காருக்குள் ‘ரொமான்ஸ்’; சிக்கிய காதல் ஜோடி! – காங்கேயம் கோயிலில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. நேற்று (12.09.2026) மதியம் 12 மணியளவில் கோயிலின் மேல் பகுதிக்கு வந்த ஒரு ஃபோர்டு கார், ஒதுக்குப்புறமான இடத்தில் நின்றது. 2 மணி நேரத்திற்கு மேலாகியும் காரிலிருந்து யாரும் கீழே இறங்கவில்லை. அதேசமயம், காரின் இன்ஜின் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த கோயில் ஊழியர்கள், காரின் அருகே சென்று பார்த்தபோது உள்ளே இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் பேசிக்கொண்டு (!) இருந்துள்ளனர். கோயில் ஊழியர்களைப் பார்த்தவுடன், காரில் இருந்த இளைஞர், காரை திடீரென்று வேகமாக இயக்கி ஊழியர்கள் மீது மோதுவது போல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோயில் ஊழியர்கள் அடிவாரத்தில் இருந்த ஊழியர்களுக்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். மலை மீதிருந்து அடிவாரத்தை நோக்கி வேகமாக காரை ஓட்டிச்சென்ற இளைஞர் பதற்றத்தில், அடிவார நுழைவு வாயில் அருகே சென்றபோது, அங்கிருந்த தடுப்பில் மோதியுள்ளார். அதையடுத்து அடிவாரத்தில் இருந்த கோவில் பணியாளர்கள் காரைச் சுற்றிவளைத்து, காரில் இருந்த இளம் ஜோடியிடம் விசாரித்தினர். அதில், காரில் இருந்த இளைஞர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், கேரள மாநிலம் திருச்சூரில் வேலை செய்து வருவதும், அவருடன் இருந்த இளம்பெண் காங்கேயத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. இருவரும் சமூக வலைத்தளம் மூலமாக பழகி, காதலர்களாக மாறியதும், காதலியைச் சந்திக்க அவர் கேரளாவில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இனிமேல் கோவில் வளாகத்தில் இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

