எவ்வளவு ‘ஸ்பீடு’ போகுதுன்னு பாக்கலாம்… விபரீத விளையாட்டால் அப்பளமாய் நொறுங்கிய ரூ.2 கோடி சொகுசு கார்!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கிஷோர். அப்பகுதியைச் சேர்ந்த பிரபல சேமியா நிறுவன உரிமையாளரின் மகன் எனச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புத்தம் புதிய BMW M4 COMPETITON காரை வாங்கியுள்ளார். தனது நண்பரான விஸ்வக் சக்கரவர்த்தி என்பவரிடம் புது காரை காண்பிப்பதற்காக திருப்பூருக்கு வந்துள்ளார். கிஷோர் விஸ்வக் சக்கரவர்த்தியை தனது புதிய BMW காரில் ஏற்றிக்கொண்டு, திருப்பூர் தாராபுரம் ரோட்டில் சென்றுள்ளார். அப்போது புது கார் எவ்வளவு ஸ்பீட் போகிறது என்பதை பரிசோதிப்பதற்காக, மிக அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்றதாகக் கூறப்படுகிறது. குண்டடம் அடுத்த வேங்கிபாளையம் அருகே முன்னே சென்ற ஈச்சர் சரக்கு வேனை முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேனின் பின்புறத்தில் மோதி கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் வட்டமடித்து சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு, எதிர்ப்புற சாலையில் பாய்ந்து சென்று நின்றது. கார் மிக அதிவேகத்தில் வந்ததால், விபத்தின்போது சுமார் 100 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது. மேலும் அதன் பின்புற டயர் கழன்று சுமார் 200 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இதில், காரை ஓட்டிவந்த கிஷோர் லேசான காயங்களுடன் தப்பிக்க, விஸ்வக் சக்கரவர்த்தி பலத்த காயமடைந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிவேகமே இந்த விபத்துக்கு முதன்மை காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள விஸ்வக் சக்கரவர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது
