தலைப்புச் செய்திகள், மாவட்டம்

கைதிக்கு ‘டார்ச்சர்’, போலீஸூக்கு ‘டிரான்ஸ்பர்’! – தாளவாடி போலீஸ் விவகாரத்தில் எஸ்.பி அதிரடி

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகேயுள்ள திகினாரை பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாது (எ) மகாதேவா (வயது 19). இவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. புகார் ஒன்றின் அடிப்படையில் விசாரணைக்காக இளைஞர் மாதுவை தாளவாடி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசாரின் ஓய்வு அறையில் மாதுவின் கைகளை சங்கிலியால் கட்டிப் போட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.  திருட்டு வழக்கு ஒன்றில் மாது கைது செய்யப்பட்ட நிலையில், அவர் செய்யாத மற்றொரு திருட்டு சம்பவத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் இளைஞர் மாது கதறியபோதிலும், காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். இந்தச் சம்பவம் முழுவதையும் ரகசியமாகப் படம் பிடித்த யாரோ இணையத்தில் வெளியிட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. காவல் நிலையத்திற்குள்ளேயே மனித உரிமைகளை மீறும் வகையில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதனையடுத்து, ‘வீடியோவில் இடம்பெற்றுள்ள மாது (எ) மகாதேவா மீது, தாளவாடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அவர் கடந்த 20.09.2024 அன்று குற்ற வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், இந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது அல்ல’ என ஈரோடு மாவட்ட காவல்துறை தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.  ‘செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி, போலீசார் தாக்கியது காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த சம்பவம் 2024ஆம் ஆண்டு நடந்தபோதிலும், இந்த விவகாரத்தை மூடி மறைக்காமல் காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என விமர்சனங்கள் கிளம்பின. விவகாரம் பெரிதாகவே, ஈரோடு மாவட்ட எஸ்.பி கிரண் ஸ்ருதி  இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், இளைஞர் மாதுவை சங்கிலியால் கட்டிப்போட்டு தாக்கியது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாதுவை தாக்கிய தாளவாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மார்ட்டின் லூதர் மற்றும் தலைமைக் காவலர் தனபால் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். வெறும் ஆயுதப்படை மாற்றத்துடன் இந்த விவகாரத்தை முடித்துவிடாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது முறையான வழக்குப் பதிவு செய்து, துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.