ஸ்விஃப்ட் காரில் வாழைத்தார் திருட்டு – சிக்கிய காய்கறி வியாபாரி!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள கொண்டமுத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரபாகரன் (வயது 40). இவர் தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். சமீபத்தில் இவரது தோட்டத்திற்கு அருகேயுள்ள கருப்புசாமி மற்றும் பொன்னுச்சாமி ஆகியோரது தோட்டத்தில் வாழைத்தார்கள் திருடு போயின. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பிரபாகரனும், அவரது தந்தை செளந்தரராஜனும் தினமும் இரவு நேரங்களில் தங்களுடைய தோட்டத்தில் காவலுக்கு இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை (செப். 27) சுமார் 4.30 மணியளவில் தோட்டத்தில் சத்தம் கேட்கவே, அங்கு சென்று பார்த்தபோது, மர்ம ஆசாமி ஒருவர் வாழத்தார்களை வெட்டி சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்த ஸ்விஃப்ட் காரில் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்த பிரபாகரன் மற்றும் அவரது தந்தை, பக்கத்து தோட்டத்து விவசாயிகள் உதவியுடன் வாழைத்தாரை காரில் ஏற்றிக் கொண்டிருந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து, சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வாழைத்தாரை திருடியவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 31) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவிநாசியில் காய்கறிக் கடை வைத்துள்ள வேல்முருகன், தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சமீப நாட்களில் இரவு நேரத்தில் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு தோட்டங்களில் நோட்டமிட்டு, வாழைத்தார்களை திருடி வந்ததுடன், அவற்றை தன்னுடைய கடையில் வைத்து வியாபாரமும் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து, வேல்முருகன் திருடிய ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள 16 வாழைத்தார்கள், திருட்டிற்குப் பயன்படுத்திய ஸ்விஃப்ட் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
