‘ரெட் லைட்’ ஏரியாவில் ரகசிய வாழ்க்கை..! – 5 வருடங்களுக்குப் பின் சேலம் ‘சூட்கேஸ்’ கொலையாளி சிக்கியது எப்படி?
சேலம் நகரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய சூட்கேஸ் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய பெண் குற்றவாளியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அந்தப் பெண், தனிப்படை போலீசாரிடம் சிக்கிய பின்னணி சினிமாவை விஞ்சுவதாக உள்ளது. 2021ஆம் ஆண்டு அக்., 15ஆம் தேதி, சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிலுள்ள ஒரு ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வருவது தெரிந்தது. அதை திறந்து பார்த்த போது கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் ஒரு அழுகிய பெண் சடலம் இருந்தது போலீசாரை அதிரவைத்தது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் வங்கதேசத்தைச் சேர்ந்த தேஜ் மண்டல் (வயது 27) என்பதும், பெங்களூரூவிலிருந்து சேலம் வந்து பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா நடத்தி வந்ததும் தெரியவந்தது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அஸ்தம்பட்டி போலீசார், தேஜ் மண்டலின் ஸ்பாவில் பணியாற்றி வந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், நிஷிரஃபி ஷேக், அவரது கணவர் லப்லு, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய நான்கு பேர் இணைந்து இக்கொடூரத்தைச் செய்துவிட்டு தலைமறைவானது அம்பலமானது. ஸ்பா என்ற பெயரில் பலான தொழில் செய்து லட்சங்களை குவிந்த வந்த தேஜ் மண்டல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை தராமல் ஏமாற்றிய ஆத்திரத்தில், தேஜ் மண்டலின் கழுத்தை இறுக்கிக் கொன்று, அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இந்தக் கும்பல் கொலை சம்பவத்திற்குப் பிறகு தங்களின் சொந்த நாடான வங்கதேசத்திற்குத் தப்பியோடியது. ஆனாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதனிடையே, வங்கதேசத்தில் சில காலம் பதுங்கியிருந்த நிஷிரஃபி ஷேக் (வயது 28), போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மீண்டும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தஞ்சமடைந்த அவர், அங்குள்ள ‘ரெட் லைட்’ ஏரியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு நபரிடம் பழக்கம் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் புதிய வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். கொலையாளிகள் பயன்படுத்தி வந்த போலி ஆதார் கார்டை எண்ணை, போலீசார் ‘டிரேஸ்’ செய்துவந்தனர். இந்தச் சூழலில், நிஷிரஃபி ஷேக் புனேவில் புதிய அடையாளத்துடன் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் சேலம் போலீசாருக்குக் கிடைத்தது. அதையடுத்து சேலம் மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சேலம் தனிப்படைப் போலீசார் மகாராஷ்டிரா சென்று, புனே போலீசாரின் உதவியுடன் வீட்டிலிருந்த நிஷிரஃபி ஷேக்கை அதிரடியாகக் கைது செய்து சேலத்திற்குக் கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான நிஷிரஃபி ஷேக் சிக்கியுள்ள நிலையில், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள அவரது முதல் கணவர் உள்ளிட்ட எஞ்சிய மூன்று கொலையாளிகளையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
