் மோதி விவசாயி பலி… நடந்தது என்ன?

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இன்று சத்தியமங்கலத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அரசு சார்பில் தனக்கு கொடுக்கப்பட்ட இன்னோவா காரில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வெள்ளாங்கோயில் பகுதியைச் சேர்ந்த விவசாயி சண்முகம் (48), தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக கோபிசெட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது தனது மின்சார ஸ்கூட்டரில் வீடு திரும்பிய சண்முகம், வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த மாவட்ட ஆட்சியரின் இன்னோவா கார், எதிர்பாராதவிதமாக சண்முகத்தின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சண்முகத்தை, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.  இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாஇ சண்முகம் இன்னும் திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலெக்டரின் கார் மோதிய விபத்தில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Scroll to Top