தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சாமி கும்பிட்டுவிட்டு சங்கிலி பறிப்பு: காதலனின் கடனுக்காக நர்ஸ் போட்ட ‘ஸ்கெட்ச்’! மூதாட்டிக்கு மயக்க ஊசி போட்ட ஜோடி சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள கொளாநல்லியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (65). கூலித்தொழிலாளியான இவர் கடந்த அக்.15-ம் தேதி மாலை தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது நர்ஸ் உடையில் வந்த ஒரு பெண், வீடு வீடாகச் சென்று அரசு சார்பில் மருத்துவப் பரிசோதனை செய்கிறோம் எனச் சொல்லியுள்ளார். அதனை நம்பிய வள்ளியம்மாள் அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண் ரத்த அழுத்தத்தை பரிசோதித்துள்ளார். அப்போது தனக்குக் கால் வலி அதிகமாக இருப்பதாகவும், அதற்கு ஏதாவது மருந்து இருந்தால் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். உடனே அந்தப் பெண், தனது பையில் இருந்த மருந்தை ஊசி மூலம் வள்ளியம்மாளுக்கு செலுத்த, சில நிமிடங்களில் வள்ளியம்மாள் சுயநினைவை இழந்துள்ளார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கணவர் திருமூர்த்தி வீட்டுக்கு வந்ததும் விஷயத்தைச் சொல்ல, அதன்பின் இருவரும் மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து, போலீஸார் வள்ளியம்மாள் வீட்டின் எதிரே இருந்த கோட்டை மாரியம்மன் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தப் பெண் ஆண் ஒருவருடன் காரில் வந்து சென்றது பதிவாகியிருந்தது. கார் பதிவெண் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த நிஷாலினி (24) மற்றும் ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (26) ஆகிய இருவர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒன்றாகப் பணியாற்றியபோது பழக்கமாகி, காதலித்து வந்துள்ளனர். அதன்பின்னர் நிஷாலினி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆகவும், சௌந்தர்ராஜன் மற்றொரு மருத்துவமனையிலும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், செளந்தர்ராஜன் பலரிடமும் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் மனமுடைந்து கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக நிஷாலினியிடம் கூறியுள்ளார். அதன்பிறகு, காதலனின் கடனை அடைக்க நிஷாலினி திருட்டுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டுக் கொடுத்துள்ளார்.  சம்பவத்தன்று சௌந்தர்ராஜன் கோவையில் இருந்து நிஷாலினியைக் காரில் அழைத்துக்கொண்டு கொடுமுடி கோயிலுக்கு வந்துள்ளார். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு, தங்களின் திட்டத்தின்படி தனியாக யாராவது சிக்குவார்களா என காரில் சென்றபடியே நோட்டமிட்டுள்ளனர். அப்போது தான் கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோயில் எதிரேயுள்ள வீட்டில் தனியாக அமர்ந்திருந்த மூதாட்டி வள்ளியம்மாள் இவர்களின் பார்வையில் சிக்கியுள்ளார். தங்களின் திட்டப்படி வள்ளியம்மாளிடம் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டவர்கள், சிசிடிவி இருந்ததைக் கவனிக்க மறந்ததால் போலீசிடம் சிக்கி கம்பி எண்ணுகின்றனர்.