தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கழுத்து எலும்பை உடைத்து கொலை… போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் வெளிவந்த உண்மை! – டிராவல்ஸ் உரிமையாளருக்கு நடந்தது என்ன? 

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகேயுள்ள தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் கடந்த செப்.23 ஆம் தேதி ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துகிடந்தவர் குறித்த தகவல் எதுவும் இல்லாததால், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், உயிரிழந்தவரின் ஃபோட்டோவை போலீசாரின் வாட்ஸ்அப் குரூப்களில் பகிர்ந்து, அவர் யாரென அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ரமாபிரபா (வயது 48) என்ற பெண்மணி தனது உறவினர்களுடன் பவானிசாகர் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். ‘செப்.22 ஆம் தேதி இரவு, சத்தியமங்கலத்திற்கு வாடகைக்கு செல்வதாக ஸ்விப்ட் டிசையர் காரில் கிளம்பிய என்னுடைய கணவர் ஜெயச்சந்திரன் (வயது 50) வீடு திரும்பவில்லை. அவருக்கு ஃபோன் செய்தாலும் போகவில்லை. அதையடுத்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் நான் புகார் கொடுக்கச் சென்றபோது, வாய்க்காலில் கிடைத்த சடலத்தின் ஃபோட்டோவை செல்ஃபோனில் காட்டினார்கள். அது எனது கணவர் ஜெயச்சந்திரன் தான் என்பது தெரியவந்தது’ என பவானிசாகர் போலீசாரிடம் கூறியுள்ளார்.  அதன்பிறகு தான் வாய்க்காலில் சடலமாகக் கிடந்தது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50) என்பதும், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த அவர்  சத்தியமங்கலத்துக்கு வாடகைக்கு வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், ஜெயச்சந்திரனின் உடல் கிடந்த இடத்தில் அவர் ஓட்டிவந்த கார் இல்லாததும், செல்போன், பர்ஸ் ஆகியவையும் காணாமல் போனது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்த போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில், ஜெயச்சந்திரனின் கழுத்து எலும்பு உடைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் இயற்கையாக உயிரிழக்கவில்லை, கழுத்தை நெரித்தோ அல்லது பலமாகத் தாக்கப்பட்டோ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போலீசார் சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றினர். சத்தியமங்கலம் டி.எஸ்.பி முத்தரசன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஜெயச்சந்திரனின் செல்ஃபோன் ஹிஸ்டரி மற்றும் டவர் லொகேஷனை வைத்து அவரை மதுரையிலிருந்து சத்தியமங்கலத்திற்கு வாடகைக்கு அழைத்து வந்தது யார்? அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? வாடகைக்கு வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமா? அல்லது காரை திருடுவதற்காக வாடகைக்கு அழைத்துவந்து திட்டமிட்டுக் கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.