மாவட்டம், விளையாட்டுச் செய்திகள்

காட்டுக்குள் நிர்வாணமாகக் கிடந்த நர்ஸ்… காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்! 

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (27), தனது அத்தை மகளான உத்திரா (26) என்பவரை, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்தார். இருவரும் திருப்பூர் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரஞ்சித்குமார் கட்டிட வேலை செய்து வர, உத்திரா கடந்த 15 நாட்களாக பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள பி.எம் மருத்துவமனையில் நர்ஸ் ஆகப் பணிபுரிந்து வந்தார்.  தினமும் காலையில் ரஞ்சித்குமார் வேலைக்கு செல்லும்போது, மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு, மாலை வரும்போது அழைத்து வருவது வழக்கம். அதன்படி, கடந்த அக்.14-ஆம் தேதி மாலை மனைவியை அழைத்துவர ரஞ்சித்குமார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், ‘உத்திரா மாலை 7 மணிக்கே வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டார்’ என மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.  மனைவி வீட்டிற்கும் வராமல் மாயமானதால் அதிர்ச்சியடைந்தவர், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மறுநாள் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான உத்திராவைத் தேடி வந்தனர்.  இந்நிலையில், பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகில், பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் உள்ள காட்டில் ஒரு இளம்பெண்ணில் நிர்வாண சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாகப் பெருந்துறை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தின் அருகே கிடந்த உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை அடையாளமாகக் கொண்டு விசாரித்ததில், அது காணாமல் போன நர்ஸ் உத்திரா என்பது உறுதியானது.  இதையடுத்து, உத்திராவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 7 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  உத்திரா வீட்டுக்கு செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்தால் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.